Last Updated : 08 May, 2014 12:00 AM

 

Published : 08 May 2014 12:00 AM
Last Updated : 08 May 2014 12:00 AM

வேதத்துக்கு உரை எழுதிய வேதாந்த தேசிகர்

வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் என்ற இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால், ஆச்சாரியனான தேசிகனுக்கு ஏற்றம் தரும் பெருமாளாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீநிவாச பெருமாள் இங்கு. இந்த தேசிகரே வேதத்தின் அந்தத்திற்குப் பொருள் உரைத்தார். அந்தம் என்பது இறுதி என்ற பொருள் கொண்டாலும் இங்கு நிறைவு என்றே கொள்ளப்பட வேண்டும். வேதம் அனாதியானது; என்று தோன்றியது என உறுதியாகக் கூற இயலாது.

ஆனால் அதன் அந்திமத்தை உணர்ந்து அதற்கு அர்த்தம் எழுதியதால் சுவாமி தேசிகனுக்கு வேதாந்த தேசிகன் என்று பெயர். தேசிகன் என்றால் ஆச்சாரியன் என்று பொருள். திருவேங்கடமுடையானின் திருஅவதாரமாக தேசிகன் கருதப்படுகிறார். கண்டாமணியின் அவதாரம் என்றும் குறிப்பிடப்படுகிறார் என்கிறார் அர்ச்சகர் சௌமிய நாராயணன். இந்த தேவஸ்தானம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:

நடாதூர் அம்மான் என்பவரிடம் இவர் சிறு வயதிலேயே சிஷ்யராகச் சேர்ந்தார். அவர் இக்குழந்தையின் அழகைக் கண்டு தன் மடியில் அமர்த்திக் கொண்டார். மேலும் அப்பொழுது வேதப் பொருளை மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார். வேதத்தின் சொல்லிக்கொண்டிருந்த பகுதியின் கடைசி வரியைக் கொண்டே அடுத்த பகுதியின் முதல் அடியைப் பிடிக்க முடியும். அந்த அந்திமப் பகுதியை எடுத்த ஞானக் குழந்தை தேசிகர், பின்னாளில் அதற்கு உரை எழுதியதால், ஸ்ரீவேதாந்த தேசிகன் என்று பெயர் பெற்றார்.

இவரே ஸ்ரீரங்கத்து ரங்கநாதரின் பாதத்தின் உயர்வைக் குறித்து ஆயிரம் பாடல்கள் இயற்றினார். இதற்கு பாதுகா சகஸ்ரம் என்று பெயர். அடி உதவறா மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பது உலக வழக்கு. இங்கு அடி என்றால் பெருமாள் திருவடி என்று பொருள். இத்திருவடிகள் உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்று ஒரு விளக்கம் உண்டு. அந்தத் திருப்பாதங்களே சடாரி என்றழைக்கப்படுகிறது. இதைத் தலையில் வைத்து எடுப்பதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு மேல் ஒரு சிருஷ்டி இருக்கிறது என்பதுதான்.

கேட்ட வரமெல்லாம் தருவதால் பெருமாளுக்கு வரதன் என்ற திருநாமம் உண்டு. திருவகிந்திபுரத்தில் ஔஷதம் என்ற மலையில் சுயம்புவாகத் தோன்றிய ஸ்ரீஹயக்ரீவர், யோகம் செய்து பெறப்பட்டதால் யோக ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறார்.

எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விளக்க ஆகார நியமம் என்ற நூலையும் எழுதி இருக்கிறார். அம்சம் விடு தூது என்ற காவியத்தில் தன்னை நாயகியாகவும் பெருமாளை நாயகனாகவும் பாவித்துக்கொண்டு எழுதுகிறார். இந்த தேசிகனுக்கு அதாவது ஆச்சாரியனுக்கு பிரம்மோற்சவம், பத்து நாள் உற்சவம் நடைபெறுவது இங்கு சிறப்பு.

ஸ்ரீசக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார் பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் ஒரு திருமுகமும் பத்துத் திருக்கரங்களும் கொண்டு அருள்பாலிப்பார். இங்கு இன்னும் விசேஷமாக பத்துத் திருமுகங்களுடன் காட்சியளிக்கிறார். இவருக்குப் பின்னால் யோக நரசிம்மர், சுதர்சன சிம்மன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

வேதாந்த நாயகி

தாயார் திருநாமம் வேதாந்த நாயகி. தமிழில் இத்தாயாருக்குப் பெயர் `இல்லை என்று சொல்லத் தெரியாத தாயார்’. இந்த தாயார் இரண்டு திருமாங்கல்யங்களை அணிந்துள்ளார். ஒன்றில் நரசிம்மரும், மற்றொன்றில் நிவாச பெருமாளும் தங்கச் சிலைரூபமாகக் காட்சி அளிக்கின்றனர்.

பெருமாள்

இந்தப் பெருமாளுக்கு பாஞ்சராத்திர ஆகமப்படி, அதாவது காஞ்சி வரதராஜர் கோவில் முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாதம் பெளர்ணமி பூஜை உண்டு. கோடை அஸ்த நட்சத்தன்று மழை வேண்டி பூஜை நடைபெறும். இப்பெருமாளின் 90-வது ஸ்தாபன தினத்தையொட்டி, அண்மையில் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட துவஜஸ்தம்பத்திற்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டது. மே மாதம் 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் விழா நடைபெறவுள்ளது.

ஜீயர்கள்:

பரகால சுவாமிகள் பிரதானமாக இருந்து பூஜை பண்ணிக் கொண்டு இருக்கிறார். அஹோபில ஜீயர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளுக்கு இந்த பெருமாள் சம்பந்தம் உண்டு. வானமாமலை சுவாமிகள், திருக்குறுங்குடி ஜீயர், சங்கராசாரியார் சுவாமிகள் உட்பட இந்தப் பெருமாளை தரிசிக்க வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x