Last Updated : 03 Apr, 2014 01:42 PM

 

Published : 03 Apr 2014 01:42 PM
Last Updated : 03 Apr 2014 01:42 PM

புத்தர் வாழ்வில்... : புத்தர் பரப்பிய ஞானம்

புத்தர் போன இடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை தரிசிக்கத் திரண்டு வந்தனர். அவருடைய உபதேசங்களைக் கேட்டனர். பலரும் அவரிடம் தீட்சை பெற்று புத்த மதத்தைத் தழுவித் துறவிகளாயினர்.

கோசல நாட்டை பிரசேனஜித் என்ற மன்னர் ஆண்டுவந்தார். அவர் விலங்குகளை பலிகொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தார். இதையறிந்த கௌதம புத்தர் கொலைக் களத்துக்குச் சென்றார். வாயில்லாத அந்த ஜீவன்களுக்கு உயிர்ப் பிச்சை அளிக்கும்படி, அவர் மன்னரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார். புத்தரின் மொழிகள் பிரசேனஜித்தின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின. உயிர் வதையை நிறுத்தி, புத்த மத தீட்சை பெற்றார்.

பிரசேனஜித் மட்டுமல்ல, அங்குலி மாலனும் புத்த மதத்தில் சேர்ந்தார். இருவருக்கும் ஒரேயொரு வித்தியாசம், பிரசேனஜித் அரசர். அங்குலிமாலன் கொலை, கொள்ளை புரிந்துவந்த நபர். அங்குலிமாலனிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. யாரை அவர் கொல்கிறாரோ, அவர்களுடைய விரலை வெட்டித் தன் மாலையில் கோத்துக்கொள்வது வழக்கம்.

இப்படிப்பட்ட கொடிய நபரைத் தேடி புத்தர் தனியாகச் சென்றார். அவருடைய துணிச்சலைக் கண்ட அங்குலிமாலன் அதிசயித்துப் போனார். பிறகு அவரிடம் தீட்சை பெற்றார்.

தீட்சை பெற்ற பெண்

புத்த மதத்தில் தீட்சை பெற்ற பெண் களில் முதன்மையானவர் விசாகா. அவர் சிராவஸ்தி நகரின் நகரைச் சேர்ந்த பெருஞ் செல்வந்தரின் மகள். சின்ன வயதிலிருந்தே அவருக்கு புத்த மதத்தில் நம்பிக்கை உண்டு. ஆனால், அவள் திருமணம் செய்துகொண்டதோ சமண மதத்தில்.

இந்த நிலையில் புத்தர் சிராவஸ்திக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து விசாகா மகிழ்ச்சி அடைந்தார். தன் மாமனார் மிகரிடம் இந்தச் செய்தியை விசாகா தெரிவித்தார். ஆனால் மிகரோ, “ஒன்றும் அறியாத இளைஞர்கள், இளம்பெண்களிடம் பசப்பு வார்த்தைகளைப் பேசி புத்தர் மயக்குகிறார். அவர்களுடைய குடும்ப வாழ்க்கையைக் குலைக்கிறார்" என்று கூறினார்.

அதற்கு விசாகா, “மற்ற துறவிகளைப் போலவே, புத்தரும் ஊருக்கு வரட்டும்; தடுக்காதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். புத்தருடைய உபதேசம் தன் மாமனாரை நல்வழிப்படுத்தும் என்று விசாகா நம்பினார்.

சிராவஸ்திக்கு புத்தர் வந்தார். அவருடைய உபதேசங்கள் மிகரைக் கவர்ந்தன. புத்த மதத்தில் மிகர் சேர்ந்தார். சிராவஸ்தியில் புத்தர் இருந்த அனைத்து நாட்களிலும் விசாகா, அவருடைய உபதேசத்தைக் கேட்கச் சென்றார்.

ஒரு நாள் அவருடைய தலையில் சூடியிருந்த பொன் திருகுப்பூ கழன்று கீழே விழுந்துவிட்டது. புத்தரின் சீடர் ஒருவர் அடையாளம் கண்டு, அதை விசாகாவின் வீட்டுக்குக் கொடுத்தனுப்பினார். ஆனால், விசாகா அந்த திருகுப்பூவை பௌத்த சங்கத்துக்கே அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். பொதுவாக இப்படி தானம் வழங்கப்படுபவை விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணம் சங்கத்தின் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

விலைமதிப்பற்ற அந்தத் திருகுப்பூவை வாங்கும் அளவுக்கு சிராவஸ்தியில் யாரிடமும் பணம் இல்லை. கடைசியில் விசாகாவே பணம் கொடுத்து அதை வாங்கிக்கொண்டார். அந்தப் பணத்தைக் கொண்டு சிராவஸ்தி யில் ஒரு பௌத்த விகாரம் கட்டப்பட்டது.

அநாதபிண்டகர்

சிராவஸ்தியில் அநாதபிண்டகர் என்ற ஒரு செல்வந்தார் இருந்தார். ஏழைகள், ஆதரவற்றோருக்கு அவர் தானம் செய்துவந்தார்.

ஒரு நாள் ராஜகிரஹத்தில் இருந்த தன் சகோதரி வீட்டுக்கு அவர் சென்றார். அங்கு புத்தரை வரவேற்கத் தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தன.

புத்தர் சீதாவனத்தில் தங்கியிருந்தார். புத்தரைச் சந்திக்கும் ஆவலில், இரவு தூங்காமல் காலையில் புத்தரை தரிசிக்க புறப்பட்டுச் சென்றார் அநாதபிண்டகர். புத்தரின் உபதேசங்களைக் கேட்டு, தன் தொழிலைத் துறந்து பிட்சுவாக மாற விரும்பினார்.

ஆனால் புத்தரோ, "பணம் கெடுதல் அல்ல. பண ஆசைதான் கெடுதல். பணத்தை அனைவருக்கும் கொடுத்து, நல்ல வழியில் செலவிட வேண்டும்" என்றார். நிறைய தானம் செய்வது பற்றி அநாதபிண்டகர் கூறினார்.

அதற்கு புத்தர் அவரிடம் கேட்டார், "அப்படியானால் அவர்கள் அனைவரையும் ஆதரவற்றவர்கள் ஆக்கிவிட்டு, நீங்கள் ஏன் துறவியாக மாற நினைக்கிறீர்கள்? உலகத்தில் உங்கள் கடமையை நிறைவேற்றிக்கொண்டே அறவழியில் நடக்கலாம்" என்றார்.

அதை ஏற்றுக்கொண்ட அநாதபிண்டகர், சிராவஸ்தியில் ஒரு புத்த விகாரத்தைக் கட்ட விரும்பினார். விகாரத்துக்கு ஒரு நிலம் நன்றாக இருக்கும் என புத்தருக்குப் பட்டது.

ஆனால், அந்த நிலமோ இளவரசன் ஜேத் உடையது. அதை விற்க விரும்பாத ஜேத், தட்டிக் கழிப்பதற்காக, "நீங்கள் தங்கக் காசுகளை நிலத்தின் மீது பரப்பி வையுங்கள். எவ்வளவு தூரம் பரப்புகிறீர்களோ, அவ்வளவு நிலத்தைத் தருகிறேன்" என்றார்.

அந்தப் பெரிய நிலத்தின் சிறுபகுதியில் மட்டுமே தங்கக் காசுகளால் மூட முடிந்தது. அப்போது இளவரசர் ஜேத் கூறினார், "நான் வேடிக்கைக்காக அப்படிக் கூறினேன். அந்த நிலம் விற்பனைக்கில்லை" என்று கூறிவிட்டார்.

ஆனால், அநாதபிண்டகர் எப்படியோ முயன்று ஜேத்திடம் இருந்து அந்தத் தோட்டத்தை வாங்கிவிட்டார். புத்த விகாரம் கட்டத்தான் அந்த நிலம் வாங்கப்படுகிறது என்று ஜேத்துக்குப் பின்னர்தான் தெரிந்தது. அந்த காட்டிலுள்ள மரங்களை எல்லாம் விகாரத்துக்கு அவர் தானமாகக் கொடுத்துவிட்டார். அந்த விகாரம் 'ஜேத்வனம்' என்று அழைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x