Published : 19 Mar 2015 12:28 PM
Last Updated : 19 Mar 2015 12:28 PM

நிற்பதுவே நடப்பதுவே

சமணத் தத்துவம், உயிரற்ற பொருட்களைப் பற்றி விவரிக்கும்போது தர்மாத்திகாயம், அதர்மாத்திகாயம் எனும் இரு அத்திக்காயங்களை சமணம் விளக்குகிறது.

அத்தி என்றால் எப்பொழுதும் இருப்பது. காயம் என்றால் இடப்பரப்புடையது என்பது ஆகும். இந்த அத்திக்காயங்கள் இவ்வுலகம் முழுவதும் பரவியிருக்கின்றன. கண்ணால் காணமுடியாதவை. சுவை, மணம், நிறம், தொடு உணர்ச்சி, ஒலி அற்றவை. எப்பொழுதும் என்றும் உள்ளவை.

தர்மாத்திகாயம் காற்றிலுள்ள ஈதர் போன்றது. உருவமற்றது.இது இயக்க ஊடகம் ஆகும். அழிவும் அற்றது. இதன் உதவியால்தான் உயிர்களும் உயிர் அற்றவைகளும் ஓரிடம் விட்டு வேறிடம் செல்ல முடிகிறது. இதுவன்றி எதுவும் நகராது. அனைத்தும் இயங்க தர்மாத்திகாயம் உதவுகிறது. ஆனால் இது இயக்கத்தைக் கட்டுப்படுத்தாது. மீனும் மற்ற உயிர்களும் நீந்த, நீர் உதவுவது போல் பொருட்களின் இயக்கத்திற்கு தர்மாத்திகாயம் உதவுகின்றது.

உயிரினங்கள் எப்படி இயங்குகிறது. மேருமந்திர புராண ஆசிரியர் வாமன முனிவர், தேர் இயங்க அச்சு உதவுதல்போல் பொருட்களின் இயக்கத்திற்கு தர்மாத்திகாயம் உதவுகிறது என்பதை,

“அச்சுநீர் தேரோடு மீனை ஈர்த்திடும்

அச்சுநீர் இன்றியே தேரும் மீன்செலா” என்கிறார். உயிரினங்கள் நடப்பதுவே தர்மாத்திகாயத்தால்தான்.

பொருட்கள் தத்தம் இடத்தில் நிற்பதுவே அதர்மாத்திகாயம் என்பதாகும். இது பொருள்களை அசையாமல் நிலைத்திருக்க வைக்கிறது. இது புவியீர்ப்பு விசை போன்றது. அதர்மாத்திக்காயம் இல்லையேல் உலகம் தன் இயல்பில் நில்லாது நிலைகுலைந்து போகும். இதனையே மேருமந்திரபுராணம்,

“அந்தரத்து அறுபத்து மூன்றதாகிய

இந்திர படலமும் நிரயம் ஏழ்களும்

மந்திரம்,மலை,மண்ணும், மற்றும் நின்றிடா

அந்தமில் நிலைஅதன் மத்தி இல்லையேல்” எனப் புகழ்கிறது.

உயிரில் வினையின் அணுக்கள் வந்துசேர துணை செய்வது தர்மாத்திகாயம். உயிரோடு வந்து சேர்ந்த வினை அணுக்களை, உயிரோடு இருப்பதற்கு உதவுவது அதர்மாத்திகாயம்.

இரண்டும் உலகிற்கு அவசியம்

நம் நற்செயல்களால் நம் உயிரை நாம் தூய்மையாக்கினால் உயிரிலிருந்து வினைகள் நீங்கிச் செல்லவும், தூய்மையான உயிரை மேலுலகம் கொண்டுசெல்லவும் உதவுவது தர்மாத்திகாயம். முக்தியடைந்த உயிரை உலகின் உச்சியில் நிலையாக இருக்க உதவுவது அதர்மாத்திகாயம் ஆகும்.

இந்த இரு அத்திக்காயங்களும் உலகில் முக்கியமானவை. எனவே ஒழுங்கு மிகுந்த இந்த அமைப்பை விளக்கவே சமணம் இந்த இரு அத்திகாயங்களை முன் வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x