Published : 18 Jun 2015 12:46 PM
Last Updated : 18 Jun 2015 12:46 PM

வார ராசிபலன் 18-06-2015 முதல் 24-06-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 8-ல் புதனும் சஞ்சரிப்பதால் மனோபலம் கூடும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தியானம், யோகாவில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான பாதை புலப்படும். செய்து வரும் தொழிலில் முழுக்கவனம் செலுத்தினால் சீரான வளர்ச்சியைக் காணலாம். அலட்சியப் போக்கு கூடாது. கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

நல்லவர்களின் தொடர்பு நலம் கூட்டும். நல்லவர் அல்லாதவர்களுடன் தொடர்பு அடியோடு கூடாது. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். பணப் புழக்கம் சற்று அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணம் சம்பந்தப்பட்ட துறைகளில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.

திசைகள்: வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7.

பரிகாரம்: துர்கைக்கோ, காளிக்கோ நெய்விளக்கேற்றி வழிபடவும். துர்கா கவசம் படிக்கவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய், 8-ல் சூரியனுடன் கூடியிருப்பது சிறப்பாகாது. புதன், சனி, கேதுவின் சஞ்சாரமும் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். தந்தை, உடன்பிறந்தவர்கள், அரசாங்கத்தினரால் சங்கடங்கள் சூழும். மனதில் ஏதேனும் குழப்பம் உண்டாகும். வருமானம் குறையும். தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

என்றாலும் குரு, சுக்கிரன், ராகுவின் அனுகூலமனா சஞ்சாரத்தால் பிரச்சினைகளை எதிர்கொள்வீர் கள். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடன் வர்த்தகம் செய்பவர் களுக்கு வருவாய் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களின் நிலை உயரும். ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வாரப்பின்பகுதியில் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 23.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், வான் நீலம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்:

சூரியன், செவ்வாய்க்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு புதனும், 8-ல் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். பொருள்வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சாற்றலால் மற்றவர்களைக் கவருவீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.

வெளியூர், வெளிநாட்டுத் தொடர் புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். சனி 11-ல் இருப்பதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். 4-ல் கேதுவும், 7-ல் சூரியன், செவ்வாயும், 8-ல் குருவும் இருப்பதால் நண்பர்கள், உறவினர்கள், தொழில் கூட்டாளிகளால் சில இடர்பாடுகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம். பச்சை, வெண்மை.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்:

நவக்கிரகங்களில் குருவையும் குருவுக்கு அதிதேவதையான தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும் செவ்வாயும், 7-ல் குருவும், 10-ல் சனியும் உலவுவதால் எதிர்ப்புகளை வென்று வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப காரியங்கள் நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் தெளிவு பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் செழிப்புக் கூடும். தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் நிலை உயரப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் முன்னேற்றம் காணலாம். வாரப் பின்பகுதியில் வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 21 (முற்பகல்).

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம்.



எண்கள்: 1, 3, 7, 8, 9.

பரிகாரம்: மகாலட்சுமி, பராசக்தியை வழிபடுவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதன் உலவுவது சிறப்பு. இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேஷமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாமல் போகும். தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகளால் அமைதி குறையும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. பொருளாதாரப் பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கையுடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம். பெண்களால் அவமானப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது அவசியம். ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலமுள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் சங்கடங்கள் பெருமளவுக்குக் குறையும். ஜாதக பலமும் இல்லாத வர்களுக்குச் சோதனைகள் கூடவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.

திசை: வடக்கு.

நிறங்கள்: பச்சை.

எண்: 5.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு அவசியம். கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், சுக்கிரனும் உலவுவது விசேஷமாகும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். மந்திர உபதேசம் கிடைக்கும். மன மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். அலைச்சல் வீண்போகாது. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகளுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.

கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வியாபாரிகள், தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், விவசாயிகள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவந்தால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் செலவுகளும் சங்கடங்களும் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்:

ராகு, கேது, புதன், சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம். சூரிய நமஸ்காரம் செய்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x