Published : 16 Apr 2015 12:34 PM
Last Updated : 16 Apr 2015 12:34 PM

மஹா அமிர்தம்: ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

கம்போடியக் கல்வெட்டில் ஒரு ‘பகவத் சங்கர'ரின் காலில் அறிஞருலகம் முழுவதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பதுபோலத் தங்களுடைய சிரசுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத்பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்?

‘‘கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப பாகம் வரை ஆசார்யாளின் காலம்' என்பதற்கும் ஒத்துப்போகிறதே என்ன சொல்கிறீர்கள்?” என்பது ஒரு ஆர்க்யுமென்ட்.

இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் சங்கேதக் கணக்கு சுலோகம் கலியில் 3889-ம் வருஷமான கி.பி. 788-ஐச் சொல்லும்.

இந்த இரண்டும் ஒன்றையே, ஒருவரையே குறித்ததாகத் தெரிவதால் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாகச் சொல்லி விடலாம்.

ஆசார்ய பீடங்களில் ஆதி பகவத்பாதாளுக்கு அப்புறமும் மகாபெரியவர்களாக லோக பிரசித்தியுடனிருந்த சில சுவாமிகள் வந்திருக்கிறார்கள். இப்போது ஆசார்யாளின் கிரந்தங்களாக, ஸ்தோத்திரங்களாக வழங்கி வருகிறவற்றில் சில இப்படிப்பட்டவர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றேன் அல்லவா?

நமக்கு நல்ல சரித்திர ஆதாரங்களுடன் தெரிபவராக வித்யாரண்ய சுவாமிகள் இருக்கிறார். பதிநாலாம் நூற்றாண்டில் அவதாரம் பண்ணிய அவர்தான் விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்படுவதற்கே காரணமாயிருந்தவர். இந்து மதத்திலேயே அப்போது கர்நாடகம், அதையொட்டிய ஆந்திர சீமைப் பகுதிகள் ஆகியவற்றில் மத்வ மதமும் வீரசைவமும் அத்வைதத்தைக் கபளீகரம் பண்ணாமலும், அவர்தான் ரக்ஷித்துக் கொடுத்தார்.

சிருங்கேரி மடத்துக்கு ஒரு புது சோபையை உண்டாக்கித் தந்து இன்னும் அநேக மடங்களையும் அந்தப் பிரதேசத்தில் ஸ்தாபித்து நம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயம் தழைத்தோங்கும்படிச் செய்தார். ‘பஞ்சதசீ' ‘ஜீவன் முக்தி விவேகம்', ‘வையாஸிக ந்யாயமாலை' முதலான அநுபவ கிரந்தங்களான உசந்த அத்வைத நூல்களை உபகரித்த அவரேதான் பூர்வாச்ரம சகோதரருடன்கூட நாலு வேதங்களுக்கும் பாஷ்யம் ஏற்படவும் காரணமாயிருந்தவர்.

அம்மாதிரி இங்கே “அபிநவ சங்கரர்” என்றே பிரசித்தி பெற்ற ஒருவர் இருந்திருக்கிறார். ( காஞ்சி மடத்தின் முப்பத்தெட்டாவது பீடாதிபதிகளாக விளங்கியவர்). ‘அபிநவ' என்றால் ‘மறு அவதாரம்' என்று அர்த்தம். ஆதி ஆசார்யாளே இவராக மறுபடி வந்திருக்கிறார் என்று அவரை உலகம் கொண்டாடியிருக்கிறது. அதனால்தான் “தீர சங்கரேந்த்ர ஸரஸ்வதி" என்ற அவருடைய பெயர் மறைந்துபோய் “அபிநவ சங்கரர்” என்றே வழங்கலாயிற்று.

ஆசார்யாளுக்கு அப்புறம் சில நூற்றாண்டுகள் வைதிக மதம் மட்டும் கொடி கட்டிப் பறந்தாலும் அப்புறம் மறுபடி பௌத்தம் முதலிய மதங்களும், காபாலிகம் முதலான வாமசார மதங்களும் கிளம்பின. முன் மாதிரி இவை ஜன சமூகத்தில் பெரிய செல்வாக்குப் பெற முடியாதபடி ஆசார்யாள் போட்டுக் கொடுத்த அஸ்திவாரமே உறுதியாயிருந்தது.

ஆசார்யாளுக்கு 1300 வருஷத்துக்கப்புறம் அபிநவ சங்கரர் தோன்றி ஆசார்யாளை போலவே தேசம் பூராவும் சஞ்சாரம் பண்ணி, அந்த மற்ற மதங்களை நிராகரணம் செய்து சர்வக்ஞ பீடமும் ஏறியிருப்பதாக அவருடைய சரித்திரங்களிலிருந்து தெரிகிறது.

அவர் அந்நிய தேசங்களுக்கும் போய் தர்மோத்தரணம் செய்தாரென்றும் சொல்லியிருக்கிறது. சைனாக்காரர்கள், துருஷ்கர்கள், பாஹ்லீகர்கள் (Balk என்று ஆப்கானிஸ்தானில் உள்ள இடம்) முதலியவர்கள்கூட அவரைத் தங்கள் ஆசார்யராகப் பூஜித்தார்கள்.

சீன துருஷ்க பாஹ்லிகாத்யைஸ் ஸ்வபராசார்யதயா ஸ்துதம் என்று “குரு ரத்ந மாலா” சொல்கிறது (சுலோகம்-66).

இவரையும் ஆதிசங்கர பகவத் பாதரையும் ஒன்றாகவே நினைத்துத்தான் சில சங்கரவிஜய புஸ்தகங்களிலேயே மாறுபாடான விஷயங்களைச் சொல்லியிருக்கக்கூடும்.

ஆதி ஆசார்யாளின் அவதார காலத்தைச் சொல்வதாக நினைக்கப்படும் “நிதிநாக” சுலோகமும் வாஸ்தவத்தில் இந்த அபிநவ சங்கரரின் அவதாரத்தைச் சொல்வதுதான் என்று பண்டிதர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

“ஸுஷமா” வியாக்கியானத்தில் சங்கரேந்த்ர விலாசத்திலிருந்து இவருடைய அவதார காலத்தை quote செய்திருக்கிறது. அதுவும் சங்கேத சங்கியையில்தான் இருக்கிறது.

ஆராய்ச்சி என்று போகாமல் அநுகிரகம் என்று போகும்போது ‘ஆதி' என்றும் ‘அபிநவம்' என்றும் வித்தியாசப்படுத்தவே கூடாதுதான். ‘ஆதி'யினுடைய புது அவதாரமே இவர் என்பதால்தானே 'அபிநவ' என்பது.

தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x