Last Updated : 02 Apr, 2015 01:27 PM

 

Published : 02 Apr 2015 01:27 PM
Last Updated : 02 Apr 2015 01:27 PM

குலம் காக்கும் குமரன்

பங்குனி உத்திரம் ஏப்ரல் 3

முருகன், தமிழகம் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் தனக்கெனத் தலம் அமைத்துக்கொண்டு அருள்பாலிப்பவன். ஆறுமுகன் அழகன். முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். இந்த அழகனின் பெயர் முருகன் என்றானது பொருத்தமே. முருகனுக்கு உரிய பிரசித்தி பெற்ற ஆறு தலங்களை ஆறுபடை வீடு என்று அழைக்கிறோம்.

போருக்குச் செல்லும் தளபதி தனது படைகளுடன் தங்கி இருக்கும் இடம் படை வீடு என அழைக்கப்படுகிறது. சூரபதுமனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான், தங்கி இருந்த தலம் திருச்செந்தூர்.

சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்கள் உண்டு. இது ஆற்றுப்படுத்துதல் என்ற பொருள் கொண்டு விளங்குகிறது. வறுமை நீங்கி வளமாய் வாழும் ஒருவர், வறுமையில் உழலுபவரிடம் வள்ளல்கள் இருக்கும் இடத்தைக் கூறி அங்கு சென்றால் வறுமையை ஒழித்துவிடலாம் என்பார். இதனால் ஏழையின் மனம் ஆறுதல் அடைகிறது. இது போலவே இறைவனான முருகன் அருள் கூர்ந்து பக்தர்களின் வறுமையை ஒழிப்பான் என்ற அர்த்தத்தில், அவன் குடி கொண்டுள்ள ஆறு தலங்களைக் குறித்துப் பாடினார் நக்கீரர். அதுவே திருமுருகாற்றுப்படை.

திருமணம் நடக்கும் திருப்பரங்குன்றம்

தேவர்களைத் துன்புறுத்திவந்த சூரபத்மனை அழிக்க முருகன், முதலில் படை வீடு கொண்டது இங்குதான். வென்றான் முருகன். சூரபத்மனை மயிலாக மாற்றித் தனது வாகனமாக்கிக்கொண்டார். போரின்போது சேவலாக முகம் காட்டிய சூரபத்மனை அழித்துத் தனது கொடி ஆக்கிக்கொண்டார் முருகன்.

இந்த வெற்றிக்குப் பரிசாக அழகிய தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத் தந்தான் இந்திரன். அந்தச் சீர் மிகுந்த நாள் பங்குனி உத்திரம். இந்த நன்நாளில் இன்றும் பக்தர்கள் குன்றுதோறும் குடி கொண்டுள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் செய்துவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

குருவருள் கிட்டும் திருச்செந்தூர்

வியாழ பகவான் தேவர்களின் குரு. இவர் முருகப் பெருமானுக்குக் காட்சி அளித்து, சூரபத்மனை வெல்ல ஆசி வழங்கினார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப, சூரபத்மனை வென்ற பின் திருச்செந்தூரிலேயே கோயில் கொண்டார் முருகன்.

ஆறுபடை வீடுகளில் இத்தலம் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளது. மற்ற ஐந்து தலங்களும் மலைக்கோயில். சூரசம்காரத்திற்குப் பிறகு முருகனின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதற்குச் சாயாபிஷேகம் என்று பெயர். சாயா என்றால் நிழல் அல்லது பிம்பம்.

ஆரோக்கியம் நல்கும் பழநி

முருகன் நவ பாஷணத்தால் ஆனவர். நவ என்றால் ஓன்பது என்பதால், ஒன்பது வகை மூலிகைகளைக் கொண்டு சித்தர் திலகம் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலா ரூபம். பழநிக்குத் திருஆவினன்குடி என்ற புராணப் பெயரும் உண்டு. இதன் பொருள் திரு - மஹாலஷ்மி, ஆவி - கோமாதா, இனன் - சூரியன், கு - பூமாதேவி, டி - அக்னி ஆகியோர் வழிபட்ட தலம் என்ற ஐதீகமும் உண்டு.

நன்மை விளையும் சுவாமிமலை

சிவனுக்குப் பிரணவ மந்திரத்தின் பொருளை உணத்தி, சிவனாகிய சுவாமிக்கே நாதன் ஆனதால் சுவாமிநாதன். மூலவருக்கு நேர் எதிரே அமைக்கப்பட்டுள்ள வாகனம் இந்திரனுடைய ஐராவதம் என்ற யானை. ஹரிகேசன் என்ற அரக்கனை வெல்ல சுவாமிநாதப் பெருமாள் அருளியதால், சுவாமி மலை முருகனுக்கு இந்திரன் தன் காணிக்கையாக ஐராவத யானையைத் தந்ததாக ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் இந்தத் தலத்திற்கு வந்தால் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

துன்பம் தீரும் திருத்தணி

தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு முருகப் பெருமான் சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து, கோபம் தணிந்து, அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் ‘தணிகை’ எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம, வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணிந்த இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்தது என்பர் சான்றோர்.

வெற்றி தரும் பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை முருகன் வெற்றிவேல் முருகன் ஆவார். வள்ளி, தெய்வயானை சமேதராக முருகன் காட்சியளிக்கிறார். திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் வருகை தருகின்றனர். பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற நூபுர கங்கை புனித ஊற்றாகக் கருதப்படுகிறது. தேனும் தினை மாவும் முருகனுக்கு உகந்த நைவேத்தியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x