Published : 04 Jun 2015 12:26 PM
Last Updated : 04 Jun 2015 12:26 PM
நான்கு வேதங்கள்; வேதங்களின் ஆறு அங்கங்கள்; அதோடு, மீமாம்சை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் என்ற நாலு வேதத்தைப் பற்றியும் ஆறு அங்கங்களைப் பற்றியும் reference-ஆவது கேட்டிருப்பீர்கள்.
“வேதமோ டாறங்க மாயினானை”
என்று தேவாரம் சொல்லுகிறது. நாலு வேதமும், ஆறு அங்கமுமான இந்தப் பத்தும் ஈச்வர ஸ்வரூபம் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவை போக பாக்கி நான்கு, மீமாம்சை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம்.
‘சதுர்தசம்' என்றால் பதினான்கு. சதுர் - நான்கு; தசம் - பத்து, ஆகவே பதினான்கு தர்மப் பிரமாணங்களை “சதுர்தச வித்யா” என்பார்கள். இந்தச் சதுர்தச வித்தைகளை நளன் கற்றுக்கொண்டான் என்று நள சரித்திரமாகிய நைஷதத்தில் சொல்லி இருக்கிறது.
அங்கே சிலேடையாக அந்த விஷயம் சொல்லப்படுகிறது. “நளன் சதுர்தச வித்தைகளுக்குச் சதுர்தசையைக் கொடுத்தான்” என்று வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார் கவி.
சதுர் - தசமான இந்தப் பதினான்கு வித்தைகளுக்கும் நான்கு தசைகளை, சதுர் தசைகளைக் கொடுத்தானாம். அந்த நான்கு தசைகள்: படிப்பது, படித்ததைப் புரிந்துகொள்வது, படித்ததன்படி நடப்பது, மற்றவர்களை நடக்கச் செய்வது என்பவை.
சதுர்தசத்வம் க்ருதவான் குத: ஸ்வயம்
ந வேத்மி வித்யாஸு சதுர்தசஸ்வபி||
(நைஷத காவ்யம், I)
இந்தப் பதினான்கு வித்தைகளிலே அறிவு அடங்கி இருக்கிறது.
இன்னும் நான்கு வித்தைகள் இருக்கின்றன. அவைகளையும் சேர்த்துக்கொண்டால் பதினெட்டாகும். அஷ்டாதசம் என்றால் பதினெட்டு. இந்த அஷ்டாதச வித்தைகளில் அடங்காதது ஒன்றுமேயில்லை. லோகத்திலுள்ள சகல வித்தைகளும் அவைகளுக்குள்ளே அடங்கிவிடும்.
இந்தப் பதினெட்டில் நேராக தர்மத்தைச் சொல்லுபவை முன்பு சொன்ன பதினான்குதான். மீதமுள்ள ஆயுர்வேதம், அர்த்த சாஸ்திரம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் ஆகிய நான்கும் நேராக தர்மத்தைச் சொல்வன அல்ல. ஆயினும் அவையும் அறிவு தருவதால் வித்யா ஸ்தானங்களாக மட்டும் உள்ளன. மேலே சொன்ன பதினாலோ தர்ம ஸ்தானம், வித்யா ஸ்தானம் இரண்டாகவும் இருப்பவை.
ஆத்ம லோகத்தில் இன்பத்தை அடைவதற்கு ஏற்பட்ட சாதனங்கள் இவை. தர்ம ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்பதோடு இவற்றை எல்லாம் பொதுவில் “சாஸ்திரம்” என்கிறோம். சாஸ்திரம் என்பதற்கு அர்த்தம் ‘கட்டளையாக இடப்பட்டிருப்பது' என்பது.
ராஜாங்க சாசனம் என்கிறபோது, சாசனம் என்றால் கட்டளை என்று அர்த்தம். தர்மபுத்திரருக்கு பீஷ்மர் தர்மக் கட்டளைகளையெல்லாம் எடுத்துச் சொல்கிற பர்வத்துக்கு மஹாபாரதத்தில், ‘அநுசாசன பர்வா' என்றே பெயர்.
ஐயனார் என்பவரை சாஸ்தா என்று சொல்வது, அவர் உத்தரவு போட்டுப் பரமேச்வரனின் பூதகணங்களை எல்லாம் அடக்கி வைத்துக்கொண்டிருப்பதாலேயே. நம்மை ஒரு கட்டுப்பாட்டில், நெறியில் கொண்டுவந்து அடக்கி வைக்கிற கட்டளைப் புத்தகங்களே சாஸ்திரங்கள் எனப்படுபவை.
இந்தப் பதினாலும் நமக்கு ஆதார நூல்கள் என்றாலும், இவற்றில் வேதம்தான் தலைமையானது. நாலு வேதத்தை மையமாகக் கொண்டு மற்ற பத்து வித்யைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சதுர்தச வித்யைகளுமே பூர்ணமாக நம் மதத்துக்கு சாஸ்திரங்களாகின்றன.
விநயமும் சிரத்தையும்
அடக்கம் என்பது விநயம். நம்பிக்கை என்பது சிரத்தை. இந்த இரண்டுமே நமக்கு இரண்டு கண் மாதிரி. குரு என்றால் வழி காட்டுபவர், அந்த வழியில் போகணுமென்று திரும்பத் திரும்பப் பார்த்தோமோல்லியோ? கண் இருந்தால்தானே ஒரு வழியில் போக முடியும்? அப்படி நமக்கு இரண்டு கண்களாக இருப்பவை விநயமும் சிரத்தையுந்தான்.
இந்த இரண்டில் ஒன்று இருந்தாலே மற்றதும் தன்னால் வந்துவிடும். ஒன்றிடம் நாம் அடங்கிக் கிடக்கிறோமென்றாலே அதுதான் நமக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில்தானே அப்படிக் கிடக்கிறோம்? அதே மாதிரி, ஒன்றிடம் நாம் அதுவே பரம பிரயோஜனம் தருமென்றால் திட நம்பிக்கை வைக்கிறோமென்றால் அந்த பிரயோஜனத்தைப் பெற அதனிடம் அடங்கிக் கிடக்கத்தானே செய்வோம்?
கீதையில் பகவான் விநயத்தையும் சொல்லியிருக்கிறார், சிரத்தையையும் சொல்லியிருக்கிறார். முதலில் 'ப்ரணிபாதம்' என்கிற நமஸ்காரம், 'பரிப்ரச்னம்' என்பதாக நன்றாகக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது, 'சேவை' என்பவற்றை சிஷ்ய லக்ஷணமாகச் சொன்னார்.
சேவைதான் குருவுக்குச் செய்கிற தொண்டு, பல விதமான பணிவிடைகள். அதுவும் வித்யையை சுவீகரிப்பதற்கு ஜீவாதாரமான அம்சங்களில் ஒன்று. அப்புறம் “ச்ரத்தாவான் லபதே ஜ்ஞானம்” 'சிரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான் என்றும் சொல்லியிருக்கிறார். முதலில் சொன்ன ப்ரணிபாத -பரிப்ரச்ன - சேவைகள் விநயத்தின் கீழ் வருகிறவையே. ப்ரணிபாதமும், அதாவது நமஸ்காரமும், சேவையும் விநயத்தைக் காட்டுபவை.
தெய்வத்தின் குரல்
(இரண்டாம் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT