Published : 14 May 2015 12:39 PM
Last Updated : 14 May 2015 12:39 PM

சித்தர்கள் அறிவோம்: மனதை வெட்ட வெளியாக்கு- மாசிலாமணி சுவாமிகள்

“ வெளியில் வெளிபோய் விரவிய வாறும்

அளியில் அளிபோய் அடங்கிய வாறும்

ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்

தெளியும் அவரே சிவசித்தர் தாமே .”

வானும், நெருப்பும், நீரும், காற்றும், ஆகாயமும் தம்முன் ஒடுங்கியிருக்கின்றன என்று உணர்பவரே சிவசித்தர் என்று திருமூலர் கூறுகிறார்.

சித்தர் என்றாலும் சிவம் என்றாலும் ஒன்றுதான் . ‘பரவெளி’ என்று சொல்லக்கூடிய அண்டவெளியே சிவம் ஆகும் . அதனால்தான் மனதை வெட்ட வெளியாக்கு என்று அனைத்துச் சித்தர்களும், ஞானிகளும் கூறுகின்றனர்.

சித்தர்களில் சிலர் பிறக்கும்போதே ஞானப் பிறப்பாகப் பிறக்கின்றனர் . சிலர் பிறக்கும்போதே, பிற்காலத்தில் சித்தராக வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டாலும், அதனை அறிந்து கொள்ளாமல் சாதாரண மனிதர்களைப் போல் வாழ்ந்து, பின்னர் எவருடைய தூண்டுதலின் பேரிலாவது ஞானம் பெறுவர்.

அப்படி ஞானம் பெறுபவர்கள் தமது ஆன்மிகப் பயணத்தைப் பஞ்சாட்சரத்துடன்தான் தொடக்குவார்கள்.

“ சிவனொடொக் கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை.”

என்பதுதான் அவர்களின் எண்ணங்கள் முழுவதிலும் இருக்கும் . ஆனால் ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் எண்ணம் முழுவதும் ஆஞ்சநேயரின் மீது இருந்தது என்பதும் ஆஞ்சநேயரின் அருளால் ஞானம் பெற்றார் என்பதும், ஒரு காலகட்டத்தில் இவரே ஒரு வானரமாக மாறிவிட்டார் என்பதும் வியப்பிற்குரிய செய்திகளாகும் .

ராணுவத்தில் இருந்து ஓய்வு

சென்னை, திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் பாலபருவத்துச் செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

ராணுவத்தில் பணிபுரியும்போதே, இவர் ஆஞ்சநேயரை வழிபட்டுவந்தார். ஒருமுறை இவர், ராணுவ வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மிக விரைவாகவும், அபாயமான முறையிலும் வண்டியை ஓட்டிச் செல்வதைக் கண்டு, ஓட்டுநரை எச்சரித்தார் . ஓட்டுநர் அதனைச் சட்டை செய்யாமல், மேலும் விரைவாக வண்டியை ஓட்டினார் .

சுவாமிகள் வண்டியை நிறுத்துமாறு கூறி, வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டார் . அந்த ஓட்டுநர், சுவாமிகளை விட்டுவிட்டு வண்டியைக் கிளப்ப முயன்றார் . என்ன செய்தும் வண்டியைக் கிளப்ப முடியவில்லை . சுவாமிகள் வண்டியில் ஏறி அமர்ந்ததும் வண்டி கிளம்பியது . அப்போதுதான் சுவாமிகளிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று அனைவரும் உணர்ந்து கொண்டனர் .

சுவாமிகள் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின் சோழம்பேடு கிராமத்தில் உள்ள பொங்குலக் கரையில் (குளத்தின் கரையில்) ஆஞ்சநேயரின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் . ஆஞ்சநேயர் எவ்வாறு தம் தலைவரான ஸ்ரீ ராமரின் நாமத்தை எப்போதும் ‘ராம் ராம்’ என்று உச்சரித்துக்கொண்டிருந்தாரோ, அது போன்றே சுவாமிகளும் ‘ராம் ராம்’ என்று மூச்சுக்கொரு முறை கூறிவந்தார் .

1982-ம் ஆண்டில் தாம் வழிபட்டு வந்த ஆஞ்சநேயருக்கு ஒரு சிறு மண்டபத்தை எழுப்பி, கார்த்திகை மாதம் கும்பாபிஷேகமும் செய்தார் . சுவாமிகள் அடிக்கடி தாம் நிறுவிய ஆஞ்சநேயரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘ராம் ராம்’ என்று கூறிக் கண்ணீர் விடுவாராம் . அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உபதேசமும் செய்வார். “காடு நாடாகிறது நாடு காடாகிறது - மனிதர்களின் மன நிலை விலங்குகளைப் போல் மாறிவிடும்” என்று அடிக்கடி கூறுவாராம் .

ஆஞ்சநேயர் ஆலயத்தில் அடிக்கடி பஜனைகள் நடக்கும்போதும், பக்தியின் வெளிப்பாடு அதிகமாகும்போதும் வானரம் போன்று சப்தமிட்டுக்கொண்டு அங்கும் இங்கும் தாவுவாராம். கீழே விழுந்து புரள்வதும் பல்ட்டி அடிப்பதும், பக்தர்கள் கொண்டு வந்திருக்கும் வாழைப்பழங்களைக் கடித்துவிட்டு மீண்டும் பக்தர்களின் மீது எறிவதுமாக இருப்பாராம்.

காக்கை குருவிகளுக்கு சோறு

சுவாமிகள் யாசகம் செய்து அரிசி, காய்கறிகளை வாங்கி வந்து அனைத்தையும் ஒன்றாகப் போட்டு, உப்பு சேர்க்காமல் தாமே சமையல் செய்வார் . அது பாதி வேகும்போதே, சூட்டுடன் எடுத்து இரண்டு வாய் உண்பார். இதுதான் அவருக்கு அன்றைய உணவு. சோறு வெந்தபின், வந்திருக்கும் பக்தர்களுக்குக் கொடுத்துவிட்டுக் காக்கை, குருவிகளுக்கும் ஆகாரமிடுவார் .

சுவாமிகளின் மகிமையைப் பற்றி அறிந்த மக்கள், ஆலயத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெறவேண்டுமென்று, சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கினர் . அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

சுவாமிகள் அடிக்கடி பருத்திப்பட்டில் உள்ள தமது உறவினர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்று வருவார் . 1995 - ம் ஆண்டு டிசம்பர் மாதம், 4-ம் தேதி, யுவ ஆண்டு, கார்த்திகை மாதம், 18-ம் தேதி, திங்கட்கிழமை, திரயோதசி திதி, பரணி நட்சத்திரத்தின்று காலை 9.10 மணிக்கு அங்கிருந்தவர்களிடம் “ராம் ராம் இவனுக்கு நேரம் வந்துவிட்டது” என்று கூறிவிட்டுப் படுத்தார் . அடுத்த கணம் சமாதியடைந்தார்.

ஆஞ்சநேயருக்கு அருகே சமாதி

பருத்திப்பட்டிலிருந்து சுவாமிகளின் பூதவுடலை ஊர்வலமாக சோழம்பேட்டிற்குக் கொண்டு வந்தனர். இதனை அறிந்த அவரது பக்தர்கள் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவரை எதிர்பார்த்துப் பஜனைகள் செய்து கொண்டிருந்தனர் . சுவாமிகள் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயருக்கு அருகில் சமாதி தோண்டப்பட்டுத் தயாராக இருந்தது.

சுவாமிகள் படுத்த நிலையில் சமாதியடைந்ததால், அவரை எப்படிச் சமாதிக்குள் உட்கார வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது . சுவாமிகளின் சீடரான துக்காராம் அவர்கள், சுவாமிகளிடம் கால்களை மடக்கிக்கொள்ளுங்கள் என்று கூறியதும் சுவாமிகள் பத்மாசனமிடுவது போல் கால்களை மடக்கிக் கொண்டாராம்.

பின்னர் 108 குடங்களில் நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து அவரைச் சமாதியினுள் அமர வைத்தனர் . அவரைச் சுற்றி வில்வம், துளசி, விபூதி, ஆகியவற்றை நிரப்பி சமாதியை மூடினர்.

பல அதிசயங்களை நிகழ்த்திய சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை . அவரது சீடரான துக்காராம் அவர்கள், சுவாமிகளின் சமாதிப் பீடத்தின் மீது சுவாமிகளின் திருஉருவச் சிலையை ஸ்தாபிதம் செய்துள்ளார் . சுவாமிகள் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயருக்கு எதிரே ஸ்ரீ ராமருக்கு ஒரு ஆலயம் எழுப்பியுள்ளார் . அங்கு ஸ்ரீ ராமர் சீதா தேவியுடன், தம்பி லட்சுமணன் சமேதராக எழுந்தருளியுள்ளார் .

அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள சோழம்பேடு மெயின் ரோட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்த பின், குளக்கரைக்குச் செல்லும் பாதையில் சென்றால் ஆஞ்சநேயர் ஆலயத்தை அடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x