Published : 16 Apr 2015 12:47 PM
Last Updated : 16 Apr 2015 12:47 PM
அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்ம உற்சவத்தை ஒட்டிப் பதினோரு நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒன்பதாம் திருநாளன்று மட்டையடி வைபவம் நடைபெறும். கடந்த பங்குனி 20-ம் நாளன்று (ஏப்ரல் 3) நடைபெற்ற இந்த வைபவமும் பக்தர்களின் உற்சாகமான பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தது.
உறையூர் சென்று திரும்பி வரும் நம் பெருமாள் தாயாரைக் காண வருகிறார். ஸ்ரீரங்க நாச்சியாரோ, அவர் வந்தால் கதவைச் சாத்திவிடுமாறும், வாழை மட்டையால் அடித்து விரட்டுமாறும் ஆணையிடுகிறார். இதுவே ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மட்டையடி வைபவம். இந்நிகழ்ச்சியின் பொழுது, தயிர், வெண்ணெய், பலாச் சுளை ஆகியவற்றைத் தாயாரின் தோழிகள், நம் பெருமாள் மீது விட்டெறிவார்கள்.
ஸ்ரீரங்கநாச்சியார் ஏன் பெருமாளை உள்ளே விட வேண்டாம் என்கிறார்? நம் பெருமாள் உறையூர் சென்று வேறு ஒரு பெண்ணுடன் தங்கி வந்தார். இச்செய்தி அறிந்ததால் ஸ்ரீரங்கநாச்சியார் பெருமாளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டுவிடுகிறார். இதுவே ஊடலின் தொடக்கம்.
ஸ்ரீரங்கம் வந்த கதை
ஸ்ரீரங்கன், ஸ்ரீரங்கம் வந்த காரணமும் மட்டையடி பெற்ற காரணமும் சுவாரசியமானவை. ராமர் பட்டாபிஷேகக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் பரிசுப் பொருள்கள் அளித்தார். அப்போது விபீஷணனுக்குத் தான் பூஜித்துவந்த பிரணவாகார திவ்ய மங்கள ரங்க விமானத்தை அளித்தார். இந்த ரங்க விமானமானது நூற்றியெட்டுத் திருப்பதிகளில் முதன்மையானது.
விபீஷ்ணன் இந்த விமானத்தைச் சந்திர புஷ்கரணிக் கரையில் இறக்கி வைக்கிறார். அப்போது உறையூரை ஆண்டுவந்தது சோழ ராஜா தர்மவர்மன். இறக்கி வைத்த அன்றைக்கு மறு நாளே உற்சவம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தர்ம வர்மனின் கோரிக்கையை ஏற்ற விபீஷணன் பத்து நாட்களுக்கு ஸ்ரீ ரங்கநாதரை அங்கேயே வைத்திருக்க அனுமதித்தார் என்கின்றன ஸ்ரீரங்க மகாத்மியமும், லட்சுமி காவியமும். அந்த விமானம் இங்கு இருப்பதால் ஸ்ரீரங்கத்துக்கு பூலோக வைகுண்டம் என்ற பெயர் வந்தது.
அப்போது தர்மவர்ம சோழனின் மகளான இளவரசி கமலவல்லி பெருமாள் மீது அபார பக்தி கொண்டாள். ஆண்டாளைப் போலவே இந்த பக்தியும் பெருமாள் மீதான காதலாக மலர்ந்தது. கமலவல்லியின் ஆழமான அன்பை உணர்ந்த பெருமாள் அவளை மணந்துகொண்டார். நம் பெருமாள் என்னும் பெயரை அழகிய மணவாளன் என மாற்றிக்கொண்டார். மணவாளன் என்றால் மாப்பிள்ளை என்று பொருள். இளவரசி அரங்கனை மணந்ததால் கமலவல்லித் தாயாராகப் போற்றப்பட்டார்.
ஆறாம் திருநாளன்று நம் பெருமாளாகிய அழகிய மணவாளன் கமலவல்லித் தாயாருடன் இருந்தார். தன் கையில் இருந்த கணையாழியை (மோதிரம்) தன் நினைவாகக் கமலவல்லித் தாயாருக்குக் கொடுத்தார்.
வீட்டுக்குத் திரும்பி வந்தால் ரங்கநாயகித் தாயார் பல கேள்விகள் கேட்கிறார். இரண்டு நாளாக மணிச் சத்தமே கேட்கவில்லையே நீங்கள் எங்கே போயிருந்தீர்கள், உறையூர் போயிருந்ததாகத் தகவல் வந்ததே என்று கேட்கிறார் தாயார்.
லீலைகளில் மன்னனான நம் பெருமாள், உறையூரை இதுவரை கண்ணால் பார்த்ததும் இல்லை. காதால் கேட்டதுமில்லை என்கிறார். நெற்றியில் உள்ள திருமண் காப்பு கலைந்தது ஏன்? திருமேனி வாடியது ஏன் என்று மேலும் கேள்விகளைத் தூக்கிப் போடுகிறார் தாயார்.
வேட்டைக்குப் போயிருந்தேன் அப்போது மோதிரம் கழன்று விழுந்துவிட்டது. ஆற்று மணலில் அதனைச் சலித்துத் தேடியபோது உடலை முட்கள் கிழித்தன என்று பதிலளிக்கிறார் பெருமாள். வியர்வை பெருகியதால் திருமண் கலைந்தது என்றார். அதனால் வாட்டமான திருமேனியும், திருமண் காப்பும் கலைந்தது என்று பொய் மேல் பொய்யாக அடுக்கிக்கொண்டே போகிறார் பெருமாள்.
இவர்களுக்குள் இந்தச் சண்டை நிடக்கும்போது, பெருமாளின் மாமனார் பெரியாழ்வார் வருகிறார். தன் மாப்பிள்ளை வெளியே நிற்பதைக் காண்கிறார். உள்ளே வரக் கூப்பிடுகிறார். அதற்கு முன் தாயார் கதவைச் சாத்திவிடுகிறார்.
அழகிய மணவாளன் என்ற ராஜாவை உள்ளே வரவிடாமல் வெளியே நிற்க வைக்கிறார் என்ற அவமானம் உனக்கே அன்றி எனக்கில்லை என்கிறார் பெருமாள். இந்தச் சண்டைதான் திருவிழாவில் நாடகம்போல நிகழ்த்தப்படுகிறது. ஊர்வலம் போய்விட்டு வரும் பெருமாள் பல்லக்கில் உள்ளே வர எத்தனிக்கும் பொழுதெல்லாம் பெரும் கதவு மூடப்படுகிறது. இதனைக் கண்ட பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
தாயாரிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காகவே தன் பெயரை அழகிய மணவாளன் என்று மாற்றிக்கொண்டாராம் பெருமாள். மணவாளன் என்றால் மாப்பிள்ளை. அழகிய என்றால் அழகான மாப்பிள்ளை என்று பொருள்.
தாயாரோ தவறு செய்ததற்காகப் பெருமாளை உள்ளே வரவிடாமல் வெளியே நிற்கவைத்துத் தண்டனை அளிக்கிறாள் அந்தத் தைரிய லஷ்மி. பெருமாள் உள்ளே வரும்பொழுது நான்கு முறை பெருங்கதவை அடைக்கிறார்கள்.
அப்பொழுது பெரியாழ்வார் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே தூது போகிறார். அந்த உரையாடலில் தொனிக்கும் நகைச்சுவை கண்டு பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தாயார் பெருமாளைக் கேள்வி மேல் கேள்வி போட்டுத் தாக்க, பெண்கள் முகமெல்லாம் சிவக்கிறது. ஆண்கள் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.
பெருமாளைக் கதவுக்கு அருகே வர விடாமல் பக்தர்கள் வெண்ணெய், தயிர் ஆகியவற்றை வீசி எறிகிறார்கள். பல்லக்கின் மீது மட்டையடியும் விழுகிறது. எல்லாம் பெருமாளின் மீது தாயாருக்கு ஏற்பட்ட கோபத்துக்காக.
பெருமாளின் குணங்களையும் பக்தர்களுக்கு அருள அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதையும் பெரியாழ்வார் எடுத்துச் சொல்ல, தாயாரின் கோபம் கரைகிறது. பின்னர் பெருமாள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார். தாயாரும், நம் பெருமாளும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி உற்சவம் பெறுகிறார்கள்.
இதற்கு முன்னதாக ஸ்ரீகமலவல்லி நாச்சியாருக்கும், நம் பெருமாளுக்கும் உறையூரில் சேர்த்தி உற்சவம் நடக்கும். பதினோரு நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தை இந்து அறநிலையத் துறை மிகச் சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT