Last Updated : 22 May, 2014 04:44 PM

 

Published : 22 May 2014 04:44 PM
Last Updated : 22 May 2014 04:44 PM

காடோயிஸம்: கண்களே ஆன்மாவின் எஜமானர்

‘டவ் சாவோ தய்’ (Dao Cao Dai) இது ஒரு மதத்தின் பெயர். இதற்குக் கடவுளின் ராஜ்ஜியம் என்று பொருள். இது வியட்நாமின் மூன்றாவது மிகப் பெரிய மதம். இதைப் பின்பற்றுபவர்கள் காடோயிஸ்டுகள் என அழைக்கப்படுகின்றனர். அந்நாட்டிலுள்ள உள்ள மற்ற மதங்களான கிறித்துவம், பெளத்தம், இந்து ஆகிய மதங்களின் கூறுகளை இந்த மதம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வியட்நாமில் உள்ள டெய் நின் (Tay Ninh) என்னும் வியட்நாமிய நகரம்தான் இந்த மதத்தின் மையமாகும். உலகம் முழுவதும் கிட்டதட்ட 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

1919-ம் ஆண்டு வியட்நாம், பிரான்சின் காலனி நாடாக இருந்தபோது வியட்நாமிய அதிகாரிகள் ஒன்று கூடி உருவாக்கிய சமயம். நெகோ வான் சீயூ (Ngo Van Chieu) இதைத் தோற்றுவித்தவர்களில் பிரதானமானவர் எனச் சொல்லப்படுகிறது. 1921-ல் இவர் தனது பதவியைத் துறந்து மதக் கொள்கைகளைப் பரப்பும் பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டார். வியட்நாமில் கிறித்துவம், பெளத்தம் போன்ற வெளிநாடுகளில் தோன்றிய மதங்களே செல்வாக்குடன் இருந்தன. இந்தச் சூழ்நிலையில் வியட்நாமிலேயே தோன்றிய இந்தப் புதிய மதம் மக்களிடம் விரைவாகச் செல்வாக்குப் பெற்றது. அதனால் 1926 வாக்கில் காடோயிஸம் வியட்நாமின் மிகப் பெரிய மதமாக உருவெடுத்தது. ஆனால் 1975-ல் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் காடோயிஸம் தடைசெய்யப்பட்டது. மதத்தைப் பின்பற்றுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதனால் அது செல்வாக்கு இழந்தது. பிறகு இந்த மதம் அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது.

கா தாய், டூயுக்சி மியாமி ஆகிய இருவரும் காடோயிஸத்தின் முக்கியமான கடவுளர். கா தாயை முதன்மையான கடவுள் எனவும், டூயுக்சி மியாமியை ஞானத் தாய் என்றும் போற்றி வணங்குகிறார்கள். ஒன்றுமில்லாமல் இருந்த இந்தப் பிரபஞ்சத்தை இந்தக் கடவுளரே உருவாக்கினர் என அவர்கள் நம்புகிறார்கள்.

முடிவில்லாத இந்த இயற்கையில் நன்மையும் தீமையும் இரு அம்சங்கள் என்று காடோயிஸம் கூறுகிறது. அதுபோல காடோயிஸ்டுகள் உருவத்தை வழிபடுவதில்லை. மாறாக இடது கண்ணையே வழிபடுகிறார்கள். அவர்களது கோயிலின் கர்ப்பகிரகத்தினுள் கடவுளின் இடது கண்ணே உள்ளது. கண்ணே ஆன்மாவின் எஜமானர் என காடோயிஸத்தின் வேதம் குறிப்பிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x