Published : 09 Apr 2015 02:52 PM
Last Updated : 09 Apr 2015 02:52 PM

கைகூப்பிய ஆஞ்சனேயர்

கடினமான செயல்களைக்கூட அசாத்தியமாகச் செய்யக்கூடியவர் ஆஞ்சனேயர். இவரை வணங்கினால், பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தடைகள், துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அத்தகைய ஆஞ்சனேயர் ஆழ்வார்ப்பேட்டையில் கோயில் கொண்டு பல்லாண்டுகளாக அருள்பாலித்துவருகிறார். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகின்றனர்.

ஆழ்வார்ப்பேட்டை தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வளாகத்தில் உள்ளது இந்த ஆஞ்சனேயர் திருக்கோயில். இங்கு ஆஞ்சனேயர் கை கூப்பிய நிலையில் காணப்பட்டாலும், இந்த வங்கியின் பழைய கட்டிடத்தின் மொட்டை மாடிச் சுவரின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சனேயர், வில், அம்பு ஏந்திய கோலத்தில் தான் காட்சி அளித்தார்.

இக்கட்டிடம் புனரமைக்கப்பட்ட போது, இந்தச் சிலையை அகற்றியிருக்கிறார்கள். முதலில் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறிய அளவில் சன்னிதி அமைத்தனர்.

இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கோடைகாலத்தை முன்னிட்டு அக்னி நட்சத்திரத்தின்போது ஸ்ரீஆஞ்சனேயரை குழந்தை போல் பாவித்து வெயிலின் உக்கிரம் தாக்காதபடி வெட்டி வேர் தட்டியால் பந்தலமைத்து, பன்னீர் தெளித்துக் குளிர்விக்கிறார்கள்.

தனுர் மாதம் என்று சொல்லப்படும் மார்கழி மாதம் ஆஞ்சனேயருக்கு ஷோடச உபசாரங்கள் செய்யப்படும். அதே மாதம் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு மூன்று நாள் முன்னதாக ஆஞ்சனேயருக்கு சந்தனாதி தைலக் காப்பிட்டுவிடுவதால், அப்போது அவரது திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, செந்தூரக் காப்பு உட்பட வெள்ளிக் கவசம் மற்றும் முத்தங்கி சேவையில் ஆஞ்சனேயர் அற்புதமாகக் காட்சி அளிக்கிறார். மேலும் ஆஞ்சனேயருக்கே உரித்தான வடைமாலை, துளசிமாலை, வெற்றிலை மாலை ஆகியவை பக்தர்களின் விருப்பத்தின் பேரிலும் அணிவிக்கப்படும். ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தல் அற்புதம்.

கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், ஆரோக்கியம் உட்பட பல வேண்டுதல்களை இந்த ஆஞ்சனேயர் நிறைவேற்றுகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x