Last Updated : 19 Mar, 2015 01:27 PM

 

Published : 19 Mar 2015 01:27 PM
Last Updated : 19 Mar 2015 01:27 PM

ராமதாசருக்கு அருளிய ராமன்

ராம நாமம் மூலம் மக்களுக்கு மன உறுதியை ஏற்படுத்தியவர் பத்ராசலம் ராமதாசர். இவர் பன்னிரு ஆண்டுகள் சிறை வாசம் பெற்றார். இவரை மீட்க ராம, லட்சுமணன் இருவரும் வேறு உருவத்தில் வந்து, மன்னனுக்கு முதலுடன் வட்டியையும் கட்டி மீட்டனர்.

பத்ராசலம் ராமதாசர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராசலத்தில் வாழ்ந்தார். லிங்கண்ணா என்பவருக்குப் பிறந்த ராமதாசருக்கு பெற்றோர் வைத்த பெயர் கோபண்ணா. ராமதாசரின் தாய் பெயர் கமலம்மா.

கோபண்ணா பஜனைப் பாடல்கள் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவரது கனவில் வந்ததாகச் சொல்லப்படும் கபீர்தாசர், கோபண்ணாவுக்கு, ராமதாசர் என்ற பெயரைச் சூட்டி, ராம நாமத்தையும் உபதேசம் செய்தாராம்.

அற்புதங்கள் செய்த ராமர்

அன்றைய தினம் ராமதாசர் இல்லத்தில் விருந்திற்கு ஏற்பாடாகி இருந்தது. அப்போது அவர்களுடைய குழந்தை, சாதத்தில் இருந்து வடிகட்டி, மூடாமல் வைத்திருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து முழ்கி இறந்துவிட்டது. இதனை ராமதாசர் மனைவி அறிந்திருந்தாலும் விருந்து நல்லபடியாக முடிய வேண்டும் என்பதால் இது குறித்து ராமதாசரிடம் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

வேதனையை உள்ளத்தில் அடக்கிக்கொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறி முடித்தார். உணவு உண்ட அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னர் ராமதாசரிடம் இதனைத் தெரிவித்தார். ராமனையே முழுமையாக நம்பி இருந்த ராமதாசர், தன் இல்லத்தில் இருந்த ராம விக்கிரகத்தின் முன் அக்குழந்தையைக் கிடத்தி பஜனைப் பாடல்களைப் பாடினார். குழந்தை தூங்கி எழுந்தது போல் விழித்தெழுந்ததாம்.

அன்னதானம் செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் ராமதாசர். தன் சொத்து, வருமானம் ஆகியவற்றைக் கொண்டு ஏழைகளுக்கு அன்னம் பாலித்து வந்தார். இதனால் இவரும் வறுமை அடைந்தார். உணவின்றி வயிறு காய்ந்தது. ராமனே நேரே வந்து உண்வளிப்பார் என்று கூறிக்கொண்டு எம்முயற்சியும் இன்றிக் காணப்பட்டார்.

அலுவலை மறந்த ராமதாசர்

பின்னர் அவரது மனைவியின் தூண்டுதலினால் ஆந்திர மாநிலம் ஹைதராபாதை ஆண்டு வந்த தானிஷா என்ற முஸ்லீம் மன்னரை வேலைக்காக அணுகினர். அவருக்கு பத்ராசலத்திலேயே தாசில்தார் பதவி அளிக்கப்பட்டது. வரி வசூலித்து மன்னனுக்கு அனுப்ப வேண்டியதே இவரது பிரதான அலுவல்.

ராமன் மீது பக்தி அதிகரித்ததால் அவருக்கான கோயிலைக் கட்டத் தொடங்கினார். அந்தக் கோயிலில் மென்மேலும் வசதிகளை அதிகரித்தார். தெய்வ விக்கிரகங்களுக்கு பொன் நகைகளை வாங்கிக் குவித்தார். மன்னனுக்கு பணம் அனுப்ப வேண்டியதையே மறந்தார். இவர் பணம் அனுப்பாத விஷயம் அறிந்த மன்னன் தானிஷா, ராமதாசருக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறை வாசம் விதித்தார்.

சிறையில் வாடிய ராமதாசரை சிறை ஊழியர்கள் கொடுமைப்படுத்தினர். வாதை தாளாமல் மனமும், உடலும் வருந்த ராமரிடம் காப்பாற்றக் கோரினார் ராமதாசர். அவர் கோரிக்கையை நிறைவேற்ற திருவுளம் கொண்டார் ராமர். அதிகாரிகள் போல் தோற்றம் கொண்ட இருவர் மன்னன் தானி ஷாவிடம் ராமதாசர் கட்ட வேண்டிய தொகை முழுவதையும் கஜானாவில் கட்டினர். அந்த இருவர் ராமர் மற்றும் லட்சுமணர். பணம் கட்டிவிட்டதால் ராமதாசரை மன்னன் விடுதலை செய்தான். நிகழ்ந்தவை அனைத்தையும் அறிந்த ராமதாசருக்கு வந்த இருவரும் ராம, லட்சுமணரே என்பது புரிந்தது.

முஸ்லிம் மன்னரானாலும் தானிஷா, கோயில்களுக்கு கொடை அளிப்பவர். அவருக்கு ராமன் காட்சி அளித்த இந்த நிகழ்வை தனது கீர்த்தனையில் புனைந்து பாடியுள்ளார் ராமதாசர். நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள் இயற்றிய ராமதாசருக்கும், ராமர் காட்சி அளித்தாராம். இவரது பாடல்களில் ராமனைக் குறித்த, ` நீ நாமம் ஏமி ருசிரா, அதி எந்த ருசிரா` என்ற தெலுங்குப் பாடல் மிக பிரசித்தம்.

வட நாட்டுக் கிராமங்களில் ராம நாமம் கூறியபடியே சென்ற ராமதாசரை மக்கள் பின் தொடர்ந்து சென்றபடி ராம நாம பாடல்களை கேட்டு வாங்கிப் பாடினர். இதனால் மக்கள் மிகுந்த மன எழுச்சியைப் பெற்றனராம்.

ராமதாசர் அனுமனின் அம்சம் என்பது ஆன்றோர் வாக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x