Published : 28 May 2015 12:45 PM
Last Updated : 28 May 2015 12:45 PM

தெய்வத்தின் குரல்: உடல் உழைப்பே ஆண்மை

சரீர உழைப்பால் தேக சக்தியை விருத்தி செய்து கொண்டு பௌருஷம் பெறுவதே மனசின் பௌருஷத்துக்குக் காரணம் ஆகும். இப்போது பேப்பரைப் படித்துவிட்டுக் காரசாரமாக வாய் வார்த்தையில் அக்கிரமங்களைக் கண்டிக்கிறோமே தவிர, நிஜமான ஆண்மையோடு நம் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உயிரை வேண்டுமானாலும் கொடுப்பது என்று காரியத்தில் இறங்குகிற தீரம் போய்விட்டிருக்கிறது. இப்படி, ஒரு பக்கம் ஸ்த்ரீகள் புருஷர்களாகிக் கொண்டு வரும்போதே இன்னொரு பக்கம் புருஷர்களுக்கு ஸ்த்ரீத்துவம் விருத்தியாகி வருகிறது.

நல்ல சத் விஷயங்களில் பிடிமானம், படிப்பு, பயிற்சி, பக்தி, பூஜை, தியானம் உள்ளவர்களைத் தவிர மற்ற பெரும்பாலாரின் மனசு கெட்டதுகளில் போகாமல் தடுப்பதற்குச் சரீர உழைப்புதான் சாதனமாகிறது.

சரீர உழைப்பும் சந்ததியும்

புருஷர்கள் சரீர உழைப்பைக் குறைத்துக் கொண்டதிலிருந்துதான் ஆண் பிரஜைகள் பிறப்பது குறைந்துவருகிறது. இப்படிக் குறைந்தால்தான், சரக்கு அதிகம் கிடைக்காவிட்டால் விலை கூடிவிடும் என்ற பொருளாதார விதிப்படி, வரதக்ஷிணை, சீர் என்று பிள்ளை வீட்டுக்காரன் ஏகமாக வாங்குவதாகவும், அதனால் நம் சமூக தர்மமே குளறிப் போவதாகவும் சம்பவித்திருக்கிறது. எக்னாமிக்ஸ்படி ‘கிராக்கி'யாகிவிட்ட ஆணுக்கு dowry கொடுப்பதென்பது நம் மதத்துக்கே ஹானியில் கொண்டு விட்டிருக்கிறது.

முன்னெல்லாம், பிராம்மணனின் நித்ய கர்மாநுஷ்டானங்களும், மற்ற ஜாதியார்களின் பாரம்பரியத் தொழில்களும் நன்றாக அவர்கள் இடுப்பை முறித்துவிடும். ‘முறித்துவிடும்' என்று தோன்றினாலும் அதுவே உண்மையில் பலம் தந்தது. அந்த நாள் ஆகாரத்திலும் சத்து ஜாஸ்தி.

பிற்பாடுதான், முதலில் பிராம்மணனும் அப்புறம் இவனைப் பார்த்து மற்றவர்களும் white-collared job, sedentary job என்கிறார்களே, அப்படி அழுக்குப்பட்டுக் கொள்ளாமல் வேலை பார்ப்பதுதான் பெருமை என்று ஆனது. இதனால் ஏற்பட்ட மற்ற அனர்த்தங்கள் இருக்கட்டும். வேதவித்யையும் வைதிகாநுஷ்டானமும் வர்ணாசிரமமும் போய், ஏகப்பட்ட போட்டி, பொறாமை, ஜாதி துவேஷம், இன துவேஷம் எல்லாம் வந்ததற்கே இப்படி சர்க்கார் உத்யோக மோகத்தில் பிராம்மணன் கிராமத்தை விட்டு ஓடி வந்ததுதான் விதை போட்டது.

அந்தப் பெரிய அனர்த்தம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி சரீரத்தால் செய்யும் வேலையைக் குறைத்துக் கொண்டதன் இன்னொரு அனர்த்தம் பௌருஷம் நஷ்டமானது. இப்போது ஆகாரமும் புஷ்டிக்கானதாக இல்லை. கெமிகல் ஃபெர்டிலைஸர் விளைச்சலை ஜாஸ்தியாக்கலாம். ஆனால் விளைபொருளின் சத்து இதில் ரொம்பக் குறைந்து விடுகிறது. போதாததற்கு ஆரோக்கியத்துக்கு ஹானி பண்ணி, நரம்புத் தளர்ச்சியை உண்டுபண்ணுகிற காபி முதலிய பானங்கள் வேறு வந்து சேர்ந்திருக்கின்றன.

மூளைக்கு வேலை ஜாஸ்தியாகி யிருக்கிறது. ‘பேனா உழவு' ஜாஸ்தியாகி யிருக்கிறது. இது சரியாய் நடக்க வேண்டுமானால் புத்தி சுத்தமாகவும், சத்வமாகவும், சாந்தமாகவும் இருந்தாக வேண்டும். ஆனால் சூழ்நிலையோ சினிமாக்கள், நாவல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றால் மநுஷ்யனைக் காம வேகத்திலும் `பாலிடிக்’சாலும் பலவித வர்க்கப் போராட்டங்களாலும் குரோத வேகத்திலும் தள்ளி இவனுடைய புத்தியையும் நரம்பையும் ரொம்ப பலஹீனப் படுத்துவதாயிருக்கின்றன.

பதினைந்து வயசாகிவிட்டால் மூக்குக் கண்ணாடி வேண்டும், நாற்பது வயசானால் blood pressure -குத் தப்பிக்கிறவன் எவனோ ஒருத்தன்தான் என்கிற மாதிரி ஆரோக்கியம் சர்வவியாபகமாக ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில், ஓடியாடி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்ததில் பௌருஷம் போய்விட்டது. அதனால், பிறக்கிற குழந்தைகளிலும் புருஷ பிரஜைகள் குறைந்துவிட்டன.

`டிகிரி ' இல்லாமலே மதிப்புப் பெற

ரிடையரானவர்கள் தங்களை மக்கப் பண்ணிக் கொண்டு உட்காராமல், கிளுகிளுவென்று கல்பக விருக்ஷங்களாகி, சமூகத்துக்கு நிழலும் பழமும் கொடுத்து ஆதரிக்க முடியும். ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன்.

ஒரு ரிடையர்ட் இன்ஜினீயர் இரண்டு பையன்களுக்கு ஓவர்சீயர் படிப்புக்கு சமமாக வீட்டிலேயே (முடிந்தால் அன்னமும் போட்டு) படிக்கக் கற்றுக் கொடுத்தால், அவர்கள் டிகிரி வாங்க வேண்டுமென்பதுகூட இல்லை. இன்ன பெரியவரிடம் படித்தார்கள் என்பதாலேயே அவருடைய சர்டிஃபிகேட்டைப் பார்த்தே, ப்ரைவேட் கான்ட்ராக்டர் கள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

இன்ஜினீயரிங் காலேஜில் தனக்கு இடம் கிடைக்கவில்லையே என்று forward community மாணவன் அழ இடமிருக்காது. இப்போது சங்கீதத்தில் ஒருத்தனின் டிகிரியையோ டிப்ளோமாவையோ பார்க்காமல், இன்னார் சிஷ்யன் என்றுதானே கச்சேரிக்கு சபாக்காரர்கள் கூப்பிடுகிறார்கள்? அப்படியே forward community -ஐச் சேர்ந்த வாலிபர்கள் மற்றத் துறைகளிலும் காலேஜ் படிப்பை எதிர்பார்க்காமல் இன்னாருடைய சிட்சையில் கற்றுக்கொண்டான் என்பதாலேயே ப்ரைவேட் ஃபாக்டரிகள், கம்பெனிகள் ஆகியவற்றில் உத்யோகம் பெறக்கூடிய மகா உபகாரம் நன்மதிப்பு பெற்ற அனுபவஸ்தர்களான பென்ஷனர்கள் ஒன்றுகூடி வித்யாதானம் செய்வதால் ஏற்படும்.

இப்போது சி.ஏ., அந்த ‘டெக்', இந்த ‘டெக்' என்று எத்தனை படிப்புகள் தனியார் ஸ்தாபனங்களால் நடத்தப்பட்டபோதிலும் யூனிவர்சிடி டிகிரிகளைவிட உசத்தியாக சர்க்கார் உள்பட எல்லாராலும் நினைக்கப்படுகின்றன? அம்மாதிரி இதுவும் விருத்தியாக முடியும்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x