Published : 19 Feb 2015 01:36 PM
Last Updated : 19 Feb 2015 01:36 PM
அதிகாலைப் பொழுது. அருணோதய ஒளி துவஜ ஸ்தம்பத்தைத் தொட்டு வணங்குகிறது. சிலுசிலுவென்ற காற்று பிராகாரத்தைத் தழுவிச் செல்கிறது. புன்னகை பூக்கும் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் அலங்கார வளைவின் மேல் நளினமாக ஒசிந்து நிற்கும் காட்சி. கண்டதும் கண்களை ஈர்க்கும் அழகு மிளிரும் கோயில். சுத்தமான சூழல்.
சென்னை மேற்கு மாம்பலத்தை அலங்கரிக்கும் அருள்மிகு பாஷ்யகார ஆதிசென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலில் நிற்கும்போது வரலாற்றினூடே பயணித்துச் செல்லும் அனுபவம் ஏற்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய கோயில் இது.
இன்றைய மாம்பலம் அன்றைக்கு மாபிலம் என்ற காடாக இருந்தது. `ஸர்வ தேவ நமஸ்கார; கேசவம் ப்ரதிகச்சதி` என்ற சுலோக வாக்கியத்தின்படி எந்த தெய்வத்தை வணங்கினாலும், அது கேசவ பெருமாளையே அடையும். ‘கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ’ என்பது ஆண்டாள் பாசுரத்தில் வரும் குறிப்பு. இந்தக் கேசவன் தொன்மையான மாபிலம் என்ற மாம்பலத்தில் எழுந்தருளிய நிகழ்ச்சி ஒரு அதிசயம்.
திருத்தல வரலாறு
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் திருவரங்கத்தில் பெரிய பெருமாளுக்குத் தொண்டு புரிந்துவந்த மாதவாசார் என்பவருக்குக் குழந்தை இல்லை. திருவரங்கனின் ஆணைப்படி பல தலங்களுக்குச் சென்று வர முடிவு செய்தார்.
அதில் திருமயிலை பார்த்தசாரதி திருக்கோயிலும், திருமலை ஸ்ரீ நிவாச பெருமாள் திருக்கோயிலும் குறிப்பிடத்தக்கவை. இந்தத் தலங்களுக்குச் சென்றார். பணிந்தார். வேண்டினார். நம்பிக்கையுடன் திரும்பினார்.
அப்போது வழியில் இருந்த இந்த மாபிலம் என்ற அடர்ந்த காட்டினில் ஓரிடத்தில் தங்கிக் கண் அயர்ந்தார். அப்போது அவர் என்றென்றும் சேவிக்கும் அரங்கத்துப் பெருமாள் அனந்த சயனமாகவே அவர் கனவில் தோன்றினார். நின்ற திருக்கோலத்தில் இங்கு புதையுண்டிருப்பதாகக் கூறி, தன்னை மீட்டெடுத்துப் பூஜைகள் செய்ய அறிவுறுத்தினார்.
அதனால் மாதவாசாருக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும் என அருள்பாலித்தார். மாதவாசாரும் அவ்வாறே செய்ய, அவருக்குப் புத்திர பாக்கியம் ஏற்பட்டது.
மகான் ஸ்ரீ ராமானுஜர் தனது பாத யாத்திரையின் வழியில் இம்மாபில க்ஷேத்திரத்தை அடைந்தார். ஸ்ரீ கேசவ பெருமாளைப் பூஜித்து வழிபட்டார். அன்றிரவு தங்கி, விடியலில் தன் வழிப்பயணத்தைத் தொடர்ந்தார். அன்று முதல் இத்திருக்கோயிலுக்கு ‘உடையவர் திருக்கோயில்’ (ரமானுஜரை உடையவர் என்று சொல்வார்கள்) என்பது திருநாமம்.
அருள்பாலிக்கும் சன்னதிகள்
இதன் பிரதானக் கருவரையில் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு முன்னால் உற்சவர் ஸ்ரீ ஆதி கேசவன் காட்சி அளிக்கிறார். இப்பெருமாள் சன்னதிக்கு முன்னால் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் அமைந்துள்ளன.
பெருமாள் சன்னதிக்கு வலதுபுறத்தில் ஸ்ரீ செங்க மலவல்லித் தாயார் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். ஆண்டாள் சன்னதிக்கு அருகில் அச்சு அசலாக உள்ள திருமலை ஸ்ரீ நிவாச பெருமாளைக் கண்ணாரத் தரிக்கலாம். இச்சன்னதியின் கூரைத் தளத்தில் கல்லில் மீன் ஒன்று திருத்தமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
ஆழ்வார் ஆச்சாரியன்களைத் தரிசித்து வெளியே வந்து மண்டப முகட்டை நோக்கினால், கருங்கல்லில் செதுக்கப்பட்ட சங்கு சக்கரம் இருபுறம் அமையப் பெற்ற திருநாமம் சிற்பக் கலையின் தொன்மையைப் பறைசாற்றுகிறது.
இந்த அருள்மிகு பாஷ்யகார ஆதிசென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண, புனராவர்தன அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷனம் 09.02.15 திங்கள் கிழமையன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. உடையார் பாதம் பட்ட சிறப்புக் கொண்ட தொன்மையான இந்தக் கோவில் நவீன வாழ்வின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அமைதியாக வீற்றிருந்து ஆற்றுப்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT