Published : 28 May 2015 01:09 PM
Last Updated : 28 May 2015 01:09 PM
இரட்டைக் குதிரைகளின் துள்ளல் வேகத்தில் அமைந்திருந்தது பத்மபூஷண் டி.என். கிருஷ்ணன் மற்றும் விஜி கிருஷ்ணன் ஆகியோரின் இரட்டை வயலின் இசை. குழந்தையின் குதூகலத் துள்ளல், இசையின் வெளிப்பாட்டில் தெரிந்தது. கர்னாடக இசை மேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 125-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் இந்த இசைக் கச்சேரி, நடைபெற்றது. சென்னையில் மே, 19 அன்று இந்த விழா நடந்தது.
அரியக்குடியின் சிஷ்யர் கர்னாடக இசைக் கலைஞர் ஆலப்புழை வெங்கடேசன், பாரதிய வித்யாபவன் நிர்வாகி ராமசாமி, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், கர்னாடக சங்கீத சபாவின் பொதுச் செயலாளர் ஆர்.மகாதேவன், ஸ்ரீ அரியக்குடி இசை அறக்கட்டளையின் செயலாளர் ஜி.ராமானுஜம், இந்திய கலாச்சார தொடர்பு மைய மண்டல இயக்குநர் கே.அய்யனார் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
கர்னாடக இசையின் புனிதம் குறையாமல் அதை ஜனரஞ்சகமாக்கி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்று பாஜக தலைவர் இல.கணேசன் தனது தலைமையுரையில் கூறினார். இந்த நிகழ்ச்சியை இந்திய கலாச்சார தொடர்பு மையமும், ஸ்ரீ அரியக்குடி இசை அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
டி.என்.கிருஷ்ணன், அவருடைய மகள் விஜி கிருஷ்ணன் ஆகியோரின் வயலின் இசையின் மேன்மை அனைவரும் அறிந்ததுதான். எண்பது வயது இளைஞரான கிருஷ்ணனின் இசை வெளிப்பாடு சர மழையாகவும், சாரல் மழையாகவும் இருந்தது. அழுத்தமாகவும், மென்மையாகவும் அழகிய பெண் குழந்தையைப் போல் வந்து மேலே விழுந்தது ராகத்தில் அமைந்த `எந்தரோ மகானுபாவுலு`. இக்கீர்த்தனையில் `சந்துரூவமுனி` என்ற இடத்தில் ரகசியம் பேசிய வயலினிசையை `மோர்சிங்` இசை மெல்லத் தழுவிச் சென்றது.
இவர் இசையில் ஸ்ரீ ராகம் என்ற ஓடையில் சுவரங்கள் தங்க மீன்களாகத் துள்ளிக் குதித்து வர்ணஜாலம் காட்டின. மிருதங்கம் திருவாரூர் பக்தவத்சலம் நந்திகேஸ்வரர்தான். தாளக் கோவைகள் உறுத்தாமல் உருண்டு வந்தன. பொதுவாக `ஏசி` அரங்கத்தில் சிறிது நேரத்திலேயே `சொத்`தென்று விழத் தொடங்கும் மிருதங்க அடிகள்.
இவரது பலப் பிரயோகம் துல்லியமாக இருந்ததால் காட்டாற்று வெள்ளம் போல் தாளம் காத்திரமாக விழுந்தது கன கச்சிதம். அதனால் `தனி`யில் மிருதங்கமும், மோர்சிங்கும் மோதிப் பொருது விளையாடின. தனியின் பொழுது ஒருவர்கூட அரங்கத்தை விட்டு எழுந்து செல்லவில்லை என்பதே இதன் அருமைக்குச் சான்று.
தமிழ்ப் பாடல் இல்லாத அரியக்குடி விழா ஏது? `ஒருத்தி மகனாய் பிறந்து` என்பதில் இருந்த தமிழ்ச் சொற்கள், இரும்புக் கம்பியில் மலர்ந்த காயாம் பூக்களாய்ப் பூத்துக் குலுங்கின. ஆண்டாள் பாசுரமானதால் கோடையிலும் மார்கழி `ஜில்`லிப்பைத் தந்தது.
அணுவளவும் பிசகாமல் அப்படியே அரியக்குடி பாணியில் இயல்பாய் வாசித்தார் டி.என்.கிருஷ்ணன். குறைவில்லாமல் தன் மகள் விஜி கிருஷ்ணனுக்கும் இசையமுதை வாரிக் கொடுத்திருக்கிறார் என்பதை அவர் மகள் கானாமிருதமாய் வாசிக்கும்போது உணர முடிந்தது.
அரியக்குடி தெளியக்குடி
அந்நாளில் கச்சேரிகளில் பாடகர் ஒரு ராகத்தை மட்டும் பல மணி நேரம் ஆலாபனை செய்வார். பிறகு அதே ராகத்தில் அமைந்த கிருதியைப் பாடிக் கச்சேரியை முடித்துவிடுவார். இப்படிப் பாடினால்தான் ரசிகர்களுக்கு ராகத்தை அனுபவித்த ஆனந்தம் முழுமையாகும் என்று அக்காலத்தில் நம்பினார்கள். பல கீர்த்தனைகள், வர்ணங்கள், கீதங்கள், பஜனைப் பாடல்கள், துக்கடா என்று பல சங்கதிகளுடன் கச்சேரி வண்ணமயமாய்க் களைகட்டுவது இன்றைய பாணி. இந்த புதுமையைச் செய்தவர் சங்கீத கலாநிதி பத்மபூஷண் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்.
இன்று ஆலமரமாய்த் தழைத்துள்ளது அரியக்குடி பாணி. இவரின் பாணியால்தான் பல ராகங்கள் பிரபலமடைந்தன. இசையில் தெளிவடைய வேண்டுமானால் அரியக்குடியின் பாணி மூலம் குழப்பம் `தெளிய` இசையைக் கரைத்துக் குடிக்க வேண்டும் என்றே சொல்லலாம். இவரது பாணியை அறிந்துகொண்டால் மேடைக் கச்சேரிகளைப் புரிந்துகொண்டு ரசிக்கலாம்.
காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடி என்ற ஊரில் 1890-ம் ஆண்டு பிறந்த ராமானுஜ ஐயங்கார், இசையை பால்யத்திலேயே திறம்படக் கற்றார். உதாரணத்திற்கு தோடி ராகத்தில் மட்டுமே குறைந்தது 25 கீர்த்தனைகளுக்கு மேல் அவரால பாட முடியும் என்று விழாவில் கிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT