Last Updated : 23 Apr, 2015 12:16 PM

 

Published : 23 Apr 2015 12:16 PM
Last Updated : 23 Apr 2015 12:16 PM

மாபாடியம் தந்த மாதவர்

சிவஞான முனிவர் குருபூஜை- ஏப்ரல் 27

பக்தியையும் பழந்தமிழையும் வளர்த்து வான்புகழ் கொண்ட சிறப்புக்குரியவர் சிவஞான சுவாமிகள் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமிகு சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் சிவனிடத்து நீங்கா அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனந்தக்கூத்தர் மயிலம்மையார்.

இவ்விருவரும் செய்த தவத்தின் பயனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்கு ‘முக்காளலிங்கர்’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முக்காளலிங்கருக்கு ஐந்து வயது நிரம்பியது. அவன் தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார்.

ஒரு நாள் பள்ளி சென்று இல்லம் திரும்பினான் சிறுவன். வருகின்ற வழியில் காவியுடை அணிந்த சுவாமிகள் சிலர் வருவதைக் கண்டான். அப்போது மிகுந்த அன்புடன் அவர்களை வணங்கி, பணிவுடன் ‘சுவாமிகள் அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்து உணவு உண்டு விட்டு செல்ல வேண்டும்’ என்று வேண்டி நின்றான். அச்சுவாமிகள் அனைவரும் சிறுவனின் குணத்தைப் பாராட்டி, இல்லத்துக்கு வர இசைந்தனர்.

வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் சுவாமிகள் இருக்கும் திருமடம் சென்று வணங்கி ஆசி பெற்றனர். முக்காளலிங்கர் துறவு நிலை அடைய விருப்பம் கொண்டு திருமடத்திலேயே தங்கினார்.

குருவருளால் துறவு நிலை

முக்காளலிங்கருக்குச் சித்தாந்த நூல்களைக் கற்றுத் தந்து அவருக்குக் குருவாக விளங்கியவர் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீவேலப்ப சுவாமிகள். இவரது குருவாகிய வேலப்பர், இவரின் அறிவுத் திறனையும், ஒழுக்கத்தையும் கண்டு ‘சிவஞானம்’ எனும் பெயர் வழங்கி அருளினார்கள். அதுமுதலாக முக்காளலிங்கர், சிவஞான சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

குருவருளால் துறவு பூண்ட சுவாமிகள் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடி வழிபாடு செய்யத் தொடங்கினார். ஒருமுறை திருநெல்வேலிக்கு அருகிலுள்ள இராசவல்லிபுரம் சென்றார் சுவாமிகள். அங்கு அருளும் அம்மையாகிய அகிலாண்டேசுவரி மீது பதிகம் பாடி அங்கேயே அரங்கேற்றினார். இதுவே இவர் எழுதிய முதல் நூலாகும்.

சுவாமிகளின் திருத்தலப் பயணங்கள்

ஒரு சமயம் சிவஞான முனிவர் திருப்பாதிரிபுலியூருக்குத் தல யாத்திரை சென்றார். அங்கு சில காலம் தங்கினார். அங்கு ஒருநாள் கோயிலின் முன் புலவர்கள் பேரவை ஒன்று கூடியது. அப்பேரவையில் செல்வந்தர் ஒருவர் நூறு பொன் கட்டிய பொன் முடிப்பை அவை முன்பு வைத்தார். ‘கரையேறவிட்ட முதல்வா உன்னை அன்றியுமோர் கதியுண்டாமோ?’ என்ற அடியை நான்காவது அடியாகக் கொண்டு ஒரு செய்யுள் இயற்றுபவருக்கு அப்பொன்முடிப்பு தரப்படும் என்று அறிவித்தார்.

அன்று மாலை வரையிலும் அப்பாடலை எவரும் பாடி முடிக்கவில்லை. இதனை அறிந்த ஏழை ஒருவன், அவ்வூரில் தங்கியிருந்த சுவாமிகளிடம் சென்று பாடலைப் பாடித் தரும்படி கேட்டார். சுவாமிகளும் ஏழையின் வறுமையை நீக்கும் பொருட்டுப் பாடலை எழுதிக் கொடுத்தார்.

ஏழை பாடலை வாங்கி அவையில் படித்துக் காட்டி பொன் முடிப்பை பெற்று மகிழ்ந்தார். சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள ஊர் கலசை. அங்கு உறையும் விநாயகர் செங்கழுநீர் விநாயகர். இக் கடவுள் மீது முனிவர் பாடிய நூல் ‘செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ். இந்நூலுக்கு ஒரு சிறப்புண்டு. விநாயகர் மீது பிள்ளைத் தமிழ் பாடிய மரபில் இந்நூலே முதல் நூலாகும்.

காஞ்சிபுரத்தில் சிவஞானமாபாடியம் சுவாமிகள் காஞ்சிபுரம் பயணம் மேற்கொண்டபோது அங்கு நெடுநாள் தங்கி, சிவஞான மாபாடியத்தை எழுதி முடித்தார். இந்நூல், இதுவரை தமிழிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ள மாபாடியங்கள் அனைத்திலும் இது சிறந்த நூலாகும். இது மட்டுமின்றி காஞ்சி புராணம், சோமேசர் முதுமொழி வெண்பா, இலக்கண விளக்க சூறாவளி உள்ளிட்ட பல சிறந்த நூல்களை அருளியுள்ளார்.

சிவனின் திருவடி நிழலில் சைவ சித்தாந்தத்தை உணர்த்திய சிவஞான சுவாமிகள் ஒரு சித்திரை மாதம் ஆயிலிய நட்சத்திரத்தன்று சிவனது திருவடி நிழலில் கலந்து முக்தி பெற்றார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஆயிலியத்தன்று விக்கிரமசிங்கபுரம், காஞ்சிபுரம், திருவாவடுதுறை, சுசீந்திரம் ஆகிய ஊர்களில் இவரது குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x