Published : 16 Apr 2015 12:06 PM
Last Updated : 16 Apr 2015 12:06 PM
“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”
- திருமூலர்
உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார்.
அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.
மேய்த்தலுக்கு இடையே தியானம்
சிவகங்கைச் சீமையை உருவாக்கி முதல் மன்னராக ஆட்சி செய்த சசிவர்ணத் தேவரின் சகோதரர் பூவுலகத் தேவருக்கும் அவருடைய மனைவி குமராயி நாச்சியாருக்கும் கி.பி 1737-ல் பிறந்தவர்தான் முத்துவடுகநாதர். இவர், தமது பெற்றோரின் மறைவுக்குப் பின், மதுரைக்கு அருகிலுள்ள பாலமேடு என்ற கிராமத்துக்குச் சென்றார் . பசியில் வாடிப்போயிருந்த இவரைக் கண்ட ஜெகந்நாதன் என்பவர் உணவளித்து, ஆடு, மாடுகளை மேய்க்கும் பணியைக் கொடுத்தார் .
முத்தவடுகநாதரின் பழக்க வழக்கங்கள் வித்தியாசமாக இருப்பதையும் அவருடைய முகத்தில் தெரிந்த தெய்வீக ஒளியையும் கண்ட ஜெகந்நாதன் அவரைக் கண் காணிப்பதற்காக அவர் ஆடு, மாடு மேய்க்கும் இடத்துக்குச் சென்று பார்த்தார். அங்கே முத்துவடுகர் ஒரு மரத்தினடியில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதையும், அவரது தலைக்கு மேல் ஓர் ஐந்து தலைநாகம் குடை பிடிப்பதைப் போன்று நிற்பதையும் கண்டு திடுக்கிட்டார். இந்தப் பையன் ஒரு சாதாரணப் பிறவி அல்ல என்று அறிந்து கொண்டு அவர் முத்துவடுகநாதரை இனி ஆடு மாடு மேய்க்கப் போக வேண்டாம் என்று கூறித் தமது சொந்த மகனாகவே நடத்தினார்.
அதன் பிறகு முத்துவடுகநாதர் வராஹி அம்மனைப் பூசை செய்வதும், தியானத்தில் ஆழ்வதுமாக இருந்துள்ளார். அப்போதே பல சித்துகளைச் செய்து காட்டியிருக்கிறார்.
நாகமாக மாறிய வேட்டி
ஒரு காலகட்டத்தில் பாலமேட்டிலிருந்து புறப்பட்டுப் பல ஊர்களுக்குச் சென்றுவிட்டுச் சிங்கம்புணரிக்கு வந்தார். அங்கு ஒரு மந்திரவாதி மோடி வித்தைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்தி வருவதை அறிந்து அவனைச் சந்தித்தார். முத்துவடுகநாதரைக் கண்டதும் அந்த மந்திரவாதி அவரைப் பயமுறுத்துவதற்காகப் பல மோடி வித்தைகளைச் செய்தான்.
ஆனால் அவை முத்துவடுகருக்கு முன் பலிக்கவில்லை. முத்துவடுகநாதர் தான் உடுத்தியிருந்த வேட்டியின் ஓரத்தைக் கிழித்துக் கீழே எறிந்தார் . அது ஒரு நாகமாக மாறிச் சீறிக்கொண்டு மந்திரவாதியை விரட்டியது.
அதைக் கண்ட மக்கள் அவரைத் தங்களுடனே தங்கிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அவர் தங்கியிருக்க இடமும் கொடுத்தனர். முத்துவடுகநாதர் தாம் தங்கியிருந்த இடத்தில் வராஹி அம்மனைப் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தார் .
குறிப்பாக, எந்தவித விஷக்கடியாக இருந்தாலும் மந்தரித்துத் திருநீறு இட்டால் விஷம் இறங்கிவிடுமாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவரிடம் முறையிட்டுத் திருநிறு பெற்றுக் குழந்தை பாக்கியம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
முத்துவடுகநாத சுவாமிகள் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே அறிவித்து, அதற்காகச் சமாதியும் தோண்டச் செய்திருக்கிறார் தமது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்வதற்காகத் தமது உருவக் கற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதற்குப் பூசைகள் செய்து உருவேற்றினாராம் . தமக்குப் பிறகு, தமது சொரூபத்தினால் மக்கள் பலனடைய வேண்டும் என்று கூறினாராம்.
அவர் கூறியபடியே 1883-ம் ஆண்டு ஆடி மாதம் ரோஹினி நட்சத்திரத்தில், சமாதியடைந்தார் . அவர் கூறியபடியே சமாதி பீடம் செய்து அவரது உருவச் சிலையை ஸ்தாபிதம் செய்துள்ளனர். அவர் பூசித்த வராஹி அம்மனின் சொரூபத்தையும் அதற்கு இடதுபுறம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
சுவாமிகள் ஜீவசமாதியாகிச் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு மண்டபம் எழுப்புவதற்காகக் கடைக்கால் தோண்டியபோது, பணியாளர் ஒருவரின் கடப்பாரை சமாதிப் பீடத்தின் ஓரத்தில் இடித்துத் துவாரம் ஏற்பட்டுவிட்டது . அந்தத் துவாரத்தின் மூலம் பார்த்தபோது சுவாமிகள் கழுத்தில் வாடாத மல்லிகை மாலையுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தாராம். அவரது உடல் சற்றும் வாடாமல் இருந்துள்ளது. அதனைக் கண்டு அச்சமுற்று, சுவாமிகளுக்குச் சிறப்பு பூசைகள் செய்து, துவாரத்தை மூடியிருக்கின்றனர்.
இன்றும் சுவாமிகளுக்குப் பூசைகள் செய்யும்போது கற்சிலையிலிருந்து வியர்வை துளிர்க்கிறது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் குரு பூஜை மிகவும் சிறப்பாக நடத்தப் பெறுகிறது. சித்ரா பெளர்ணமியன்று ஊரே ஒன்று கூடி சுவாமிகளுக்கு விழா எடுக்கின்றனர் என்பது சிறப்புச் செய்தியாகும் . இன்றைக்கும் தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரது ஜீவசமாதிக்கு வந்து தரிசித்துவிட்டுச் செல்வதிலிருந்து சுவாமிகளின் சக்தி நமக்குப் புலப்படுகிறது .
சுவாமிகளைத் தரிசிக்க: மதுரையி லிருந்தும் காரைக்குடியிலிருந்தும் சிங்கம்புணரிக்குப் பேருந்துகள் உள்ளன. சிங்கம்புணரி பேருந்து நிலையத்திலிருந்து பிரான்மலை செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் சுவாமிகளின் ஆலயத்தை அடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT