Published : 02 Apr 2015 12:41 PM
Last Updated : 02 Apr 2015 12:41 PM
ஸ்ரீ சங்கர பக்த ஜன சபை நடத்தும் வேத பாடசாலைக்கு எங்களை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று நாங்கள் கேட்டதுதான் தாமதம், அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான ஜி. வைத்யநாதன் உடனே முன்வந்து, என்னையும் புகைப்படக்காரரையும் காஞ்சிபுரத்தில் வேதம் கற்றுத்தரப்படும் அனைத்து இடங்களுக்கும் ஆர்வமாகக் கூட்டிச் சென்றார்.
81 வயதாகும் வைத்யநாதன் பணி ஓய்வுக்குப் பிறகு தன்னுடைய வாழ்நாளை பரமாச்சார்யரின் லட்சியமாக இருந்த பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுவிட்டார். ஆங்காங்கே நாம் பார்த்த காட்சிகளுக்கு விளக்கம் தந்தும், கேள்விகளுக்குப் பதில் அளித்தும் நம்முடைய பயணம் சிறக்க உதவி செய்தார்.
நாங்கள் முதலில் சென்ற இடம், சாலைத் தெருவில் காஞ்சி மடத்துக்கு எதிரில் இருக்கும் தியான மண்டபமாகும். பரமாச்சார்யரின் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நிறுவப்பட்ட எழிலான 100 அடி தூண் முதலில் நம்மை வரவேற்கிறது. சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பல்வேறு புகைப்படங்கள் உருவில் பெரிதாக்கப்பட்டு சுவர்களை அலங்கரிக்கிறது. மகா ஸ்வாமிகள், சந்திரமௌளீஸ்வரருக்கு அர்ப்பணிப்போடு செய்யும் பூஜையை அச்சு அசலாகப் பார்த்து வரைந்த ஓவியர் சில்பியின் பிரமிப்பான ஓவியம் வண்ணமயமாகக் காட்சி தருகிறது.
“அங்கே பாருங்கள் திருவாங்கூர் மகாராஜாவுடன் ஸ்வாமிகள் இருக்கிறார், இதோ பாருங்கள் காசி மகாராஜா” என்று குழந்தையைப்போன்ற உற்சாகத்தோடு புகைப்படங்களை நமக்குச் சுட்டிக்காட்டி விளக்குகிறார் வைத்யநாதன்.
மகா பெரியவரின் வேகமான நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒரு இளைஞர் திணறும் காட்சியைக் காட்டி, “அது நான்தான், திருமணத்துக்கு முன்னால் அப்படி இருந்தேன்” என்று நாணுகிறார்.
“மிகச் சிறந்த சில புகைப்படக்காரர்கள் அவரிடத்தில் கொண்ட பக்தியும் அன்பும் அயராத உழைப்பும்தான் இத்தனை அரிய புகைப்படங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தன” என்று திருச்சி ரமேஷ், வோல்டாஸ் கிருஷ்ணசுவாமி, விக்னேஷ் ஸ்டுடியோ என்று பலரை நினைவுகூர்கிறார்.
“தன்னைப் புகைப்படங்கள் எடுக்க பெரியவா அனுமதித்தது உண்டா?” என்று வியப்புடன் கேட்டபோது, “நிச்சயமாகச் சொல்ல முடியாது; திடீரென்று, ‘போதும் கேமராவை மூடு’ என்று பெரியவா சொல்லுவா, அவர்கள் மூடிவிடுவார்கள்” என்று பதில் அளிக்கிறார். கல்கி பத்திரிகையின் சீதா ரவி, தினமணி, தி இந்து ஆகிய பத்திரிகைகளிலிருந்தும் நிறைய புகைப்படங்களைப் பெற்றோம் என்று தெரிவிக்கிறார்.
சாம வேத பாடசாலை
மண்டபத்தில் பெரியவர் சிலா ரூபமாக எழுந்தருளியிருக்கிறார், பூஜைகள் நடக்கின்றன. வெளியூர் பயணங்களின்போது பெரியவாளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல்லக்கு இங்கே பாதுகாக்கப்படுகிறது. இந்த இடத்தில் சாம வேதம் கற்றுத்தரப்படுகிறது. இன்னிசை வடிவில் அமைந்த சாம வேதத்திலிருந்து சிறு பகுதியை அங்கு கூடிய இளம் சாமகர்கள் இசைத்தது மெய்மறக்கச் செய்தது.
இந்தப் பாடசாலை தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் 396 பேர் சாம வேதம் படித்து பட்டம் வாங்கிச் சென்றுள்ளனர். பெரியவாளின் ஆக்ஞைப்படி 1978-ல் இந்த பாடசாலை தொடங்கப்பட்டது. பெரியவர் அப்போது மகாராஷ்டிரத்தின் சதாரா என்ற ஊரில் முகாமிட்டிருந்தார். ‘ஸ்ரீ மகா ஸ்வாமி வித்யா பீட அறக்கட்டளை’யைத் தொடங்கி வேதம் கற்றுக்கொடுக்க ஸ்வாமிகள் அங்கிருந்தபடியே அனுக்கிரகித்தார். வழக்கமாக தன்னுடைய பெயரையோ, படத்தையோ பயன்படுத்த அனுமதிக்காத ஸ்வாமிகள், இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் வேத சம்ரட்சணத்துக்காக அனுமதித்தார்.
என்னையும் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கப் பணித்தார். இந்தப் பாடசாலையை நடத்த அனந்தநாராயண சாஸ்திரி என்ற வேத பண்டிதரை ஸ்வாமிகளே நியமித்தார். இன்னொரு வைத்யநாதன் உள்பட மொத்தம் 9 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். எந்தவிதத்திலும் அரசிடமிருந்து உதவி எதையும் கேட்கக்கூடாது என்று ஸ்வாமிகள் கண்டிப்புடன் கூறிவிட்டார்.
அறச் சிந்தனையாளர்கள் வேத சம்ரட்சணத்துக்காகத் தரும் நன்கொடையில் வேதங்கள் கற்றுத்தரப்படுகின்றன. கணம் உள்பட அனைத்தையும் கற்றுக்கொள்ள ஒரு மாணவனுக்கு 9 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. 6 ஆண்டுகள் தொடர்ந்து வேதம் படிப்பவர்கள் வைதீக காரியங்கள் செய்வதற்கான தகுதிகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்.
“எல்லா மாணவர்களும் வேதம் கற்பதில் சமமான திறமை பெற்றவர்களாக இருக்க மாட்டார்களே?” என்று கேட்டதற்கு, “உண்மைதான், இங்கு வித்யார்த்தியின் சக்திக்கு ஏற்ப லகுவாக சொல்லித்தரப்படுகிறது. கற்றுக்கொள்வதில் சூட்டிகையாக இருப்பவர்களும் மந்தமாக இருப்பவர்களும் உண்டு.
ஆனால் யாரையும் திருப்பி அனுப்பிவிடக்கூடாது என்று பெரியவா கூறியுள்ளபடியால் எல்லோருக்கும் அவரவர் வேகத்துக்கேற்ப கற்றுக்கொடுத்து தகுதியுள்ளவர்களாக்கி அனுப்புகிறோம்; வேகமும் ஆர்வமும் இல்லை என்று மாணவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டால் அவர்கள் மனதளவில் தாழ்ச்சி அடைவார்கள், சிலர் சோம்பியும் திரிவார்கள் என்பதால் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்று ஸ்வாமிகள் கூறியதை அப்படியே கடைப்பிடிக்கிறோம்” என்றார்.
ரிக் வேத பாடசாலை
அடுத்து நாங்கள் சென்றது ஆனைக்கட்டித் தெருவுக்கு. கோடை வெயில் அதிகமாக இருந்தாலும் வைத்யநாதன் அதைக்கண்டு சோர்ந்துவிடவில்லை. ஒரு வீட்டின் முன்னால் நின்றுகொண்டு, “இங்குதான் மகா ஸ்வாமிகளுக்கு கனகாபிஷேகம் நடந்தது” என்று தெரிவித்தார். அங்கே ஸ்வாமிகளின் மிகப்பெரிய புகைப்படம் இருந்தது.
“ஸ்வாமிகள் எளிமையைக் கடைப்பிடித்தவர் ஆயிற்றே, கனகாபிஷேகத்துக்கு எப்படி சம்மதித்தார்?” என்று வியப்பு மேலிடக் கேட்டோம். “பலமுறை நாங்கள் கேட்டு, அவர் கூடாது என்று மறுத்துவிட்டார்; கடைசியாக நாங்கள் எல்லோரும் மன்றாடி கேட்டுக்கொண்டதற்குப் பிறகு எங்களுக்காகச் சம்மதித்தார்” என்ற வைத்யநாதன், இங்கே ரிக் வேதம் கற்றுத்தரப்படுகிறது என்றார்.
வேத பாடசாலை மாணவர்களைப் பார்க்கும்போதெல்லாம், “மதியம் என்ன சாப்பிட்டாய்? பால் தொடர்ந்து கிடைக்கிறதா? காலையில் எத்தனை மணிக்கு எழுந்துகொள்கிறாய்?” என்றெல்லாம் கேட்பதற்கு வைத்யநாதன் தவறுவதே இல்லை.
ஆனைக்கட்டித் தெருவில்தான் ‘பிரதிவாதி பயங்கரம்’ அண்ணங்கராச்சாரியார் என்ற வைணவப் பெரியவர் வாழ்ந்துவந்தார். மகா ஸ்வாமிகள் அவருடன் நன்கு பழகுவார். வைணவம் தொடர்பாக ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் அவரிடம் கேட்பார், அவரும் மகிழ்ச்சியோடு பெரியவருடன் பேசுவார். தேனம்பாக்கம் கோவிலில் உள்ள பிரம்மதீர்த்தத்துக்கு அனுஷ்டானங்களைச் செய்வதற்காக அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி வருவது உண்டு; ஸ்வாமிகள் அதுபற்றி அவரிடம் வேடிக்கையாக எதையாவது கேட்பார், அவரும் வேடிக்கையாக பதில் அளிப்பார்” என்று நினைவுகூர்கிறார் வைத்யநாதன்.
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
அடுத்தது சிவஸ்தானம். அமைதியான கிராமச் சூழலில் அமைந்திருக்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோவில். நகர வாசனையே தீண்டாத இக்கோவில் பரமாச்சாரியாருக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. பெரியவருடைய சாந்நித்தியம் இங்கே நிறைந்து இருக்கிறது. கடிகாரம் ஓடாததைப் போல காலம் இங்கே உறைந்து கிடக்கிறது.
“இதோ இந்த அறையில்தான் பெரியவர் ஒரு முழு ஆண்டு தொடர்ந்து தங்கியிருந்தார். அந்த ஓராண்டு காலத்தில் வெளியுலகம் எப்படி இருக்கிறது என்று ஸ்வாமிகள் பார்க்கவே இல்லை. மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே மற்றவர்களுடன் ஏதாவது ஒருவகையில் தொடர்பு கொள்வார்” என்றார்.
அந்த அறை அப்படியே இப்போதும் பராமரிக்கப்படுகிறது. அவருக்குத் தொண்டுபுரிய அனுமதிக்கப்பட்டவர்களில் வைத்யநாதனும் ஒருவர். ஸ்வாமிகளின் மிகப்பெரிய புகைப்படமும் தூங்கா மணிவிளக்கும் அவர் அங்கே தொடர்ந்து வாசம் செய்துகொண்டிருக்கும் தெய்வீக உணர்வை ஏற்படுத்தியது.
“அதோ சின்ன ஜன்னல் தெரிகிறதல்லவா, அதன் வழியாகத்தான் ஸ்வாமிகளுக்கு ஒரு கைப்பிடி அளவு மட்டுமே அவல் தரப்படும். ஆரம்ப காலத்தில் தர்ப்பைப்புல்லால் தரையை அவரே பெருக்குவார். நீங்கள் நீராடச் செல்லும்போது இந்தக் கைங்கரியத்தை நாங்கள் செய்கிறோம் என்று கெஞ்சுவோம். சில நாள்களில் அவர் வருவதற்குள் தரையைத் தூய்மைப்படுத்திவிட்டு சிட்டாகப் பறந்துவிடுவோம்” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.
பெரியவரின் அனுஷ்டானங்களுக்காகத் தண்ணீர் இறைக்கப்பட்ட கிணறு இன்றும் அப்படியே தூய்மை கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
“அந்தக் கிணற்றுக்கு அந்தப் பக்கத்தில்தான் இந்திரா காந்தி நின்றுகொண்டிருந்தார்; ஸ்வாமிகள் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஸ்வாமிகள் கையை உயர்த்தி அவருக்கு ஆசி வழங்கினார்.” என்று அந்த நாளை நினைவுகூர்ந்தார்.
அருகில் இருந்த கணபதி கோவிலை ஸ்வாமிகள் உள்ளிருந்தபடியே தரிசிக்க உதவிய ஜன்னல் இப்போது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. கோபுர தரிசனத்தைப் பார்ப்பதற்காக அவருக்காக அமைக்கப்பட்ட மரப் படிகளும் இப்போதும் அதே இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
“ஒரு காலை மட்டும் மடித்துத் தூக்கிவைத்து இரு உள்ளங்கைகளையும் தலைமீது வைத்து, காமாட்சியம்மன் தவமிருந்ததைப் போலவே மகா ஸ்வாமிகளும் சில நேரங்களில் நின்று கொண்டிருப்பார்” என்றார்.
“ஏன்?”
“யாருக்குத் தெரியும்; மடத்தில் அவருக்கிருந்த மிகச் சில வசதிகளைக்கூட வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு ஓராண்டுக்காலம் அறையைவிட்டு வெளியே வராமல் தவமிருந்தது ஏன் என்பதும் அவருக்குத்தான் தெரியும்” என்ற பதில் வந்தது வைத்யநாதனிடமிருந்து.
“இந்த இடத்தில் அப்போது ஏராளமான புதர்கள் மண்டிக் கிடந்தன. மனித நடமாட்டமே இருக்காது. ஒருநாள் அவர் ஆழ்ந்து தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று அவருடைய தொடையில் ஏறி சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப்போனோம். அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது; அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை. மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள் ஜன்னல் வழியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.
அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது, அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம். அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது. பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார்” என்று பழைய நினைவில் மீண்டும் ஆழ்ந்தார் வைத்யநாதன்.
யஜுர் வேத பாடசாலை
“இங்கே யஜுர் வேதம் கற்றுத்தரப்படுகிறது. இது தனியாருக்குச் சொந்தமான இடம். ஸ்வாமிகளுடைய முன்னேற்பாட்டால் இந்த இடம் மடத்திடம் தங்கியது, இல்லாவிட்டால் சில கடன்களுக்காக இது கைமாறியிருக்கும்” என்றார் அவர்.
இங்கே தரை சரிவாக இருக்கிறது. சில அடிகளுக்கு அப்பால் பச்சைப் பசேலென்று செடிகள் வளர்ந்துள்ளன. “இதுதான் பிரம்மதீர்த்தம். இந்தத் தண்ணீருக்கு பல வியாதிகளைத் தீர்க்கக்கூடிய அரிய தன்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் திருக்குளத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டுத்தர ஒரு நன்கொடையாளர் முன்வந்திருக்கிறார். விரைவிலேயே இது பழைய நிலையை எட்டிவிடும்” என்று அவர் நம்பிக்கையுடன் கூறுவது நம் உள்ளத்தைத் தொடுகிறது.
“பெரியவாளின் கருணையால் அவருடைய மனதுக்கு உகந்த வேத சம்ரட்சண திட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவர் பாதை வகுத்துக் கொடுத்தார், நாங்கள் அதில் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் வைத்யநாதன் அடக்கமாக.
தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT