Published : 28 May 2015 01:22 PM
Last Updated : 28 May 2015 01:22 PM
அமெரிக்காவில் முதல் முறையாக வெகு விமரிசையாக ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவம் மூன்று நாட்கள் (மே 22 முதல் 24 வரை), நியூஜெர்சி மார்கன்வில் (Morganville) ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்றது.
ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம் என்ற அமைப்பு, ஒவ்வொரு மாதமும் நியூஜெர்சியில் நாமசங்கீர்த்தனம் நடத்தி வருகிறது. தொடர்ச்சியாக நடந்து வரும் நாமசங்கீர்த்தனத்தின் வளர்ச்சியாக, இந்த ராதா கல்யாண மஹோற்சவம் நியூஜெர்சி ஸ்ரீ சுவாமிநாத பாகவதர் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.
நியூஜெர்சி மற்றும் அமெரிக்காவில் பல இடங்களில் வாழும் மற்றும் சில பாகவதர்கள், சுவாமிநாத பாகவதரோடு இணைந்து, ராதா கல்யாணத்தில் நாமசங்கீர்த்தன பஜனை செய்தனர். இவர்களோடு பல வருடங்களாக நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டு வரும், ஸ்ரீ ராமன் பாகவதரும் பெரும் பங்கு வகித்தார்.
அமெரிக்காவில் வசிக்கும் பல குழந்தைகளும் இந்த மஹோற்சவத்தில் நாமசங்கீர்த்தன பஜனை செய்து, தங்கள் பக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில் பல வருடங்களாக நடந்து வரும் ராதா கல்யாணம், நியூஜெர்சி சுவாமிநாத பாகவதருக்கு ஒரு பெரிய உந்துதலாக அமைந்துள்ளது. இந்த நாமசங்கீர்த்தன சம்பிரதாயத்தை, அமெரிக்காவில் வாழும் இந்திய குடும்பங்களுக்கு- குறிப்பாக இளைஞர்களுக்கு- கொண்டுசெல்ல வேண்டுமென்பது சத்குரு சேவா சமாஜத்தின் இலக்கு.
நாமசங்கீர்த்தன சம்பிரதாயத்தை வளர்ப்பது மட்டுமின்றி, பாகவதர்களுக்கு நிதி உதவி (குழந்தைகள் படிப்பு, மருத்துவ உதவி) அளிப்பது, வேத பாடசாலைகளுக்குப் பொருளாதார உதவி செய்வது, ஓதுவார்களுக்கு மாதாந்திர பொருளாதார உதவி செய்வது எனப் பல காரியங்களுக்கு சத்குரு சேவா சமாஜம் முயன்று வருகிறது.
“ஜீவாத்மா”வும் (ராதாவாக உருவகப்படுத்தி), “பரமாத்மா”வும் (கிருஷ்ணாவாக உருவகப்படுத்தி) ஒன்று சேருவதையே இந்த ராதா கல்யாணம் அடையாளம் காட்டுகின்றது என்கிற உயர்ந்தநிலை தாத்பர்யத்தை, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யக்னசுப்ரமணியன் விளக்கினார்.
தகவல்: கார்த்திக் ஜெயராமன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT