Published : 05 Feb 2015 03:11 PM
Last Updated : 05 Feb 2015 03:11 PM
திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சோழ சக்கரவர்த்தி, தேவாசுர யுத்தத்தின் போது இந்திரனுக்கு உதவி செய்தான். அதனால் மகிழ்ந்த இந்திரன், என்ன வரம் வேண்டுமோ தருகிறேன் என்றான். முசுகுந்த சோழன், இந்திரன் பூஜை செய்யும் சிவலிங்கம் வேண்டும் என்றான். அதிர்ச்சியுற்றான் இந்திரன்.
தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தன்னிடம் உள்ள லிங்கம் போன்றே ஒன்றை செய்யப் பணித்து அதைப் பரிசாகவும் முசுகுந்தனிடம் அளித்தான். ஆனால் சிவபெருமானோ முசுகுந்த சோழனின் கனவில் வந்து அது உண்மைச் சிலை அல்ல என்று கூறிவிட்டார்.
இதனால் மீண்டும் இந்திரனிடம் சென்று கொடுத்த வரத்தை நிறைவேற்றக் கோரினான் சோழன். இந்திரன் ஆறுமுறை ஏமாற்றிய பிறகு ஏழாம் முறை தன்னிடம் உள்ள சிவலிங்கத்தைக் கொடுத்தான்.
இந்திரனின் பூஜை விக்ரகத்தைத் திருவாரூரிலும் ஏனைய ஆறு மூர்த்திகளை சுற்றியுள்ள ஆறு ஊர்களிலும் பிரதிஷ்டை செய்தான்.
“டங்கம்” என்றால் உளி. பொன், வெள்ளி உலோகச் சிற்பங்களைச் செதுக்கும் உளிக்கும் இப்பெயர் பொருந்தும். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை என்று நம்பிக்கை உண்டு. இதனால் இவை சப்த விடங்க மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு தலத்திலும் இறைவனின் திருநடனம் பல்வேறு வகையில் பிரசித்தி பெற்றது. கீழ்க்கண்ட ஏழு மூர்த்திகளின் பெயர்களும் நடனங்களும் வெவ்வேறாக இருந்தாலும், பொதுவாக அனைத்து சுவாமிகளும் ‘தியாகராஜா’ என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம் (சுவாச ரூபம்)
நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - பாராவார தரங்க நடனம் (கடல் அலை நடனம்)
திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம் (கோழி நடனம்)
திருக்குவளை - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (வண்டு நடனம்)
திருவாய்மூர் - நீலவிடங்கர் - தாமரை நடனம்
திருநள்ளாறு - நாக விடங்கர் - உன்மத்த நடனம்
திருமறைக்காடு - புவனி விடங்கர் - ஹம்சபாத நடனம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT