Last Updated : 16 Jan, 2015 10:31 AM

 

Published : 16 Jan 2015 10:31 AM
Last Updated : 16 Jan 2015 10:31 AM

மீண்டும் பாலசரஸ்வதி பாணி

அநிருத்தா நைட். பாலசரஸ்வதியின் பேரன் மட்டுமல்ல அவருடைய கலைப் பாரம்பரியத்தின் அசல் வித்து. சமீபத்தில் தலைசிறந்த ஆண் நடனக் கலைஞருக்கான ‘ராம்கோபால் விருது' பெற்றிருக்கிறார்.

ராம்கோபால் விருது பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள். இந்த விருது அகில இந்திய விருதா?

ஆம். இந்திய நடனக் கலையுலகில் முக்கியம் பெற்ற ‘அட்டெண்டன்ஸ்’ ஆண்டிதழ் எனக்குத் தந்த விருது இது. பதிப்பாசிரியர் ஆசிஷ் கோகர்தான் விருதுக்குரியவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கிறார்.

உங்கள் நடன நிகழ்ச்சிகளில் நீங்கள் பொதுவாகக் கடைசியில் ஆடும் பாடல் 'கிருஷ்ணா நீ பேகனே'. அந்தப் பாட்டைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா?

ஒரு கன்னட இசை அறிஞர் 'கிருஷ்ணா நீ பேகனே' பாடுவதைக் கேட்டு, அந்தப் பாட்டுக்கு மெருகூட்டி, அதை நடனத்துக்கு உள்ளே கொண்டுவந்தது பாலசரஸ்வதிதான். அதை அவர் கையாண்ட விதம் ரசிகர்கள் மத்தியில், அந்தப் பாட்டையும் என் பாட்டியையும் பிரித்துப் பார்க்க முடியாத உணர்வை உண்டாக்கியது, பிரித்துப் பார்க்கக் கூடாதா என்று நாங்கள் சில சமயம் ஏங்கும் அளவுக்கு.

அதை பாலாம்மா பாடிக்கொண்டே ஆடுவார் அல்லவா?

ஆம். பாடிக்கொண்டே ஆடுவதுதான் எங்கள் குடும்பப் பாணி. நமது மியூசிக் அகாடமி இன்றுவரை சங்கீத கலாநிதி விருதை அளித்து கவுரவித்துள்ள ஒரே நாட்டியக்கலைஞர் பாலாம்மா மட்டுமே என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வாயை விட்டுப் பாடும்போதுதான் உண்மையான அபிநயம் உருவாகும். வெறும் முகச்சுழிப்புகளில் போலி உணர்வுதான் வெளிப்படும்.

பாலாம்மாவின் பேரனாக மட்டுமே உங்களைப் பலர் பார்க்கிறார்கள், ஒப்பிடுகிறார்கள், பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இது உங்களுக்கு சாதகமா, சங்கடமா?

அவர்கள் ஒரு சிகரம். எதையும் யாரையும் அவருடன் ஒப்பிடுவது தவறு. அப்படிப்பட்ட அந்தச் சிகரத்தை ஒரு கைலாயமாக நினைத்து சுமந்து செல்வதுதான் என் மார்க்கம்.

இசை-நடனக் கலையில் 250 ஆண்டு சரித்திரம் கொண்ட பாரம்பரியத்தில் வந்த முதல் ஆண் நடனக் கலைஞர் நீங்கள். ஒரு விதத்தில் முன்னோடி இல்லாமல் உங்கள் பாதையை நீங்களே அமைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

சுயநிரூபணத்துக்கு இதை ஒரு வாய்ப்பு என்றும் சொல்லலாம், இல்லையா? ஆணுக்கான தாண்டவ பாவத்தையும், பெண்ணுக்கான லாசிய பாவத்தையும் ஒன்றாக்கி, பாடிக்கொண்டே ஆடுவதை என் பிரத்யேக பாணி என்று சொல்லுவேன்.

அது உங்களூடைய பிரத்யேக பாணி என்றால், வேறு ஆண் ஆட்டக்காரர்கள், லாசியம் என்ற முக்கியமான கலை அம்சத்தைக் கைவிட்டுவிட்டு ஆடுகிறார்கள் என்று சொல்கிறீர்களா?

விடாமல் ஆடும் ஒரு சிலர் இருக்கலாம், இருப்பது நல்லது.

அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் ஏன் இந்தியாவில் அதிகம் ஆடுவதில்லை?

ஆடணும். அதுதான் என் ஆசை. ஆனால் வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லுவேன். இன்று தமிழ்நாட்டில் பரதக் கலை ஊதியம் சார்ந்த பணியாக இல்லை. இந்தப் பணியில் செலவும் அதிகம். எனவே, இந்தச் செலவைப் பொருட்படுத்தாத, மேல் தட்டு வர்க்கத்தினரின் கலையாக மட்டுமே இன்று பரதம் காணப்படுகிறது. வடநாடு மற்றும் மேற்கத்திய நாட்டுக் கலைச்சூழலில் இத்தகைய அவலம் கிடையாது.

எனக்கு ஒரு ஆசை. பரதக் கலையை ஒரு சமவர்க்கக் கலையாக முன்வைத்து இயங்கும் ஒரு நாட்டியக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என்பது என் லட்சியம். செங்கல்பட்டு அருகில் இருக்கும் எங்கள் குடும்ப நிலத்தில் ஒரு முறையான, பல்கலைக்கழகம் சார்ந்த நாட்டியக் கல்லூரியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன். காஞ்சிபுரத்தில் எனக்கு சுமார் நூறு மாணவ, மாணவியர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே சமுதாயத்தில் பின்தங்கிய பகுதிகளிலிருந்து என்னிடம் பயிற்சி பெற சென்னைக்கு வருகிறார்கள்.

அவர்கள் அனைவரும் நான் அமைக்கவிருக்கும் கல்லூரியில் முன்னுரிமையுடன் சேர்வார்கள் என்று நம்புகிறேன். ஆனால், சில உதவிகள் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சில புரவலர்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள பாலாம்மாவின் சிஷ்யர்கள் எங்கள் குடும்பத்தின் கலையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடி வருகிறார்கள். தவிர, அமெரிக்க அரசின் தேசியக் கலை அறக்கட்டளை, தேசிய நாட்டிய இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் எனக்கு ஆதரவளிக்கின்றன.

இவை காரணமாக நான் அமெரிக்காவில்தான் அதிகம் ஆடிவருகிறேன். அழைப்புகளும் அதிகரித்துவருகின்றன.

உங்கள் கலை சார்ந்து வேறு என்னென்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

தற்போது எங்கள் குடும்பத்தின் கலை மரபை ஆவணப்படுத்தும் முயற்சியில் நான் இருக்கிறேன். ஈவா சோல்டிஸ் என்ற அமெரிக்கப் பெண், பாலாம்மாவின் மாணவி, 35 ஆண்டுகளாக எங்கள் குடும்பக் கலையை ஆவணமாக்கிக்கொண்டிருக்கிறார்.

என் பாட்டி பாலசரஸ்வதி, என் அம்மா லக்‌ஷ்மி நைட், என் அப்பா டக்ளஸ் நைட், மேலும் என் மாமா தாத்தாக்களான மிருதங்க வித்வான் த. ரங்கநாதன், புல்லாங்குழல் வித்வான் த. விஸ்வநாதன், பெரிய பாட்டிகள் பிருந்தாம்மா, முக்தாம்மா, என் சின்னம்மா வேகவாஹினி, பிருந்தாம்மாவின் பேரன் திருவாரூர் கிரிஷ் ஆகியோரை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

10 வருட இடைவெளிக்குப் பிறகு, காலப்போக்கில் என் வளர்ச்சியைக் கவனித்து, என்னையும், என் கலையையும், என் குடும்ப ஆவணக்கோப்பில் சேர்க்கும் நோக்கத்துடன் ஈவா இங்கே வந்திருக்கிறார். மேலும், என் அப்பா டக்ளஸ் நைட் எழுதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ‘பாலசரஸ்வதி’ என்ற புத்தகத்தைத் தமிழிலும், இந்தியிலும் மொழிபெயர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

பாலாம்மா தமிழ் இசைக்கு தன்னுடைய மனதில் தனி இடம் தந்துள்ளதைப் பற்றி கேட்டும் படித்தும் அறிந்திருக்கிறேன். சமஸ்கிருத நூல்களிலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்பது பலரின் கருத்து. நீங்களும் அப்படித்தானா?

ஆம். எங்கள் குடும்பக் களஞ்சியத்தில் வெகுவாக இருக்கும் பல தமிழ்ப் பாட்டுகளைப் பாடி-ஆடுவதில் அதிக மகிழ்ச்சி பெறுகிறேன்.

- எம்.வி. பாஸ்கர், கலை ஆவணமாக்கல் நிபுணர்,
தொடர்புக்கு: mvbhaskar@mac.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x