Published : 09 Apr 2015 02:55 PM
Last Updated : 09 Apr 2015 02:55 PM

ஆபத்தில் உதவாதவன் ஆபத்பாந்தவனா?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர் என்பவர். தன்னலம் இல்லாமல் கண்ணனுக்குச் சேவை செய்த உத்தவர், தன் வாழ்நாளில் கண்ணனிடம் தனக்கென நன்மைகளையோ வரங்களையோ கேட்டுப் பெற்றதில்லை.

த்வாபரயுகத்தில், தன் அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில்,  கிருஷ்ணன் ஒரு நாள் உத்தவரிடம், “இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே என்னிடம் கேட்டதில்லை. என் அவதாரப் பணி முடியும் நேரம் வந்துவிட்டது. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டுத்தான், என் அவதாரப் பணியை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என ஸ்ரீ கிருஷ்ணன் கூறினான்.

“பெருமானே நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு. ராஜசூயத்தில் தொடங்கி குருக்ஷேத்திரத்திலே முடித்து வைத்து, நீ ஒரு நாடகம் நடத்தினாயே மகாபாரத நாடகம், அதில் நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத உண்மைகள் பலப்பல உண்டு. அவற்றிற்கெல்லாம் காரணங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள நெடுநாளாக ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?” என்றார் உத்தவர்.

“உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, `பகவத் கீதை’. இன்று உங்கள் கேள்விகளுக்கு நான் தரும் பதில்கள் `உத்தவ கீதை’. அதற்காகவேதான் உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன்.

“அந்தப் பொய்யான பகடைக் காய்களை, தருமனுக்குச் சாதகமாக விழச் செய்திருக்கலாம். மாறாக, திரௌபதியைத் தோற்று, அடிமையாக்கி, அவைக்கு இழுத்து அவள் துகிலை உரித்து, மானம் பறிபோகும் நிலை ஏற்பட்டபோது சென்று, `துகில் தந்தேன். திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக்கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் ஒருவளை சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் அவள் ஆடையில் கைவைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனை நீ காத்ததாகப் பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் அல்லவா ஆபத்பாந்தவன். இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா? நியாயமா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

பகவான் சிரித்தார்.

“விவேகமுள்ளவன்தான் ஜெயிக்க வேண்டுமென்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. `பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் “நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பில் என் மைத்துனன் ஸ்ரீ கிருஷ்ணன் பகடைக் காயை உருட்டுவான் அல்லது எண்ணிக்கையைக் கேட்பான்” என்று சொல்லியிருக்கலாமே? தருமன் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். `ஸ்ரீ கிருஷ்ணன் இந்த சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான். யாராவது தன் பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்” என்றார் பரந்தாமன்.

“அப்படியானால் நீ கூப்பிட்டால்தான் வருவாயா? நீயாக, நீதியை நிலைநாட்ட, ஆபத்துக்களில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?” என்றார் உத்தவர்.

புன்னகை பூத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதுமில்லை. குறுக்கிடுவதுமில்லை. நான் வெறும் `சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன்தான். அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

தெரிந்த புராணம் தெரியாத கதை
(தொகுப்பு 1 விலை: ரூ.150, தொகுப்பு 2 விலை: ரூ.150)
டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி
வெளியீடு: எல்.கே.எம். பப்ளிகேஷன்,
பழைய எண்: 15/4, புதிய எண்: 33/4, ராமநாதன் தெரு,
தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 044-24361141.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x