Published : 09 Apr 2015 03:09 PM
Last Updated : 09 Apr 2015 03:09 PM
நபிகளாரின் திருச்சபை. அங்கே ஒரு இளைஞர் வந்தார். அவரது முகம் கோபத்தால் சிவந்திருந்தது. உதடுகள் துடிதுடிக்க, “இறைவனின் தூதரே! என் தந்தையார் எனது பொருளை நினைத்த போதெல்லாம் எடுத்துச் செலவழிக்கிறார்! அவரது போக்கு எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது!” என்று புகார் தொடுத்தார்.
நபிகளார் அந்த இளைஞரை அமைதிப்படுத்தி அவரது தந்தையை அழைத்து வரும்படி பணித்தார். சற்று நேரத்தில் தொலைவில் ஒரு உருவம் தெரிந்தது. வளைந்த முதுகு. தளர்ந்த நடை. நடுங்கும் உடல். பழுத்த நரை. இடுங்கிய கண்கள். கையில் ஒரு தடி ஊன்றியபடி நடக்க முடியாமல் நடந்து ஒரு முதியவர் அங்கு வந்து சேர்ந்தார்.
அவரை, அரவணைத்து பக்கத்தில் இருத்திக் கொண்டு மகனின் குற்றச்சாட்டை சொல்லி நபிகளார் விசாரித்தார். அதைக் கேட்டு முதியவர் கண் கலங்கினார். வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறினார். சற்று நேரத்துக்கு பின் தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தார்.
“இறைவனின் தூதரே! இதோ.. இங்கே.. நிற்கும் என் மகன் ஒரு காலத்தில் குழந்தையாக மிகவும் பலவீனமானவனாக, எதையும் செய்ய இயலாதவனாக இருந்தான். அப்போது, நானோ மிகவும் பலசாலியாக, நினைத்ததைச் செய்யும் வலிமை உள்ளவனாக இருந்தேன். இதோ இப்போது இளைஞனாக நிற்கும் இவன், அவனது குழந்தைப் பருவத்தில் எல்லா தேவைகளுக்கும் என்னைச் சார்ந்து வாழும் நிலையில் வெறுங்கையுடன் இருந்தான். ஆனால், இன்றோ…நான்…. இறைவனின் தூதரே!” மேற்கொண்டு பேச முடியாமல் முதியவர் துக்கத்தில் தடுமாறினார்.
சற்று நேர இடைவெளிக்குப் பிறகு பெருமூச்சு விட்டுக் கொண்டே அவர் தொடர்ந்தார். “இன்றோ நான் மிகவும் பலவீனமானவனாக ஆகிவிட்டேன் இறைவனின் தூதரே! இவனோ இளமையுடன் பலசாலியாக இருக்கின்றான். இந்த தள்ளாமையில் எனது தேவைகளுக்காக இப்போது இவன் தன் உடமைகளைப் பகிர்வதைத் தடுக்கிறான் இறைவனின் தூதரே!” என சொல்லும்போதே, முதியவர் குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழலானார்.
இதைக் கேட்டு கொண்டிருந்த நபிகளாரும் கண் கலங்கி விட்டார். கலங்கிய கண்களுடனேயே அந்த இளைஞரை நோக்கி நபிகளார் சொன்னார். “நீயும்.. உனது உடமைகளும் உனது தந்தையாருக்கே சொந்தம்!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT