Published : 21 May 2015 12:34 PM
Last Updated : 21 May 2015 12:34 PM

தெய்வத்தின் குரல்: நமஸ்காரம் யாவும் நாராயணனுக்கே

சகலத்தையும் ஆக்கிப் படைத்து, அததற்கும் ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிற அந்த நாராயணனுக்குத்தான் அத்தனை நமஸ்காரத்தையும் வாங்கிக்கொள்கிற ‘ரைட்’ இருக்கிறது. எந்த தேவதையை நமஸ்காரம் பண்ணினாலும் அது கேசவனைத்தான் சேருகிறது. “ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி” என்றே சுலோகம் சொல்கிறோம்.

அந்தக் கேசவன் யாரென்றால் நாராயணன்தான். எல்லாருக்கும் தெரிந்ததுதான், அது விஷ்ணுவின் பெயர். குறிப்பாக கிருஷ்ண பரமாத்மாவை அப்படிச் சொல்வது என்று. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் அந்தப் பேர் வருகிறது.

அதற்கு ஆசார்யாள் பல விதமாக அர்த்தம் சொல்லியிருக்கிறார். அதிலே இங்கே நமக்கு விஷயமாவது: க, அ, ஈச, வ என்ற நாலு சப்தங்களும் சேர்ந்தே ‘கேசவ’ என்று ஆகிறது. ‘க’ என்று பிரம்மாவுக்குப் பேர்; ‘அ’ என்று விஷ்ணுவுக்குப் பேர்; ‘ஈச’ என்பது சிவன்பேர் என்பது தெரிந்ததே.

ஆகையினால் ப்ரம்ம விஷ்ணு - ருத்ரர்கள் ஒன்று சேர்ந்த த்ரிமூர்த்தி க+அ+ஈச=கேச என்றாகிறது. ஸ்ருஷ்டி ஸ்திதி - சம்காரங்களுக்கு தெய்வங்களான இந்த மூன்று பேரையும், அதாவது ‘கேச’வை அவர்களுக்கும் மேலே பரமாத்ம-பராசக்தி ஸ்வரூபமாக இருந்து கொண்டு எவன் தன்வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ அந்தக் ‘கேசவன்’தான் கேசவன்.

அதாவது அவன் முத்தொழில்களில் ஒன்றைச் செய்கிற சுவாமியாக மட்டுமில்லாமல் மூன்றுக்கும் மூல சக்தியாக உள்ள மூர்த்தியே. இதுவேதான் ஆசார்யாள் நாராயணன் என்று சொல்வதும். ஆனபடியால் ‘எல்லா தேவர்களுக்குப் பண்ணும் நமஸ்காரமும் கேசவனுக்கே’ என்றால் ‘நாராயணனுக்கே’ என்றுதான் ஆகும்.

அப்படி மற்ற தேவதைகளுக்குப் பண்ணும் நமஸ்காரங்களே அவனொருத்தனுக்குத்தான் போய்ச் சேருகிறது என்னும்போது மனுஷ்யர்களுக்குப் பண்ணும் நமஸ்காரம் அந்த மனுஷ்யர்களுக்குச் சொந்தமாக முடியுமா? இந்த நமஸ்காரமெல்லாமும் நாராயணனிடந்தான் போய்ச் சேருகிறது.

இதைத்தான் எங்களுக்கு யார், எப்போது நமஸ்காரம் பண்ணினாலும் நாங்கள் நினைவு வைத்துக்கொண்டு அவனுக்கே உரித்தான நமஸ்காரத்தை எங்களுக்கே ‘மிஸப்ரோப்ரியேட்’ பண்ணிக்கொண்டுவிடாமல் அவனுக்கு ‘ரீடைரக்ட்’ செய்வதற்காக ஆசார்யாள் கருணையோடு ஒரு விதி - ஈசியாகத் தோன்றும் விதி போட்டுக் கொடுத்திருக்கிறார். என்னவென்றால், எங்களுக்கு ஒருத்தர் நமஸ்காரம் பண்ணும்போது நாங்கள், “நாராயண, நாராயண” என்று சொல்ல வேண்டும். அதுதான் விதி.

