Published : 07 May 2015 12:31 PM
Last Updated : 07 May 2015 12:31 PM
ஓவியக் கலையில் பல வகை உண்டு. குகைகளிலும் சுவர்களிலும் துணிகளிலும் காகிதங்களிலும் வரைவதைப் பார்த்திருப்போம். சின்னஞ்சிறு அரச இலையில்?
கிராமத்தில் ஆற்று நீரில் விழுந்து கரை ஓரத்தில் ஒதுங்கும் அரச இலைகள் ஓவியம் வரைய ஏதுவான துணி போல் இருந்ததைச் சிறு வயதிலேயே அச்சுதன் கண்டு கொண்டுள்ளார். எண்ணற்ற ஊடுபாவுகளுடன் நுட்பமான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்த இவர் தீவிரமான பக்தரும்கூட. தனது ஓவியக் கலையையும் பக்தியையும் அரச இலைகளில் சங்கமிக்கச் செய்துள்ளார் இந்தக் கலைஞர்.
அரசு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஓவிய ஆசியராகப் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவுடன், இதைச் செயல்படுத்திப் பார்க்க விரும்பினார் அச்சுதன். அதற்கு முன்னர் அரச இலையைவிடப் பெரிய இலையான தேக்கு, சந்தன இலைகளில் முயற்சிசெய்திருக்கிறார். அவை உதிர்ந்து பொடிப் பொடியாகிவிட்டன.
ஓவியம் என்பது பல ஆண்டுகள் புதுப் பொலிவு மாறாமல் நீடித்திருக்க வேண்டும் அல்லவா? இதற்குப் பொருத்தமானது அரச இலையே என அவர் பரிசோதனையில் தீர்மானித்தார். இதில்தான் 108 திவ்ய தம்பதிகளை அழகுற ஓவியமாகத் தீட்டினார். இதற்கான வண்ணக் கலவை, விரும்பிய வண்ணத்தில் கடைகளில் கிடைப்பதாகத் தெரிவித்தார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மேற்கு வங்க கலைக் கண்காட்சியில் பாடம் செய்யப்பட்ட பெரிய அரச இலைகள் விலைக்குக் கிடைத்தன. பாடம் செய்யப்பட்ட பதினைந்து இலைகளில் ஐந்து, ஆறு இலைகள்தான் தேறும் என்றாலும் ஒரு இலை விலை முன்னூறு ரூபாய். முதல் முறை அங்கு நூற்றுக்கணக்கான இலைகள் வாங்கிய அவர் பிறகு தானே தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.
அரச மரம் துளிர் விட்டு இலை பெரிதான பின், முற்றாமல் இருக்கும் இலைகளைப் பறிக்க வேண்டும். அதனை ஈரத்தோடு எடுத்து வந்து பாடம் பண்ண வேண்டும். நல்ல இலையாகத் தேர்ந்தெடுத்து திவ்ய தம்பதிகளை வரைய வேண்டும் என்கிறார் மாம்பலம் ஜெய் கோபால் கரோடியா உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி புரியும் அச்சுதன்.
நூற்றியெட்டு திவ்ய தம்பதிகளையும் வரைந்து முடிக்க ஓராண்டுக் காலம் ஆனதாம். இலைகளைத் தயார்ப்படுத்திக் கொண்டு, சில திவ்ய தேசங்களுக்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்குள்ள திவ்ய தம்பதிகளைக் கண்ணாரக் கண்டு பின்னர் இலையில் ஓவியமாக வடித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஆன்மிகக் கண்காட்சியில், இவ்வோவியங் களைப் பலர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
நூற்றியெட்டு திவ்ய தம்பதிகளையும் வரைந்து முடிக்க ஓராண்டுக் காலம் ஆனதாம். இலைகளைத் தயார்ப்படுத்திக் கொண்டு, சில திவ்ய தேசங்களுக்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்குள்ள திவ்ய தம்பதிகளைக் கண்ணாரக் கண்டு பின்னர் இலையில் ஓவியமாக வடித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஆன்மிகக் கண்காட்சியில், இவ்வோவியங் களைப் பலர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
அரச இலைகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்த ஓவியங்கள் இன்றும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.
படங்கள்: ம.பிரபு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT