Published : 13 May 2014 08:01 PM
Last Updated : 13 May 2014 08:01 PM
மனிதனை விசாரங்களிலிருந்து விடுவித்து உயர்த்துவதற்காகத்தான் எல்லா மத சம்பிரதாயங்களும் தோன்றியிருக்கின்றன. மற்ற பிராணிகளுக்கு இல்லாத விசாரம் இவனுக்கு இருப்பது மட்டுமில்லை. இவன் முயன்றால் விசாரத்திலிருந்து விடுபடுவது மட்டும் இல்லாமல், மற்ற பிராணி வர்க்கம் எதுவும் பெற முடியாத ஞானத்தைப் பெற முடியும் என்று மத சித்தாந்தங்கள் யாவும் கூறுகின்றன.
உலக விவகாரங்களை எல்லாம் இயக்கி வைக்கிற ஒரு மஹா சக்தியைப் தஞ்சம் புகுந்தாலே விசாரங்களிலிருந்து விடுபடலாம் என்று பொதுவாக இந்த எல்லாச் சித்தாந்தங்களும் ஒரே குரலில், ஏகமனதாகச் சொல்கின்றன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம், இன்னும் கிருஸ்துவம், இஸ்லாம் முதலிய எந்தச் சம்பிரதாயங்களும் சரி, பக்தி எல்லாவற்றுக்கும் பொது.
புத்தர் பக்தியைச் சொல்லாவிட்டாலும், பௌத்தர்களால் பக்தியில்லாமல் முடியவில்லை. அதனால்தான் புத்தரையே ஸ்வாமியாக்கி, வேறு எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்குப் பெரிய பெரிய மூர்த்திகளைக் கொண்டு அவருக்குப் பூஜை செய்கிறார்கள். ரொம்ப சமீப காலத்திலும்கூடப் பல ஞானிகள் ஆத்ம விசாரம் ஒன்றை மட்டும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இவர்களுடைய உபதேசங்களை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மஹான்களையே தெய்வமாக வழிபடத்தான் செய்கிறார்கள். பக்தி என்பது அப்படி இயல்பாக உடம்போடு பிறந்த ஒன்று.
அத்வைதத்தின்படி பக்தி செலுத்துகிறபோது, ஈசுவரன் வேறு, நாம் வேறு என்ற எண்ணம் இல்லாமல், அதுவே நாம் என்ற அபேத பாவத்தைக் கைக் கொள்ள வேண்டும். பகவான் என்று மகாசக்தியாக, சர்வக்ஞான (எல்லாம் அறிந்தவன்) ஒன்றை வைத்துப் பக்தன் என்ற அல்ப சக்தன், கிஞ்சித்ஞன் (சிறிதே அறிந்தவன்) பக்தி பண்ணுகிறான். இரண்டும் எப்படி ஒன்றாகும் என்று கேட்கலாம்.
அப்படியானால் பகவானுக்கு நாம் வேறா, பகவானுக்கு வேறாக மற்ற வஸ்துக்கள் இருக்கின்றனவெனில் அதெல்லாம் எங்கிருந்து வந்தன? வேறாக எங்கிருந்தோ வந்த வஸ்துக்களை அவன் எப்படி ஆட்டிப் படைக்க முடியும்? இப்படி யோசித்துப் பார்த்தால் ஒரே பரமாத்மாதான் ஈசுவரன் என்கிற சமுத்திரமாகவும், பலவிதமான ஜீவராசிகளான குளம், குட்டை, கிணறுகளாகவும் ஆகிக் கடைசியில் உத்தரணி ஜலத்தில் வந்து நிற்கிறது என்று தெரியும். சக்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கலாம்.
ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒரே வஸ்துதான். அந்த அடிப்படைக்குப் போனால் நாம் அதுவாகவே ஆகிவிடுவோம். இதுதான் அத்வைத முக்தி.
வெறும் புத்திபூர்வமாக (intellectual) இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. இது அநுபவ சித்தியாக வேண்டும். இதற்கு ஈசுவரக் கிருபை இருந்தால்தான் முடியும். நம்மை எல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியின் அநுக்கிரகம் இருந்தால்தான், இந்த ஆட்டம் ஒய்ந்து அடிப்படைக்குப் போக வேண்டும் என்ற அத்வைத நாட்டமே நமக்கு வரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஈச்வராநுக்ரஹாத் ஏவ பும்ஸாம் அத்வைத வாஸனா.
பகவான், பக்தன் என்று பிரிந்தே தோன்றுகிற ஆரம்ப ஸ்திதியிலுங்கூட, பகவானாக எந்தப் பரமாத்மா வந்திருக்கிறதோ அதுவேதான் பக்தனாகிய நாமாகவும் ஆகியிருக்கிறது என்ற நினைவைக் கொஞ்சம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் பகவானிடம் நம் அன்பும் அதிகமாகும். ஏனென்றால், நம்மைவிட, நமக்குப் பிடித்தமான, அன்பான வஸ்து இல்லை அல்லவா.
நம் காரியங்கள் அனைத்திற்கும் பலன் தருகிற ஈசுவரன், நாம் பக்தி பண்ணப் பண்ண அதற்குப் பலனாக மேலும் மேலும் அவனை நெருங்க அநுக்கிரகம் செய்வான். தான்யார், எப்படிப்பட்டவன் என்பதையெல்லாம் அவனே தெரியப்படுத்துவான். நாம் அவனை ஆராய்ந்து பார்க்க வேண்டாம். அவனே நம் பக்திக்கு இறங்கித் தன் இயல்பைத் தெரியப்படுத்துவான். கீதையில் பகவான் இப்படியே சொல்லியிருக்கிறார். “பக்த்யா மாம் ஆபிஜானாதி யாவான்யச்சாமி”.
இவ்வாறு ஈசுவரனின் அனந்த கல்யாண குணங்களை அறிந்தபின் அதையே பக்தர்கள் ரசித்தார்கள். ஞானியோ இந்தக் குணங்களுக்கு ஆதாரமான நிர்குண சத்திய நிலையை பகவதநுக்கிரஹத்துடன் அடைந்து அதில் இரண்டறக் கலந்து விடுகிறான். இதற்கும் ஸகுண உபாஸனைத்தான் ஆரம்பமாயிருக்கிறது.
இந்த ஸகுண உபாஸனை - அல்லது மூர்த்தி வழிபாட்டுக்காகத்தான் இஷ்டதேவதை என்ற கருத்து நம் மதத்தில் இருக்கிறது.
மற்ற மதங்கள் கடவுள் என்கிற ஒன்றைச் சொல்வதோடு நின்றுவிடுகின்றன. ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நம்முடைய ஸநாதன தர்மம் அந்த ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழிபடுவதற்காகப் பல ரூபங்களில், பல தெய்வ வடிவங்களில் நமத்துக் காட்டுகிறது. இந்த ரூபங்கள் வெறும் கற்பனையில் உண்டாக்கப்பட்டவை அல்ல. ஒன்றாக இருக்கிற பரமாத்மாவேதான் இப்படிப் பல மகான்களுக்குத் தரிசனம் தந்திருக்கிறார்.
அவரவர்கள் அந்தந்த மூர்த்திகளிடம் பிரத்தியட்சமாகப் பழகி உறவாடி பக்தி செய்திருக்கிறார்கள். அதே மாதிரி நாமும் தரிசிப்பதற்காக இன்ன மந்திரம், இன்ன விதமான உபாஸனையைப் பின்பற்றினால் இன்ன தேவதா ரூபத்தின் தரிசனத்தைப் பெறலாம் என்று வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
வழிபாட்டுமுறை எதுவானாலும் பக்தி என்கிற பாவம் பொதுவானது. நம் மதத்திலுள்ள பல தெய்வங்களின் உபாஸனைக்கு மட்டுமின்றி, எந்த மதமானாலும் பக்தி என்பது மத்திய ஸ்தானத்தில் உள்ளது.
தெய்வத்தின் குரல்
(முதல் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT