Published : 07 May 2015 12:39 PM
Last Updated : 07 May 2015 12:39 PM
அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்' பண்ணுகிறேன். அதை யாரும் ‘டச்' பண்ண வேண்டாமென்று ‘வார்ன்' பண்ணுவதற்கே ‘டச்' பண்ணுகிறேன்.
ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலினிதான். குண்டலினி, அது சம்பந்தமான சக்கரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இரைபட்டுக் கொண்டிருக்கின்றன.
செளந்தர்யலஹரியிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்' பண்ணாவிட்டாலும், வேறே புத்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலினி என்ற சக்தியாக இருக்கிறது. அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது.
அதற்கான யோக சாதனை பண்ணினால், - பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்' பண்ணணும் அப்படிப் பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்கரங்கள் வழியாக ஊர்த்துவ முகமாக, மேல் நோக்கி சஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்கியமாகி ஜீவ பிரம்ம ஐக்கியம் ஏற்படும் என்பதுதான் சாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்துகொண்டால் போதும்.
நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலினி யோகம் என்று இப்படியொரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.
ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் - இல்லை, லக் ஷம், பத்து லக்ஷத்தில் ஒருவர்கூட முறைப்படி அந்த சாதனை பண்ணுவதற்கு முடியாது. அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி சித்தி அடைகிறது சாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும்.
அதனால்தான் ‘அதற்கான யோக சாதனை பண்ணினால்' என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்' என்பது சரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத காரியம். இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மகாசக்தியிலே கலப்பது அல்லது அந்த மகாசக்தியாகத் தானே விகசிப்பது மலர்வது - லேசில் நடக்கிற விஷயமில்லை.
சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து பிரம்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள். குண்டலினி சஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.
ஒரு பயிர் சுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது. பல தினுசாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலினி யோக சாதனை என்பதை ரொம்பவும் சிரம சாத்தியமாகவே வைத்திருக்கிறாள்.
பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலினியால் அடைந்துவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்..
ஒரு தடவைக்குப் பல தடவையாக எச்சரிக்கிறேன். நிச்சயமாக சித்தியானவர் எந்தவிதமான சொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய சத்குரு கிடைத்தாலொழிய யாரும் சுயமாகவோ அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாசம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற சமாசாரம் என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT