Published : 21 Jun 2015 01:02 PM
Last Updated : 21 Jun 2015 01:02 PM

யோகா என்னும் உலகம் - 7

இன்று...உலக யோகா தினம்!

எளிய யோகா.. நமஸ்காரம்!

அலுவலகமோ, வீடோ, பொது இடமோ.. எங்கு ஒருவரைப் பார்த்தாலும் அந்தக் கணமே, ‘இந்த மனிதரிடம் இது பரவாயில்லை, அது சரியில்லை. இவர் நல்லவர், இவர் கெட்டவர். இவர் அழகு, இவர் அசிங்கம்..’ என்றெல்லாம் உங்கள் மனம் பலவாறாக முடிவெடுத்துவிடும். இது மனித மனத்தின் குணம். இதை நீங்கள் விழிப்புணர்வோடு யோசிக்கவேண்டும் என்றுகூட இல்லை.

ஒரு நொடியில் இந்த மதிப்பீடுகள், முடிவுகள் செய்யப்பட்டுவிடும். இந்த மதிப்பீடுகள் சரியாக இருக்கவேண்டும் என்று கட்டாயமும் இல்லை. ஏனெனில், பெரும்பாலும் இந்த மதிப்பீடுகள் உங்கள் முந்தைய அனுபவங்களைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. அதனால் அந்த பொருள் அல்லது அந்த மனிதர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை நீங்கள் உணரமுடியாமலே போய்விடுகிறது.

ஆனால், நீங்கள் தெளிவாக, அதிகத் திறனோடு செயல்பட இந்த அனுமானம் மிக முக்கியம். நீங்கள் எந்த தொழிலோ, வேலையோ செய்தாலும், உங்கள் முன் வருபவர் ‘தற்சமயம்’ எப்படி இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். நேற்று அவர் எப்படி இருந்தார் என்பது முக்கியமில்லை. ‘இப்போது’ எப்படி இருக்கிறார் என்பதே முக்கியம். அதனால் முதல் வேலையாக, அவரைப் பார்த்தவுடன், அவருக்கு நமஸ்காரம் தெரிவியுங்கள். நீங்கள் வணக்கம் தெரிவித்ததுமே, உங்கள் விருப்பு வெறுப்புகளின் வீரியம் குறைந்துவிடும். காரணம், அவருள் குடிகொண்டிருக்கும் படைப்பின் மூலத்தை நீங்கள் கண்டுகொண்டுவிட்டீர்கள். இதுதான் நமஸ்காரம் செய்வதன் நோக்கம்.

‘படைப்பவனின் கைபடாத படைப்பு’

என்று இங்கு எதுவுமே இல்லை. இங்கிருக் கும் ஒவ்வொரு உயிரணுவிலும், அணுவிலும் படைப்பின் மூலமானது செயல்படுகிறது. அதனால்தான் இந் தியக் கலாச்சாரத்தில் வானம், பூமி, மனிதர், மாடு, மரம் என்று எதைப் பார்த்தாலும், கைகூப்பி வணங்கச் சொல்கிறார்கள்.

அதே படைப்பின் மூலம்தான் உங்களுக் குள்ளும் செயல்படுகிறது என்பதற்கான தொடர் நினைவூட்டுதலாகவும் இது அமையும். இதை நீங்கள் புரிந்துகொண்டால், ஒவ்வொரு முறை நீங்கள் நமஸ்காரம் செய்யும்போதும், வணக்கம் தெரிவிக்கும்போதும், அது உங்கள் உயிரின் அடிப்படையை நோக்கி உங்களை நடைபோடச் செய்யும்.

இதற்கு இன்னொரு அம்சமும் உண்டு. உங்கள் உள்ளங்கையில் பல நரம்புகள் முடிவடைகின்றன. விஞ்ஞானமும் இதை உறுதிப்படுத்துகிறது. நிஜத்தில் உங்கள் நாக்கு, குரலைவிட, உங்கள் கைகள்தான் அதிகம் பேசுகிறது. ‘முத்ரா’ பற்றி யோகத்தில் தனி விஞ்ஞானப் பிரிவே இருக்கிறது. உங்கள் கைகளை குறிப்பிட்ட விதங்களில் வைத்துக்கொண்டாலே, உங்கள் உடல் அமைப்பை பல்வேறு விதங்களில் இயங்கச் செய்ய முடியும்.

உங்கள் கைகளை ஒன்றாக சேர்க்கும் நொடியிலேயே, உங்களுடைய ‘பிடிக்கும் - பிடிக்காது, வேட்கை – வெறுப்பு’ போன்ற இருமைகள் எல்லாம் வீரியம் குறைந்து, ஒரு மனிதனாக, ஒரு உயிராக ஒரு முழுமையான உணர்வு உங்களுக்கு உண்டாகும். உங்கள் சக்திகள் ஒன்றிணைந்து, ஒன்றாய் செயல்படும். யோகப் பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்தால், ஒவ்வொரு முறை உங்கள் கைகளை ஒன்றாகச் சேர்க்கும்போதும், சக்தி எதிரொலி உண்டாகும் - மின்சாரம் பாயும் இரு வயர்களை சேர்த்தால், தீப்பொறி வருவதுபோல.

அடுத்தவருக்கு வணக்கம் தெரிவிக்கும்போது, உங்கள் உயிர் சக்தி அளவில், அங்கு ஒரு ‘கொடுக்கும்’ நிலை உண்டாகிறது. உங்களையே ஒரு அர்ப்பணமாக நீங்கள் அடுத்தவருக்குக் கொடுக்கிறீர்கள். இப்படி உங்களை கொடுக்கும் நிலையில் நீங்கள் வைக்கும் போது, அந்த அடுத்த உயிரும் உங்களோடு இணங்கி, ஒன்றாய் செயல்படும் நிலை உருவாகிறது. நீங்கள் கொடுக்கத் தயாராக இருந்தால், சுற்றியிருக்கும் எல்லாமே உங்களுக்கு சுமுகமாய் நடக்க ஆரம்பிக்கும். தன்னைச் சுற்றி ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கி, அங்கு ஒரு கூட்டுறவை உருவாக்கும் எந்த உயிரும் முன்னேற்றம் காண்கிறது.

நமஸ்காரம் என்பது யோகத்தின் மிக எளிய நிலை. உங்கள் கைகளை ஒன்றாக வைத்து, உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் இருமைகள் அனைத்தையும் ஒன்றிணைத்திடுங்கள். எல்லாவற்றையும் பாகுபடுத்திப் பார்க்கும் இந்த பரபரப்பான உலகில், அன்பையும், அமைதியையும் நாம் உணரவும், எல்லாவற்றுடனும் ஒரு தொடர்போடு இருக்கவும் இது ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த செயல்முறை.

பார்க்கும் எல்லாருக்கும் நமஸ்காரம் சொல்லுங்கள். உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றிலும் நல்லிணக்கத்தை உருவாக்கி நலமாக வாழ்ந்திடுங்கள்!l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x