Published : 12 Feb 2015 12:01 PM
Last Updated : 12 Feb 2015 12:01 PM

வேடனின் மனதை மாற்றிய சிவன்

சிவபெருமானுக்குரிய உயர்ந்த எட்டு விரதங்களில் சிறப்புப் பெற்றதாக சிவராத்திரி விரதம் போற்றப்படுகிறது. சிவராத்திரி புராணமானது பட்ச, மாத, வருஷ சிவராத்திரி தினங்கள் என்று பலவிதமான சிவராத்திரி விரதங்களை விளக்குகிறது. இவற்றில் தலையாயது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி இரவில் கொண்டாடப்படும் சிவராத்திரி விரதமேயாகும். இதனை மகா சிவராத்திரி என்பர்.

சிவராத்திரி என்னும் விரத காலம், உயிரையும் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி மேன்மை தரும் சாதனமாகும். எனவே, இதில் உண்பது, உறங்குவது, மனதை அலைபாய விடுவது, கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை விலக்கப்பட்டுள்ளன.

மனதை ஒருமுகப்படுத்தி உறக்கத்தை விடுத்துச் சிவபெருமானை அர்ச்சிக்க வேண்டும். ஆடிப் பாடுதல், தியானம் செய்தல், அபிஷேக அர்ச்சனை செய்தல், வேதம் ஓதுதல், புராணங்களைப் படித்தல், கேட்டல், சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தல் என்று சமய நூல்கள் கூறும் புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் நாடகங்களைப் பார்ப்பதும், கதைப்பாடல்களைக் கேட்கும் மரபும் தொன்றுதொட்டு இருக்கிறது. பாரத தேசம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சிவராத்திரி இரவில் நாடகம் நடத்தும் வழக்கம் இருக்கிறது. அவற்றில் ஒன்று திருத்தினை நகர்.

இந்த ஊரில் 90 ஆண்டுகளைக் கடந்து சிவராத்திரி நாடகம் நடத்தப்பட்டுவருகிறது. நடுநாட்டுத் தலங்களில் ஒன்றான இத்திருத்தலம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய நீறுதாங்கிய திருநுதலான் எனத் தொடங்கும் தேவாரப் பாடலைப் பெற்றது. இத்தலத்தின் சிவபெருமான் சிவக்கொழுந்தீசர் என்றும் அம்பிகை இளம்கொம்பன்னாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

வேடனுக்கு மோட்சம் தந்த சிவன்

வில்வ வன வேடன் என்பவனுக்கு சிவராத்திரி பலனை அளித்து மோட்சம் தருவதற்காக சிவபெருமான் வேடன் வேடம் பூண்டு பூலோகம் வருகிறார். காட்டில் வேட்டைக்கும் மிருகங்கள் ஏதும் கிடைக்க விடாமல் வேடனுக்குச் சோதனையை ஏற்படுத்துகிறார் சிவபெருமான்.

வில்வ வன வேடனைப் படிப்படியாக மேன்மைப்படுத்துகிறார் சிவன். புலி வேடம் தாங்கி வேடனை வில்வமரத்தின் மீது விரட்டுகிறார் சிவன். ஒரு கட்டத்தில் புலி மறைகிறது. அந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றுகிறது. அச்சமயம் வேடனின் மனைவியும் மக்களும் வேடனைத் தேடிக் காட்டுக்குள் வருகின்றனர். வேடன் தன்னை உணர்கிறான்.

நாடகம் முடிந்ததும் நாடக மேடையில் இருந்த லிங்கத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீரில் கரைக்கின்றனர் இங்குள்ள மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x