Published : 12 Feb 2015 12:54 PM
Last Updated : 12 Feb 2015 12:54 PM
விஜயரங்க சொக்கநாதர் என்ற நாயக்கர் மன்னன் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். அவரிடத்தில் தலைமைக் கணக்கராகப் பணியாற்றியவர் கேடிலியப்பர். இவருக்கும் கெஜவல்லியம்மைக்கும் இரண்டாவது மகனாகத் தோன்றியவர் தாயுமானவர். இவர் தம் ஐந்தாம் வயதில் சிற்றம்பல தேசிகரிடம் தமிழ் கற்றார். வடமொழிப் புலமையும் கைவரப் பெற்றார்.
அதுவரை சும்மா இரு
ஒருநாள் தாயுமானவர் திருச்சி மலைக்கோட்டை சுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார். அப்போது திருத்துறையூர் மௌனகுரு சுவாமிகள் தவநிஷ்டையில் இருந்தார். அச்சுவாமிகளது அருட்பார்வையை வேண்டி அவரை வணங்கி நின்றார் தாயுமானவர். திருமூலர் வழிவந்த மௌனகுரு இவருக்குக் குருவாக வந்து ஆட்கொண்டார்.
அன்று முதல் குருநாதருடனே தங்கி இருக்கலானார். பலநாள் பழகிய குரு இவரை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட வருத்தமுற்றார். அப்போது குருநாதர் தாயுமானவரிடம், ‘நீ உன் கர்மவினைகள் நீங்க இல்லறம் ஏற்று மீண்டு வா. அதுவரை சும்மா இரு’ என்றருளிப் பிரிந்தார்.
அவரது சொற்களைத் தலைமேல் கொண்டு மட்டுவார் குழலி எனும் மங்கையை மணந்து இல்லறம் நடத்தினார். மனைவாழ்வில் ஓராண்டு காலத்தில் ஓர் மகனைப் பெற்றெடுத்த அம்மனையாள் இறைவனடி சேர்ந்தாள். குருவின் கூற்றுப்படி அவருடைய வினைகள் முற்றுப் பெற்றன என்பதை உணர்ந்தார்.
அம்பாள் அருள்பெற்ற அதிசயம்
தந்தையின் மறைவுக்குப் பின் தலைமைக் கணக்கரானார் தாயுமானவர். சிறிது காலத்தில் மன்னர் மறைய இராணி மீனாட்சி அம்மை ஆட்சிபுரியத் தொடங்கினார். அவர் தாயுமானவரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவர் ஆட்சியில் ஒருநாள் தாயுமானவர் முக்கிய அரசு பதிவுகள் அடங்கிய சுவடிக் கட்டு ஒன்றை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அவைகளில் முக்கிய அரசுப் பதிவேடு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த ஓலையைத் தம் கைகளாலேயே கசக்கி அழித்தார். இச்செயலைக் கண்ட அனைவரும் பயத்தில் ஆழ்ந்தனர்.
இவ்வாறு தன்னையே மறந்து செயல்பட்ட தாயுமானவர் தன் நினைவு வந்தவுடன் உடனிருந்தவர்களைப் பார்த்து, ‘திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆடையில் கற்பூரத் தீ பற்றி எரிகின்றது. அன்னையைப் பற்றிய தீயைக் கசக்கி அணைக்க முயன்றபோது என் கையில் இருந்த அரசுப் பதிவேடு கசங்கிப் பாழ்பட்டது’ என்றார்.
சிறிது நேரத்தில், திருவானைக்காவில், அம்பாளுக்குத் தீபாராதனை எடுக்கும்போது கற்பூரம் தவறி அம்பாள் ஆடைமீது விழுந்ததாகவும், ஆடையில் பற்றிய தீ, சிரமப்பட்டு அணைக்கப்பட்டது என்ற செய்தி வந்தது. தாயுமானவரின் இச்செயல் அனைவருக்கும் வியப்பைத் தந்தது. அரசியார் மெய்சிலிர்த்துக் கண்ணீர் ததும்பி நின்றார். அதனுடன் நில்லாது ஆட்சிப் பொறுப்பையும் அவரே ஏற்று நடத்த வேண்டும் என்றார்.
மன்னன் பதவி விரும்பாதவர்
தாயுமானவரோ, என் போக்கில் என்னை அனுமதிப்பதே இந்த அரசு எனக்குச் செய்யும் பேருதவி என்று வேண்டிக்கொண்டார். அவரது விருப்பப்படியே அரசியார் அவரைத் துறவு மேற்கொண்டு சிவத்தொண்டு புரிய அனுமதித்தார்.
தாயுமானவர் அருளியவை
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் முதல் வண்ணம் ஈறாக 56 தலைப்புகளில் 1452 பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மொழியின் உபநிடதம் எனும் சிறப்பு இவர் பாக்களுக்கு உண்டு. காதல் துறையில் அமைந்த பாடல்களின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளார். ‘ஆகாரபுவனம்’, ‘ஆனந்தக் களிப்பு‘, ‘பைங்கிளிக்கண்ணி‘ எனும் பாடல்களில் அதைக் காணலாம்.
சமாதி கூடல்
திருத்தலங்கள் தோறும் சென்று இறை வழிபாடு செய்த இவர் தவ வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்தார். தவத்தின் மூலமாக சிவத்தைக் கண்ட தாயுமானவர் ராமநாதபுரம் சென்றபோது அங்கேயே தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று மகா சமாதி கூடினார். இவரது சமாதிக்கோயில் இராமநாதபுரம் நகர் எல்லையில் உள்ள இலட்சுமிபுரத்தில் உள்ளது. இவரது குருபூஜை விழா திருச்சியிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT