Published : 12 Mar 2015 01:22 PM
Last Updated : 12 Mar 2015 01:22 PM

சமணக் காஞ்சி திருப்பருத்திகுன்றம்: ஆன்மிக நூலகம்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள இந்த இடம் சமணக் காஞ்சி எனப்படும். இது பல்லவர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இடமாகும். இது வேகவதியாற்றங்கரையில் காஞ்சிக்கு இரண்டு கல் தொலைவில் உள்ள கலைப்பீடமாகும்.

இந்த இடத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று பல்லவர் காலத்துக் கோயில் எனலாம். மற்றொன்று பிற்காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.

இத்தலத்தில் சமண மடம் ஒன்று இயங்கி வந்ததாக வரலாற்றுக் குறிப்பின் வாயிலாக அறியமுடிகிறது. தமிழகத்தில் கி.பி.640-ல் சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இங்கு விஜயம் செய்ததாகவும், அச்சமயம் காஞ்சி மாநகரில் எண்பத்து மூன்று ஜைனக் கோவில்களைக் கண்டு சென்றதாகவும் தன் பயணக்குறிப்பில் குறிப்படப்பட்டுள்ளது.

ஸ்ரீசந்திரப்பிரப ஸ்வாமி ஆலயம்

முதலில், பரந்த நிலப்பரப்பில், படிக்கட்டுகளுடன் கோபுரம் அமைப்பு விளங்க எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரப்பிரபருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மலையென விளங்கும் பருத்திச் செடி தீர்த்தங்கரரின் உருவை மறைக்காமல் இருக்க இப்படி விமான அமைப்புடன் இருந்திருக்க வேண்டும் என்றும், தீர்த்தங்கரர் உயரத்தில் அமைந்துள்ள காரணத்தால் மக்கள் இக்கோயிலை ஏர்வாஸ்தலம் என்றும் மலையனார் கோயில் என்றும் அழைக்கப்பட்டதாக இத்தல வரலாறு ஆய்வுநூல் எழுதிய அறிஞர் டி.என்.ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோயில் ராஜசிம்மன் காலத்தில் (கி.பி.690-728) உருவாகியிருக்க வேண்டும் என்பதை ராஜசிம்ம கால சிற்பக்கலைப் பாணியை வைத்து காலவரையறை செய்து அறிஞர்கள் கூறுகின்றனர்.

வர்த்தமானர் கோயில்

மூலவர் வர்த்தமானர் உயர்ந்த பீடத்தின் மீது, தேவர்கள் கவரி வீச, முக்குடை கவிப்ப, ஆழ்ந்த தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இருப்பத்து நான்காவது தீர்த்தங்கரராகிய வர்த்தமானரை திரிலோகநாதர் என்று அழைப்பர்.

வர்த்தமானர் கோயிலில் புஷ்பதந்தர், தர்மதேவி ஆகியோருக்காக கோயில்கள் உள்ளன. வர்த்தமானர் கோயிலில் அர்த்தமண்டபம், முக்கிய மண்டபம், சங்கீத மண்டபம், சாந்தி மண்டபம், வலம் வரும் பாதை, கோயில் கிணறு, சுற்றுச் சுவர்கள் எனச் சிறப்பான உள்கட்டமைப்புகளுடன் முழுமையாகப் பல்லவர்களின் கட்டடக்கலை நேர்த்தியுடன் வெளிப்படுகிறது.

பிரம்ம தேவர்

சீதளநாதர தீர்த்தங்கரர் யக்ஷன், பிரம்ம தேவருக்கான சிறிய கோயில் மண்டப அமைப்புகளுடன் விளங்குகிறது. பிரம்ம தேவரின் வாகனம் யானை ஆகும். அடுத்து சாந்தி மண்டபம், ஜென்மாபிஷேக மண்டபம் என்பன உயர்ந்த அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

திரிகூட பஸ்தி

ஆறாவது தீர்த்தங்கரரான பத்ம்பிரபா, 12-வது தீர்த்தங்கரரான வாசு பூஜ்யர், 23-வது தீர்த்தங்கரரான பார்ஸவநாதர் ஆகிய மூவருக்கான கோயில்கள் முதலாம் காலத்தில் கட்டப்பட்டவைகளாகும்.

தலவிருட்சம்

குராமரம் இத்தலத்தின் தலவிருட்சம் ஆகும். தர்மகுரா என்று கூறப்படும் இம்மரம் தன்னளவில் குன்றாமலும் குறையாமலும் விளங்கி, நாட்டின் மன்னரது நல்லாட்சியை உயர்த்தி நிற்பதாகக் கூறுவர்.

கலைநகர் காஞ்சியில் ஜினகாஞ்சி

அ.நீலகேசி, 51, வள்ளல் பச்சையப்பன் தெரு

காஞ்சிபுரம்-631 501. தொடர்புக்கு: 9944521719

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x