Published : 21 May 2015 02:11 PM
Last Updated : 21 May 2015 02:11 PM
உலகில் செல்வம் என்று எதையெல்லாம் நாம் கருதுகிறோம்? அவை எல்லாவற்றிலும் மேலானதாக இருக்கிறது பிள்ளைச் செல்வம். கடவுள் தன் சாயலாக மனிதனைப் படைத்தார். அதைப்போலவே உங்களுடைய சாயலாக, உங்கள் குணங்களின் வார்ப்படமாக உங்கள் பிள்ளைச் செல்வம் இருப்பதே அதை நீங்கள் கொண்டாடக் காரணமாக அமைகிறது.
உங்கள் பிள்ளைகளுக்காகத் துடிக்கிறீர்கள்.. உங்கள் பிள்ளைகளுக்காக பொருள்தேடி ஓடுகிறீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத பெற்றோர் என்று யாரும் இருப்பதில்லை. தாயின் கர்ப்பத்தில் உருவாகி, உறுதியான நாழிகையிலிருந்து பிள்ளையின் நலனைப் பற்றி பெற்றோர் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அவன்/அவள் ஆரோக்கியமாக இருப்பானா..? இயல்பான வளர்ச்சி இருக்குமா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பிள்ளைகள் பிறந்து வளரும் காலத்திலோ கவலைகள் அடுக்கடுக்காகச் சேர்ந்துவிடுகின்றன. ஓட்டுமொத்தமாக “தங்களுடைய பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததையே பெற்றோர் விரும்புகிறார்கள்”(சாமுவேல் 1:11)என்று விவிலியம் சுட்டிக்காட்டுவது முற்றிலும் உண்மை. என்றாலும், இன்றைய உலகில், பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததைக் கொடுப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது.
சுய தியாகத்தின் எல்லை
இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பரலோகத் தந்தைக்கு அர்ப்பணிக்கவே தெரிவு செய்திருக்கிறார்கள். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையைத் தினமும் சுமந்து கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக்கா 9:23) என்ற இயேசுவின் வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் பதிய வைத்திருக்கிறார்கள். ஆம், கிறிஸ்தவர் ஒருவரது வாழ்க்கையில் சுய தியாகம் மிகமுக்கியமானது. ஆனால் அது வறுமையோ துன்பமோ நிறைந்த வாழ்க்கை அல்ல.
மாறாக, மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கை. நல்ல வாழ்க்கை. ஏனென்றால் அது கொடுப்பதை உட்படுத்துகிறது, அதனால் இயேசு “வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 20:35) என்று இயேசு கூறினார். அதனால் உங்கள் வாழ்க்கையைக் குழந்தைகளுக்காக கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஆனால் பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ளத் தேவையில்லை என்கிறது பைபிள்.
பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை பிள்ளைகள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும்படி விட்டுவிடுகிறோம். உயர் கல்விக்காக பெற்றோர்கள் சிலர் மிகக் கடினமாக உழைத்து பணத்தை சேமித்து வைக்கிறார்கள். இதற்காக சிலர் கடனும்கூட வாங்குகிறார்கள்.
கொலை, துன்புறுத்தல் தவிர பூமியின் அனைத்து தொழில்களையும் பரலோகத் தந்தை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT