Published : 07 May 2015 01:01 PM
Last Updated : 07 May 2015 01:01 PM
இறைநம்பிக்கை கொண்ட ஏழு இளைஞர்கள் அவர்கள். ஊராரின் வன்முறையிலிருந்து தப்பிக்க முடிவெடுத்தனர். இறைநம்பிக்கையைத் துறப்பது அல்லது ஊராரின் கல்லடிகளுக்கு ஆளாகி மரணம் அடைவது என்று இரண்டு நிர்பந்தங்கள் அவர்கள் முன் இருந்தன, கடைசியில், தங்கள் இறைநம்பிக்கையைக் காத்துக்கொள்ள முடிவெடுத்து ஊரைத் துறந்து மலைப்பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
மலையில் ஒரு குகை இருந்தது. புகலிடம் தேடிக் குகைக்குள் நுழைந்தவர்கள் தம்மைக் காத்தருளும்படி நெஞ்சுருக இறைவனிடம் வேண்டினார்கள். குகையில் போதிய இட வசதி இருந்தது. இளைஞர்களுடன் அவர்களின் செல்லப் பிராணியான நாயும் இருந்தது.
அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது, அதன் கதிர்கள் குகையை விட்டு விலகி வலதுபுறமாகப் பாயும். மாலையில் மறையும்போது குகையைக் கடந்து இடதுபுறமாகத் தாழும். இத்தகைய அமைப்பில் மலைக்குகை அமைந்திருந்தது.
குகைக்குள் சென்ற இளைஞர்கள் களைப்பில் படுத்தனர். ஆழ்ந்த உறக்கம் அவர்களைப் பற்றிக்கொண்டது. குகை வாயிலில் நாய் படுத்துக் கொண்டது.
ஆழ்நிலை உறக்கம் அது. துயில் கலையாமல், உணவும், நீரும் இல்லாமல் வலப்புறம், இடப்புறம் என்று மாறி மாறிப் புரண்டு தூக்கத்தில் பல்லாண்டுகள் லயித்திருந்தார்கள்.
இதற்கிடையில், ஊரில் இறைநம்பிக்கை கொண்ட ஆட்சி, அதிகாரம் என்று பல மாற்றங்கள் நடந்துவிட்டன.
குகையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர்களின் உறக்கம் கலைந்தது. கொட்டாவி விட்டுக்கொண்டே ஒருவர், “சரியான தூக்கம்” என்றார்.
“நாம் எவ்வளவு நாட்கள் உறங்கியிருப்போம்?” என்று அடுத்தவர் கேட்டார்.
“என்ன.. ஒரு நாள் அல்லது அதைவிடக் குறைவான நேரமாகத்தான் இருக்கும்!” என்றார் இன்னொருவர்.
“சரி.. சரி.. சர்ச்சையை விடுங்கள்! நாம் எத்தனை நாள் உறங்கினோம் என்பதை எல்லாம் வல்ல இறைவன் நன்கறிவான். பசி வயிற்றைக் கிள்ளுகிறது. அதனால், ஒருவர் ஊருக்குள் சென்று சாப்பிட ஏதாவது வாங்கி வாருங்கள். யாராவது அடையாளம் கண்டுவிடப் போகிறார்கள் எச்சரிக்கை!” என்று தம் ஊரார் குறித்த பயம் விலகாமலேயே அவர் சொன்னார்.
மாறிய காலத்தில்
இளைஞர்களில் ஒருவர் ஊருக்குள் சென்றார். கடைவீதி வித்தியாசமாக இருந்தது. பரிச்சயமானவர்கள் யாரும் தென்படவில்லை. இதுவும் அவருக்கு வியப்பாக இருந்தது. ஒரு கடைக்குள் சென்றவர் தேவையான உணவுப் பொருட்களைக் கேட்டு வாங்கினார். அதற்கான காசை நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்ட கடைக்காரரின் முகம் மாறியது. அவர் இளைஞரை மேலும் கீழும் பார்த்தார். நாணயத்தை உருட்டி உருட்டிச் சோதித்தார். மெல்ல சிரித்தார்.
இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை. இருநூறு ஆண்டுகள் காலம் கடந்து, ரோம் நகரின் ஒரு அங்காடியில், பழங்கால நாணயத்தையல்லவா அவர் நீட்டியிருந்தார்!
கடைக்காரர் இளைஞரின் கையைப் பிடித்துக்கொண்டு, “செல்லாக்காசைக் கொடுத்து என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? நானாவது ஏமாறுவதாவது! இந்த நாணயம் உனக்கு எப்படிக் கிடைத்தது? நிச்சயம் ஏதாவது புதையல்தான் உனக்குக் கிடைத்திருக்க வேண்டும். என்னுடன் வா.. அரசாங்க அதிகாரியிடம் செல்வோம்!” என்று மிரட்டினார்.
“அய்யா! நான் நேற்றுதான் இந்த ஊரிலிருந்து சென்றேன். அப்போது நான் வைத்திருந்த நாணயம் இது. அதற்குள் செல்லாக் காசாகிவிட்டது என்றால் எப்படி? பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்று வேறு சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது” என்றார் அந்த இளைஞர்.
“உனக்கு ஒன்றும் புரியாதுதான்! விசாரிக்க வேண்டிய முறைப்படி விசாரித்தால் எல்லா உண்மையும் வெளிப்பட்டுவிடும்” .
கடைக்காரர் போட்ட கூப்பாட்டில் கடைவீதியே கூடிவிட்டது.
இளைஞரின் பேச்சு எல்லோரையும் குழப்ப, கடைசியில் அவரை அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள்.
மறுமை குறித்த விவாதம்
பல்லாண்டுகளுக்கு முன் இறந்தோர் மீண்டும் எழுப்பப்படுவாரா? என்று மறுமை தொடர்பான விவாதம் அங்கே நடந்துகொண்டிருந்தது.
விசாரணையின் முடிவில் கொடுங்கோலர்களிடமிருந்து தங்கள் இறைநம்பிக்கையைப் பாதுகாத்துக்கொள்ள ஊர்துறந்து ஒரு குகையில் தஞ்சமடைந்ததாக அந்த இளைஞர் அரசனிடம் சொன்னார். அச்சம்பவத்தை ஊராரும் தங்கள் மூதாதையரிடமிருந்து கேள்விப்பட்டிருந்தார்கள்.
இளைஞர்கள் தங்கிய குகைக்கு முன்னால் ஊரார் அனைவரும் வியப்பில் கூடினார்கள்.
“இருநூறு ஆண்டுகளா நாம் உறங்கிக் கிடந்தோம்!” என்று இளைஞர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். குகைக்கு வெளியே திரளாய் நின்றிருந்த மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இறைவனை துதித்தவாறு மீண்டும் படுத்துக்கொண்டார்கள். அந்த நிமிடமே அவர்களின் உயிரும் பிரிந்தது.
இம்மையில் மாண்டவர், மறுமையில் மீண்டெழுவது குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதற்கான உதாரணத்தை நேரில் கண்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT