Published : 14 May 2015 12:34 PM
Last Updated : 14 May 2015 12:34 PM
ஒரு காலத்தில் சீடர் ஒருவர்கூட இல்லாமல் துறவி ஒருவர் மலை மேல் தனிக்குடில் ஒன்றில் வாழ்ந்துவந்தார். அவரது ஞானம் பற்றிக் கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான பேர் அவரின் பாதம் பணிந்து, தங்களை ஏற்று தீட்சை அளிக்கக் கோரினார்கள்.
“எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! நீங்கள் எட்டிய ஞானத்தைப் பெறுவதற்கு எங்களுக்கு தீட்சை அளித்து அனுமதி வழங்குங்கள். உங்கள் ஞான ஆலயத்தின் கதவை எங்களுக்குத் திறந்து காட்டுங்கள். நாங்கள் தாகத்துடன் உள்ளோம்” என்று கோரிக்கை எழுப்பினார்கள்.
ஆனால் வந்தவர்கள் எல்லாரையும் துறவி மறுத்தார். அவரது நிபந்தனைகளும் அத்தனை கடுமையாக இருந்தன. மூன்று ஆண்டுகள் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பிரம்மச்சரியம் காக்க வேண்டும்.
துறவியின் நிபந்தனைகளைப் பின்பற்ற ஒருவரால்கூட முடியவில்லை. அவரது நிபந்தனைகளை எத்தனை தூரம் நிறைவேற்ற முயற்சிக்கிறோமோ அத்தனை தூரம் சாத்தியமற்றதும் கூட. பெரிதாக அதைப் பற்றி யோசிக்காமல் இருக்கும்போது பிரம்மச்சரியம் எளிமையானதே. ஆனால் பிரம்மச்சரியம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவனது மனம் முழுவதும் பெண்களே நிறைந்திருப்பர்.
துறவியிடம் சீடர்களாக விரும்பும் எல்லாரும் அவரது நிபந்தனைகளின்படி இருப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் யாராலும் தீட்சை பெறவே முடியவில்லை.
ஒருகட்டத்தில் துறவி தனக்கு மரணம் நெருங்க இருப்பதை உணர்ந்தார். அவரைச் சுற்றி ஜனங்கள் சூழ்ந்திருந்தனர். அப்போது துறவி ஒரு கோரிக்கை விடுத்தார். “இன்னும் மூன்று நாட்களே என் வாழ்வில் மீதம் இருக்கிறது. யார் என்னிடம் தீட்சை பெற்று சீடனாக விரும்புகிறார்களோ அவர்களை வரச் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு தீட்சை அளிக்கிறேன்” என்றார்.
அவரைப் பற்றி நன்கு அறிந்த மக்கள் அவரது கடுமையான நிபந்தனைகள் குறித்துக் கேட்டனர்.
“எல்லா நிபந்தனைகளையும் மறந்துவிடுங்கள். உண்மை என்னவெனில், யாருக்கும் தீட்சை கொடுக்க நான் தயாராகவில்லை. அதனாலேயே நான் நிறைய நிபந்தனைகளை இட்டேன். தற்போது நான் தயாராக இருக்கிறேன்! நான் நிறைந்து இருக்கிறேன். நான் இப்போது பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். அத்தனை நிபந்தனைகளையும் மறந்துவிடுங்கள். யார் என்னிடம் தீட்சை பெற விரும்புகிறார்களோ அவர்கள் என்னிடம் வரட்டும். இன்னும் மூன்று நாட்களே மிச்சமுள்ளன” என்றார்.
துறவியிடம் வந்தவர்கள் எல்லாம் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தீட்சை பெற்றனர். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.
“நாங்கள் எல்லாரும் பாவம் செய்தவர்கள். எங்களுக்கு எப்படி புனிதமான தீட்சை அளிக்கிறீர்கள்” என்று வியப்புடன் கேட்டனர்.
“அதையெல்லாம் மறந்துவிடுங்கள். நேற்றுவரை வரை நான் துறவி அல்ல- அதுதான் எனது பிரச்சினையும்கூட. உங்களுக்கு தீட்சை அளிக்க என்னிடம் சிறப்பாக எதுவும் இருந்தது கிடையாது. நானே வெளியேதான் இதுவரை நின்றுகொண்டிருந்தேன். தற்போது அந்தக் கதவு திறந்துவிட்டது. நான் பகிர்ந்துகொள்ள வேண்டும். இப்போது நிபந்தனைகள் பற்றிய கேள்வியே இல்லை.”
நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, ஞானத்துக்கான தேவையே இல்லாமல் இருக்கும். ஞானத்துக்கான தேவை இல்லாமல் இருக்கும் நிலையில் ஞானத்தை அளிக்கும் தகுதியுடையவராக முழுமையாக மாறிவிடுவோம். இதுதான் முரண். உங்களுக்குத் தேவையென ஒன்று இருக்கும்போது, நீங்கள் அதைக் கொடுப்பதற்குத் தகுதியில்லாதவராக இருப்பீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT