Published : 25 Jun 2015 12:51 PM
Last Updated : 25 Jun 2015 12:51 PM
சிவபெருமானைத் தமது தலைவனாகக் கொண்டு சிவத்தொண்டுகளும் சிவாலயத் திருப்பணிகளும் செய்து சிவத்தைத் தன்வயமாக்கிக்கொண்டவர் தான் ‘வேளச்சேரி மகான்’ என்று அழைக்கப்படுகிற ‘சிதம்பர பெரிய சுவாமிகள்’.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் ஆரியம்பாக்கம் என்ற ஊரில் மிகப்பெரும் செல்வந்தரின் மகனாக அவதரித்த சிதம்பர பெரிய சுவாமி, சிறு வயதிலேயே துறவறம் நாடித் தமது இல்லத்திலிருந்து வெளியேறினார். சிவத்தொண்டுகள் செய்வதில் பெரும் விருப்பம் கொண்டு பல சிவாலயங்களுக்குச் சென்றார்.
திருமுதுகுன்றம் குமாரதேவருக்குப் பெரியநாயகி அம்மையே தம் அபிஷேகப் பாலைக் கொண்டுவந்து புகட்டினார். அப்படியான பெருமை பெற்ற குமார தேவரின் சீடர்களின் வழிவந்த குழந்தைவேலர் என்ற மகானிடம், தீட்சை பெற்ற சிதம்பர பெரிய சுவாமிகள் பெரும் ஞானியாக வாழ்ந்தார்.
பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்
சிவனன்றி வேறு தெய்வம் இல்லை என்று ஒழுகிவந்த சிதம்பர பெரிய சுவாமி பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர். அவரது பாடல்களுக்கு ‘உபதேச உண்மை’ என்று அவரே பெயரிட்டுத் தொகுத்துள்ளார். அந்தப் பாடல்கள், பதிணென் சித்தர்களின் பாடல்களைப் போன்றே பல மறைபொருள்கள் வைத்துப் பாடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பர பெரிய சுவாமிகள் சுமார் 1840-41-ல் சென்னையில் உள்ள வேளச்சேரிக்கு வந்தார். அங்குள்ள தண்டீஸ்வரர் கோயிலைத் தரிசித்தார்.
சிதம்பர பெரிய சுவாமிகள் தண்டீசுவரர் ஆலயத்திற்கு வந்தபோது, அந்த ஆலயம் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இருந்தது. சிவாலயத்தின் நிலை கண்டு வருத்தத்துடன் அங்கேயுள்ள எமதீர்த்தத்தில் நீராடிவிட்டு வெளியே வந்தபோது, பழுத்த மூதாட்டி ஒருவர் எதிரில் வந்து, தண்டீசுவரர் ஆலயத்தின் குடமுழுக்கை நீ தான் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். அன்று இரவு அவரது கனவில் கருணாம்பிகைத் தாயார் தோன்றி, மூதாட்டியாக வந்தது தான்தான் என்றார்.
பின்னர் ஊர் மக்களின் உதவியுடன் திருப்பணிகளைத் துவங்கினார். தினமும் கூலியாட்களுக்குக் கூலியாகத் திருநீற்றைக் கொடுப்பாராம். அது தங்கக் காசாக மாறிவிடுமாம் .
இப்படி மூன்றே மாதங்களில் திருப்பணிகளை முடித்து கும்பாபி ஷேகமும், பிரம்மோத்சவமும், தேர்திருவிழாவும் நடத்திவைத்தார். அதன்பிறகு ஆலயத்திலேயே தங்கிக்கொண்டு யாசகம் பெற்று உணவு உண்டு வந்தார்.
நவாப்பின் நோயைத் தீர்த்தார்
ஒரு சமயம், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நவாப் ஒருவர், சுவாமிகளின் மகிமையைக் கேள்விப்பட்டு அவரை வந்து சந்தித்தார். சுவாமிகள் அவரது வயிற்றில் திருநீறு பூசிசிவிட்டுச் சிறிது வாயிலும் போட்டதும் வயிற்று வலி நின்று விட்டது. இதனால் மகிழ்ந்த திவான், தற்போது சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கும் இடத்தைத் தானமாகக் கொடுத்தார்.
சுவாமிகள் தாம் ஜீவ சமாதியடையப் போகும் நாளை அறிவித்து சமாதிக் குழியையும் தயார் செய்தார். 1858-ம் ஆண்டு டிசம்பர் நான்காம் நாள், கார்த்திகை மாதம் பதினாறாம் தேதி, சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு விசாக நட்சத்திரத்தில் நவாப், அரசாங்க மருத்துவர்கள், காவலர்கள் சுற்றியிருக்க சமாதிக் குழிக்குள் சென்று அமர்ந்தார். உடனே தமது மூச்சையும் நாடியையும் நிறுத்தினார். அரசாங்க மருத்துவரின் சோதனைக்குப் பிறகு சமாதி மூடப்பட்டது.
சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கும் ஆலயத்தினுள் பஞ்சமுக லிங்கம், பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சனேயர், குமாரசுவாமி, குபேரப் பெருமாள், மகாமேருவுடன் காமாட்சியம்மாள் ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி பதிணென் சித்தர்களின் சொரூபங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சிதம்பர பெரிய சுவாமிகளின் ஆலயத்தைத் தரிசிக்க
வேளச்சேரி மெயின் ரோட்டில், காந்தி சாலை திருப்பத்திற்கு அருகில் சிதம்பர பெரிய சாமி ஆலயம் உள்ளது. வேளச்சேரிக்குச் செல்லும் டவுன் பஸ்சில் ஏறி, தண்டீஸ்வரர் ஆலயம் பேருந்து நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT