Published : 08 Jan 2015 03:29 PM
Last Updated : 08 Jan 2015 03:29 PM

வெண்ணெய் உண்ணும் நவநீத கிருஷ்ணன்

‘நவநீதம்' என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம். ‘நவ'-புதுசாக; ‘நீதம்'- எடுக்கப்பட்டது. புத்தம் புதிதாகக் காலை வேளையில் பசும் பாலில் உறை குத்தி சாயங்காலமே அந்தத் தயிரைச் சிலுப்பி எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம்.

முதல் நாள் ராத்திரி உறை குத்தி மறுநாள் வெண்ணெய் எடுக்கிறது ‘பழம் பற்று' என்கிற மாதிரிதான். ரா வேளையில் சூர்யனுடைய பரிசுத்தி செய்கிற வெளிச்சம் இல்லாததாலேயே ராத்தங்கின பண்டம் அவ்வளவு சிலாக்கியமில்லை என்பது.

நாமெல்லாம் பசுக்கள். நம் மனசு வெள்ளை வெளேரென்று பாலாக இருக்கணும். அப்போதுதான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பேர் வைத்துக்கொண்டவன் நம்மிடம் வருவான். அது வெறுப்பைத் தருகிற கறுப்பு அல்ல. மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கறுப்பு. கனச்யாம், என்கிறபோது ‘கன' என்றால் ‘மேகம்' என்றே அர்த்தம். ‘கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

மேகம் எத்தனைக்கெத்தனை கறுப்போ அத்தனைக்கத்தனை அதிக ஜலத்தைக் கொட்டும். அந்த ஜலம் கறுப்பாகவா இருக்கிறது? இப்படிப் பரம பிரேம தாரையைப் பிரவாகமாகக் கொட்டுகிறவனே கிருஷ்ணன். அடர்ந்த மேகத்திலிருந்தே மஹா ஜ்யோதியான மின்னல்கள் தோன்றுகிற மாதிரி, ஞானப் பிரகாசம் பளிச்சுப் பளிச்சென்று வெட்ட கீதாசாரியனாக இருக்கிறான் அந்தக் கொண்டல் வண்ணன்.

இப்படியே அவன் வெளியிலே கபடும் சூதும் மாயமுமாகத் தெரிந்தாலும் நாம் மனசைப் பால் வெளுப்பாக்கிக் கொண்டால் பரம சுத்தமான பிரேமையோடு நன்மைப் பாலிக்க, கோபாலனாக வருவான். அப்படியே அந்தப் பாலை எடுத்துக் குடிப்பதில்லை அவன். அது தயிராகி அதிலிருந்து புத்தம் புது வெண்ணெய் எடுத்தாகணும். அந்த நவநீதத்தை உண்ணத்தான் வருவான். அதுவும் திருட்டுத்தனமாக.

பக்தி தாபத்திலே வெள்ளை மனசைக் காய்ச்சினால் அது பொங்கும். அப்புறம் இந்த உணர்ச்சி வேகம் அடங்க அதைக் கொஞ்சம் ஆற்றி சாந்தத்தை உறை குத்தணும். பால் ஓடுகிறதுபோல, ஆடுகிறது போலத் தயிர் ஓடுவதில்லை, ஆடுவதில்லை. அப்படியே கெட்டியாக, சாந்தமாக இருந்து விடுகிறது.

அவனுக்கு சாந்தமும் வேணும். லீலையின் சலனமும் வேண்டும். அப்போதுதான் முடிவிலே சாந்தத்திலேயே எல்லா சலனமும் அடங்கியிருப்பதும், அத்தனை சலனத்துக்கும் அடிப்படையாக சாந்தமே இருந்து கொண்டிருப்பதும் தெரியும்.

அதனால் ஓடாமல் ஆடாமல் சாந்தமாக இருக்கிற தயிரைப் போட்டுக் கடை கடை என்று கடைய வேண்டியிருக்கிறது. ஹ்ருதயப் பானைக்குள் இருக்கிற தயிரில் சத்தியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை (இதை ஞான விசாரம், ஆத்ம விசாரம் என்பார்கள்) மத்தாகப் போட்டு, ஒருமுக சிந்தனை என்ற கயிற்றால் கடைந்தால் பூர்ணத்துவம் என்ற வெண்ணெய் வரும்.

அதைத் துளிக்கூடப் பழசாகவிடாமல், அது நவநீதமாக இருக்கிறபோதே வந்து எடுத்துக்கொண்டு விடுவான். பூர்ணத்துவம் இந்த நம்முடைய சரீரப் பானைக்குள் எப்படி இருக்க முடியும்? அதனால் பூர்ணனான அவனிடமே போய்விடும். தனியாக நாம் என்று இல்லாமல் அவனுக்குள் அவனாகவே போய்விடுவோம் என்று அர்த்தம்.

திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்கிறான் என்று ஏன் சொல்ல வேண்டும்? பகவான் சாதாரண அதிதி மாதிரி வந்தால் அவனை வேறாயாக வைத்து ராஜோபசாரம் பண்ணி conscious -ஆகத்தானே (புத்தி பூர்வமாகத்தானே) வெண்ணெயைத் தருவோம்?

அப்படி புத்தி பூர்வமாக நம்மை அவனிடம் சரணாகதி பண்ணிக் கொள்ள நமக்கு அப்போது புத்தி வருமோ, வராதோ? 'சரணாகதி பண்ணுகிறேன்' என்கிறபோதே அப்படிச் சொல்கிற ஒரு ‘நான்' தனியாக வந்துவிடுகிறதே. இதனால்தான் நமக்குத் தெரியாமல் நாம் un conscious -ஆக இருக்கிற போதே நம்மை எடுத்துக் கொண்டால்தான் உண்டு என்று திருடனாக வருகிறான்.

வெண்ணெய் பரப்பிரம்மம் மாதிரி. சுத்த சத்துவ வெளுப்பாக இருப்பது. துளி உருக்கினால், அந்த வெளுப்பும் போய் ஸ்படிகம் மாதிரி colourless ஆகிவிடுகிறது. ‘வெண்ணெய்' என்பதில் ‘வெண்' என்கிற அடையாளமும் போய் 'நெய்' மாத்திரம் நிற்கிற நிலை. எந்தக் கலரிலும் அது சேராது. அதன் ருசியும் இப்படித்தான்.

மதுரம், மதுரம் என்று சொன்னாலும் வெண்ணெய் வாஸ்தவத்தில் தித்திப்பு இல்லை - சர்க்கரை, தேன் மாதிரி இல்லை. ஷட்-ரஸம் என்கிற ஆறு சுவைகளில் அது எதுவும் இல்லை. அதன் கலர், ருசி எல்லாம் சாந்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சம்சார ஆட்டம் போக, எதிர்த் திசையில் பலவிதமான சாதனைகளில் அழுகை, மயிர்க்கூச்சு, பாட்டு, நர்த்தனம் என்று ஒரே ஆட்டமாக ஆட்டிச் சிலுப்பிய பின் உண்டாகிற இந்தப் பரம சாந்தத்தை நாம் அடைகிறபோது நம்மை நாமறியாமலே தனக்குள்ளேயே கொண்டுபோய் வைத்துக்கொள்கிற பரமாத்மாதான் கிருஷ்ணன்.

வெண்ணெய் ஜலத்திலிருந்து கொண்டே அதில் ஒட்டாமலிருக்கிற மாதிரி, பால் ஜலத்தோடு அப்படியே கலந்துவிடும். அப்படியில்லாமல் வெண்ணெய் தனியாக மிதக்கிறதே, அந்த மாதிரி, நாம் லோகத்திலிருந்து கொண்டே அதில் ஒட்டாமலிருந்தால் நம்மை அவன் எடுத்து அப்படியே முழுங்கித் தனக்குள் வைத்துக் கொண்டு விடுவான். ஆக நம் உள்ளம்தான் அவனுக்கு வேண்டிய வெண்ணெய்.

‘நவநீத சோர்', சித்த சோர் என்று இரண்டு விதமாயும் அவனையே சொல்வதால் என்ன ஏற்படுகிறது? நம் சித்தம்தான் அவன் அபகரிக்கக்கூடிய நவநீதமாக மாறவேண்டும் என்றே ஏற்படுகிறது.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x