Published : 28 May 2015 01:07 PM
Last Updated : 28 May 2015 01:07 PM
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே
குருவின் திருவருள் ஒன்றே ஞானத்தைப் பிறப்பிக்கும். குருவின் திருவுருவைக் கண்டாலே பேரின்பம் சித்திக்கும் . ஏனென்றால் குருவே சிவமாக இருக்கின்றார் என்று திருமூலர் செப்பியதைக் கண்டோம் . இந்தப் பாடலில் திருமூலர், குருவின் திருவடியே சிவம் என்றும், நாம் சரணடைய வேண்டியது குருவின் திருவடிகளே என்றும் கூறுகின்றார்.
குருவின் திருவடிகள் பட்ட இடமே சிவலோகம் என்று கூறும் போது, ஒரே இடத்தில் மூன்று ஞான குருக்களின் திருவடிகள் பட்ட இடத்தை என்னவென்று கூறுவது.
கிண்டியில் சத்யானந்தா என்ற கோழிப்பீ சுவாமிகள் ஜீவசமாதியைப் பற்றி அறிந்து கொள்வதற்காகச் சென்ற போது, அங்கு சீர்டி சாய்பாபாவின் ஆலயம் நம்மை வரவேற்றது . அதற்கடுத்தாற் போல் சத்ய சாயி மண்டலியும், அதனை அடுத்து சத்யானந்தா சுவாமிகளின் ஜீவ சமாதியும் அமைந்திருந்தன .
சீர்டி சாய்பாபாவின் நண்பர்
சத்தியானந்தா சுவாமிகள் இமய மலையில் பல ஆண்டுகள் யோக சமாதியில் இருந்து அட்டமா சித்திகளையும் பெற்றவர். இவர் சீர்டி சாய்பாபாவின் ஆத்ம நண்பர். இவர் இமய மலையிலிருந்து பல புனித ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுத் திருவண்ணாமலைக்கு வந்து சில காலம் தங்கியிருந்த போது, பல சித்தர்களின் அறிமுகம் கிடைத்தது .
அதன் பிறகு தாம் பரிபூரணம் அடைவதற்குச் சரியான இடம் கிண்டியில் உள்ள வில்வ வனம்தான் என்று தமது ஞானத்தால் உணர்ந்து, இங்கு வந்து சேர்ந்தார். இங்கிருந்த ஓரு மரத்தின் கீழ் அமர்ந்து யோகப் பயிற்சிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டார்.
அவரது உயரமான உருவத்தையும் நீண்ட தாடி மற்றும் ஜடாமுடியையும் கண்ட அப்பகுதி மக்கள் அவரைப் பெரும் ஞானி என்று வழிபடத்தொடங்கினர். தம்மை நாடிவரும் பக்தர்களுக்குக் கோழியின் கழிவை எடுத்துக் கொடுப்பாராம் . அது உடனே பொன்னாக மாறிவிடுமாம். அங்கு வரும் சிறுவர்களுக்கும் அந்தக் கழிவைக் கொடுத்தும் அது சர்க்கரையாக மாறிவிடுமாம். இதனால் பக்தர்கள் அவரைக் கோழிப்பீ சுவாமிகள் என்று அழைத்தனர். நாளடைவில் அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
இரவு நேர உலா
இந்தக் காலகட்டத்தில் தான் லோகநாத முதலியார், சுவாமிகளுக்கு அறிமுகமானார் . சிறுவனாக இருந்த போதே முதலியாருக்குச் சுவாமிகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுப் பணிவிடைகள் செய்து வந்தார் . இதனால் அவர் சுவாமிகளின் மிக நெருக்கமான தொண்டராக ஆகிவிட்டார் . இரவு நேரங்களில் சீர்டி சாய்பாபா, இவரைத் தேடி இங்கு வந்துவிடுவாராம். அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டே உலவி வருவதை முதலியாரின் குடும்பத்தினர் கண்டிருக்கின்றனர் .
1904 - ம் ஆண்டில் தாம் சமாதியடைய வேண்டிய காலம் வந்துவிட்டதை அறிந்த ஸ்ரீ சத்யானந்தா சுவாமிகள், தமக்கென்று பத்து அடி நீளம், பத்து அடி அகலம் பத்து அடி ஆழம் உள்ள சமாதிக் குழியைத் தோண்டச் செய்தார் . பின்னர் லோகநாத முதலியாரிடம், தனக்கு வலது பக்கத்தில் சீர்டி சாய்பாபாவிற்கு ஓரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு சமாதிக் குழியினுள் அமர்ந்து பரிபூரணம் அடைந்தார் .
இந்தப் புனித ஸ்தலத்தைத் தரிசிக்க:
கிண்டி ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் சில அடிகள் நடந்தால் இந்தப் புனித ஸ்தலத்தை அடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT