Published : 25 Jun 2015 12:59 PM
Last Updated : 25 Jun 2015 12:59 PM

தத்துவ விசாரம்: மனம் இறத்தல்

உண்மையை உணர்வதற்கு மனமற்ற பரிசுத்த நிலை கோரப்படுகிறது. மனத்தின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் உண்மையை உணர்வது இயலாது என்பது நம் ஞானச் சான்றோர்களின் கூற்றாகும். நடைப் பயிற்சியைப் போல யோகச் செயல்முறைகளும் உடம்பை ஓம்புவதற்கே.

ஆனால் உண்மையை உணர்வதற்கு ‘மனமிறத்தல்’ அவசியமாகிறது. “சிந்தை இறப்போ நின்தியானம்” என்பார் தாயுமானவர். “திரையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்குப் புரையற்றிருப்பான் எங்கள் புரிசடையோனே” என்பார் திருமூலர்.

“மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” என்பார் அருணகிரியார். இவ்வாறு இவர்கள் கூறுவதற்குக் காரணம் மனமானது நினைவுகள், அனுபவம், அறிவு இவற்றின் மொத்த உருவான நான், எனது என்னும் செருக்குகளுக்கு இடமாக இருப்பதே.

மனம் ஆடி ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசையற்று எப்போது வீழும்? ‘வேகம் தடுத்தாண்ட வேந்தனடியை’ எப்போது உணரும்? எல்லாவற்றிற்கும் ஆதாரமான நிராசை என்றொரு பூமியை எப்போது தெளியும்? தேடிக் காண முடியாத தேவனைத் தன்னுள்ளே தெளிந்து கண்டுகொள்ள என்ன செய்ய வேண்டும்?

இதற்கு ஒரே வழி, மனதின் செயல்பாடுகளை ஒவ்வொரு நொடியும் உற்றுப் பார்ப்பதே ஆகும். ‘உற்றுப்பார், மோனன் ஒரு சொல்லைப் பற்றிப்பார்’ என்பார் தாயுமானவர்.

மனதைத் தெளியவைக்க இதுதான் வழி. அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் நிலத்தை அடைவதற்கு அந்நிலம் சில கோரிக்கைகளை நம் முன்னர் வைக்கிறது என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

“முற்றிலும் மனம் அமைதி அடைய வேண்டியது அவசியம். முற்றிலும் மனம் யாதுமற இருத்தல் வேண்டும். இதற்குப் பொருள் என்னவெனில் எவ்வகையிலும் எவ்வடிவிலும் ‘நான்’ என்னும் அகந்தை விளங்காது இருத்தல் வேண்டும்” என்பதே. இதைத்தான் வள்ளுவர் மனத்துக்கண் மாசிலாது வாழ்தல் என்கிறார். மனம் திரையற்ற நீர்போலத் தெளியும்போது, சிந்தையினுள்ளே சிவனும் வெளிப்படும் என்பதே உண்மை. அப்போதும் மனம் இயங்கும்; அறிவு செயல்படும். ஆனால் அது செயல்பாட்டிற்கு மட்டுமே.

சத்தியத்தை, மூதறிவை, தரிசிப்பதற்கு மனதின் மாசுகள் களையப்பட்டு மனம் யாதுமற்று இன்றியமையாததாகும். இதற்கு ஒரே சாதனம் நாம் நமக்குள்ளே பயணிப்பதுதான். காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் இவை மூன்றும் ஒன்று என்ற தெளிவுதான்.

இத்தெளிவில் மனமற்ற பரிசுத்த நிலை வாய்க்கும். அந்நிலையில் சத்தியச் சுடரொளி நித்தியமாய் நம்முள் ஒளிர்வதை உணர முடியும். மனம் இறக்கக் கற்றல் மூலம் மனம் கடந்த வாய்மையை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்தலே வாழ்வின் நோக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x