Published : 19 Mar 2015 01:23 PM
Last Updated : 19 Mar 2015 01:23 PM
இயற்கையைத் தெய்வமாக வழிபடும் மரபு உலகம் முழுவதும் இருந்துள்ளது. கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து போன்ற பெரும் மதங்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்த நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் இயற்கையைக் குறிப்பவைதான். மம்மி வாட்டா (Mami wata) அம்மாதிரியான தெய்வங்களுள் ஒன்று.
மம்மி வாட்டா, பரவலாக ஆப்பிரிக்கா முழுவதும் வணங்கப்பட்டுவரும் பெண் தெய்வம். இதன் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வரை செல்கிறது. மம்மி வாட்டா என்ற சொற்களின் அர்த்தம் ‘தண்ணீர்த் தாய்’ எனச் சொல்லப்படுகிறது. Water Mother என்னும் ஆங்கிலச் சொற்களில் இருந்து இந்தச் சொல் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் பழமையான எகிப்திய மொழியில் இருந்து திரிந்த சொற்கள்தான் இவை எனத் தற்கால ஆய்வுகள் சொல்கின்றன. இந்தச் சான்றின் அடிப்படையில் மம்மி வாட்டா வழிபாடு முதலில் எகிப்தில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.
மம்மி வாட்டா கோயில்
மம்மி வாட்டா உருவம் கலை ரீதியாக இன்றும் கொண்டாடப்படும் தொன்ம வடிவமாக உள்ளது. மம்மி வாட்டா சிலைகள் கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனச் சொல்லப்படுகின்றன. இன்று கிடைக்கும் மம்மி வாட்டா ஓவியங்கள், மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருகின்றன. அடர்ந்த சுருள் கூந்தலை விரித்துப் போட்டிருக்கும் மம்மி வாட்டா தோளின் குறுக்காக மலைப்பாம்பை அணிந்திருப்பாள்.
பழமையான சிலைகளிலும் இந்த உருவமே செதுக்கப்பட்டிருக்கிறது; ஆடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிற்காலப் படங்கள் மம்மி வாட்டாவை ஆடையுடன் பிரம்மாண்டமாகச் சித்திரிக்கின்றன. மம்மி வாட்டா கோயில்கள் ‘மமஸ்ஸீ’ (mamaissii) என அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்களில் பெண்களே பூசாரி களாக உள்ளனர். அவர்களும் ‘மமஸ்ஸீ’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். தமிழ்த் திராவிட வழிபாட்டுக்கும் மம்மி வாட்டா வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக விவியன் ஹண்டர் ஹிண்ரோவின் ஆய்வு முடிவு சொல்கிறது.
மிகப் பழமையான மம்மி வாட்டாவின் கரு எனச் சொல்லப்படும் ஒரு வழிபாட்டுச் சிற்பத்தைத் தமிழ் லிங்க வழிபாட்டுடன் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு ஹிண்ரோ வருகிறார். இந்தியாவிலும் தண்ணீரைப் பெண் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இங்குள்ள காளி வழிபாட்டுடனும் இதை ஒப்பிடுகிறார் அவர்.
அருளும் துடியான தெய்வம்
நம்முடைய நாட்டார் தெய்வங்களைப் போல மம்மி ஆப்பிரிக்க கண்டப் பகுதிகளில் துடியான தெய்வமாகப் போற்றப்படுகிறாள். சொல்லுக்கடங்காத சூரத்தனங்கள் கொண்டவளாகவும் மம்மி வாட்டா தொன்மக் கதைகளில் சித்திரிக்கப்படுகிறாள். அவளது ஆக்ரோஷத்தை வெள்ளப் பெருக்குக்கும் அவளது கருணையை நீரின் அமைதிக்கும் ஒப்பிடுகிறார்கள்.
துன்பங்களை, வலிகளை, பாவங்களை வாங்கிக்கொண்டு மக்களுக்கு மனசாந்தியை வழங்கக்கூடியவள் மம்மி வாட்டா. குழந்தையில்லாப் பெண்களுக்கு குழந்தைப் பேற்றை அருளக்கூடியவாளாகவும் மம்மி வாட்டா வணங்கப்படுகிறாள். இன்றைக்கு மம்மி வாட்டா வழிபாடு கியூபா, பிரேசில், நைஜீரியா, கானா, ஜமைக்கா, ஹெய்டி எனப் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT