Published : 30 Apr 2015 12:14 PM
Last Updated : 30 Apr 2015 12:14 PM

விவேகானந்தர் மொழி: அன்பு செய்வது கடினம்

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒருவன் நம்பத் தொடங்கிய உடனே, அவனைக் காண்பதற்கான ஏக்கத்தால் பித்தனாவான். பிறர் தத்தம் வழியில் சென்று கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது வாழ்ந்து வருகின்ற வாழ்வைவிட மிக உயர்ந்த வாழ்வு ஒன்று உள்ளது என்ற உறுதியைப் பெற்றவன், புலன்களே எல்லாம் அல்ல, அழிவற்ற, என்றுமுள்ள, இறவாத ஆன்ம இன்பத்தோடு ஒப்பிடும்போது எல்லைக்குட்பட்ட இந்த ஜடஉடல் வெறும் பூஜ்யம் என்ற உறுதி வரப்பெற்றவன், அந்தப் பேரின்பத்தைத் தானே உணரும்வரை பித்தனாகத்தான் ஆவான்.

இந்தப் பைத்தியம், இந்தத் தாகம், இந்த வெறிதான் ஆன்மிக `விழிப்புணர்வு’ எனப்படுவது. இது தோன்றிய பின்னரே ஒருவன் ஆன்மிகவாதியாகத் தொடங்குகிறான். ஆனால் இந்த நிலை தோன்ற நீண்ட காலம் தேவைப்படும்.

உருவங்கள், சடங்குகள், பிரார்த்தனைகள், தீர்த்த யாத்திரைகள், சாஸ்திரங்கள், மணிகள், மெழுகுவர்த்திகள், பூஜாரிகள் ஆகிய எல்லாமே வெறும் ஆயத்தங்கள்தான். இவை ஆன்மாவின் அழுக்குகளை நீக்குகின்றன. ஆன்மா தூய்மை அடைந்ததும், தன் சொந்த இருப்பிடத்தை இயல்பாகவே நாடுகிறது. அந்த இருப்பிடம் தூய்மை அனைத்திற்கும் உறைவிடமான இறைவனே.

பல நூற்றாண்டுகளாகத் தூசி படிந்து மூடிக் கிடக்கின்ற ஓர் இரும்புத் துண்டு காலங்காலமாக ஒரு காந்தத்தின் அருகே இருக்கலாம், எனினும் அதனால் கவரப்படாதிருக்கும்; தூசு அகற்றப்பட்டால் உடனே காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது. அதுபோலவே காலங்காலமாகப் படிந்த தூசும், மாசும், தீமையும், பாவமும் மூடியுள்ள மனித ஆன்மா, இந்த வழிபாடுகளாலும், சடங்குகளாலும், பிறருக்கு நன்மை செய்வதாலும் பிற உயிர்களை நேசிப்பதாலும், பல பிறவிகளுக்குப் பிறகு போதிய அளவு தூயதாக்கும்போது, அதற்கு இயல்பாயுள்ள ஆன்மிகக் கவர்ச்சி வெளிப்படுகிறது. அது விழிப்படைகிறது. இறைவனை நோக்கிச் செல்லப் பாடுபடுகிறது. என்றாலும் இந்த உருவங்களும் சின்னங்களும் வெறும் ஆரம்பமே; அவை உண்மையான இறையன்பு ஆகாது.

அன்பைப் பற்றிப் பேசுவதை எங்கும் கேட்கிறோம். இறைவனை நேசி என்று ஒவ்வொருவனும் சொல்கிறான். ஆனால் அன்பு செய்வது என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியுமா என்றால், கிடையாது. தெரிந்திருந்தால் அவ்வளவு எளிதாக அதைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஒவ்வொருவனும் தன்னால் அன்பு செய்ய இயலும் என்கிறான். ஐந்து நிமிடம்தான் அதற்குள் தன் இயல்பில் அன்பு இல்லை என்பதைக் கண்டுகொள்கிறான். அன்பைப் பற்றிய பேச்சு உலகில் நிறைந்துள்ளது. ஆனால் அன்பு செய்வது கடினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x