அப்படிச் சொன்னால், பேரைச் சொன்னவுடன் ஆசாமி ஞாபகம் வந்து விடுமோல்லியோ? இங்கே சுவாமிதான் ஆசாமி. அவன் ஞாபகம் வந்தவுடன், ‘எல்லா நமஸ்காரத்திற்கும் உரியவன் அவன்தான். அவன் உரிமையை, உடைமையை நாம் அபகரித்துவிடக் கூடாது’ என்றும் தோன்றி அவனுக்கே நமஸ்காரத்தை அனுப்பி விடுவோமோல்லியோ? அதற்காகத்தான் நாராயண ஸ்மரணத்தை விதித்தார். ‘ஸ்மரணம்’ என்கிறது முக்கியம்.

மாமா மகிமை

ஹிமோத்கிரியே மாதாமகர் என்ற பெருமை, பிதாமகர் என்றே ஒருத்தரில்லாத பெருமை இரண்டையும் பெற்ற விக்நேச்வருக்கு மாமாவை வைத்தும் பெருமை சொல்லியிருக்கிறது. இன்னொரு சுலோகத்தில்

ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜநநீ ஸர்வமங்களா

ஜநக: சங்கரோ தேவ: தம் வந்தே குஞ்ஜராந்தம்

வழக்கத்துக்கு வித்தியாசமாக முதலில் சொன்ன சுலோகத்தில் தாயார் வழித் தாத்தாவில் ஆரம்பித்திருக்கிறது என்றேன். அதற்கும் சமாதானம் இருக்கிறது. பெற்றோரைப் பிரித்துச் சொல்லும்போது மாதா - பிதா, தாய் - தந்தை என்று அம்மாவை முன் வைத்தே சொல்வதுதானே வழக்கமாயிருக்கிறது?

வேதத்திலேயே ‘மாதாவைத் தெய்வமாகக் கொள்ளு' என்ற அப்புறந்தான், ‘பிதாவைத் தெய்வமாகக் கொள்ளு' என்று வருகிறது. அவ்வை வசனமும் ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' என்பதாக இந்த இரண்டு தெய்வங்களில் முதலிடத்தை அன்னைக்கே தந்திருக்கிறது. ஆனதால் இரண்டு தாத்தாக்களைச் சொல்லும்போது முதலில் மாதா மகரைத்தான் சொல்ல வேண்டுமென்று நியாயம் சொல்லலாம்.

அதையும்விட விநோதமாக, இந்த இன்னோரு சுலோகத்தில் பெற்றோருக்கும் முந்தி மாமாக்காரரைச் சொல்லியிருக்கிறது. காந்தோ மாதுலோ யஸ்ய - “எவருக்கு மாமா மகா விஷ்ணுவோ.” மாதுலருக்குப் பிரியமானவர் காந்தன் என்றால் லக்ஷ்மிபதியாக இருக்கப்பட்ட மகாவிஷ்ணு.

இந்தப் பேரைச் சொன்னதால் சுலோகத்தை மங்களமாக  என்று ஆரம்பிப்பதோடு, மாமாவை மட்டுமில்லாமல் மாமியான மகாலக்ஷ்மியையும் சொன்னதாக ஆகிறது. லோகங்களையெல்லாம் பரிபாலிக்கிற மகாவிஷ்ணு, லோகம் நடப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கிற செல்வத்துக்கு அதிதேவதையான மகாலக்ஷ்மி ஆகியவர்களின் மருமானாக இருக்கும் 'பெரிய இடத்துப் பிள்ளை' இது என்று காட்டியதாக ஆகிறது.

சுப்ரஹ்மண்யருக்கு மாமா உறவு ஜாஸ்தி என்று தெரிந்திருக்கலாம். ‘முருகன்' என்றவுடனேயே ‘மால்மருகன்' என்று சேர்த்துச் சொல்கிறோம்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x