Published : 01 Jan 2015 03:29 PM
Last Updated : 01 Jan 2015 03:29 PM
மதுரமானவன் எம்பெருமான். மதுராதிபதே அகிலம் மதுரம் என்றே ஆனந்திக்கப்படுபவன்; ஆராதிக்கப்படுபவன். அவன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அர்ச்சுனனுக்குப் பகவத் கீதையின் மூலம் சொல்லுகிறான். தேவாதி தேவர்கள் கண் விழிக்கும் காலம் மார்கழி மாதம்.மார்கழி மாதத்தில் பெரும்பாலான வைணவத் தலங்களில் பகல்பத்து இராப்பத்து உற்சவங்கள் நடைபெறும். இந்த இருபது நாட்களில் பெருமாள் இருபது வகை அலங்காரங்கள் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தசாவதாரக் கோலங்களும், அவதார காலங்களில் பெருமாள் மேற்கொண்ட லீலைகளும் அலங்காரங்களாகி பக்தர்களுக்கு அந்நிகழ்ச்சிகளை நினைவூட்டும். சென்னையையடுத்த நான்கு பெருமாள் கோயில்களில் பெருமாள் திருக்கோலம் கொண்ட அலங்காரங்கள் கண்ணையும், மனத்தையும் கவர்கின்றன.
கோயம்பேடு:
வைகுண்ட ஏகாதசியை நினைவுகூரும் வகையில் திருப்பெயர் தாங்கி உள்ளது கோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கோயில். வைகுந்தத்தில் ஸ்ரீ , பூ, நீளா சமேதராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பார் பெருமாள். இங்கு மூலவர் பெருமாளுக்கு ஸ்ரீ வைகுந்தவாசன் என்பது திருநாமம் என்றாலும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிப்பது அபூர்வம்.
அழகிய சிங்கர் என்ற திருநாமம் கொண்ட உற்சவர் லஷ்மி நரசிம்மர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக நின்ற திருக்கோலம். இத்திருக்கோவிலில் உள்ள பெருமாளை ஸ்ரீ ராமனின் புத்திரர்களான லவனும், குசனும் பூஜித்தனர் என்கிறது தல புராணம்.
இத்திருக்கோவிலில் அபூர்வமாக லவன், குசன் மட்டுமல்ல ராமாயணம் இயற்றிய வால்மீகிக்கும் சிலாரூபங்கள் உள்ளன. இங்கு நரசிம்ம ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருவாடிப்பூரம், பங்குனி உத்திரம் மற்றும் ஆழ்வார்கள் திருநட்சத்திரம் ஆகிய வைபவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
திருநின்றவூர்:
ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயிலில் என்னைப் பெற்ற தாயார் என்ற விசேஷத் திருநாமம் கொண்ட தாயாருக்கு இத்திருநாமம் வரக் காரணம் ஒரு புராண நிகழ்ச்சி. திரு ஆன மகாலஷ்மி, வைகுந்த வாசனைப் பிரிந்து இந்த ஊரில் வந்து நின்றதால், திரு+நின்ற+ஊர் = திருநின்றவூர் என்றானது.
வைகுந்தவாசியான தாயார் பெருமாளுடன் ஊடல் கொண்டாள். பூலோகம் வந்தாள். தாயாரின் தந்தையான சமுத்திரராஜனுக்குத் தன் மகள், மணாளனைப் பிரிந்திருப்பது வருத்தத்தை அளித்தது. எம்பெருமானுக்கோ தாயாரைப் பிரிந்த வருத்தம். பெருமாள் தன் அன்பிற்குரியவளைத் தேடிக்கொண்டு பூலோகம் வந்தார். திருநின்றவூரில் கண்டார்.
இவர்கள் தம்பதிகளாக மணக்கோலத்தில் காட்சி அளிக்கும்படி சமுத்திரராஜன் வேண்ட, அவ்வாறே காட்சி அளித்தனர். இந்தத் தாயார் சன்னதியில் மனம் உருகிப் பிரார்த்தித்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்பது ஐதீகம்.
வில்லிவாக்கம்:
ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக ஸ்ரீ செளம்ய தாமோதர பெருமாள் மூலவராகவும், உற்சவராகவும் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் அமிர்தவல்லித் தாயார், தனிக் கோயில் நாச்சியாராக அமர்ந்த திருக்கோலம்.
அமிர்தக் கலசத்தை ஏந்தி வந்த தாயாருக்கு அமிர்தவல்லி என்று திருநாமம். ஆண்டாள் திருப்பாவையில் கூறியிருந்தபடி தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனாகக் காட்சி அளிக்கிறார் எம்பெருமான். ஸ்ரீ வேணுகோபாலன் சதுர்புஜதாரியாக நின்ற கோலத்தில் மூலவராக சன்னதிக் கோலம். உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ நிவாசர் ஸ்ரீ தேவி, பூதேவியுடனும், நர்த்தனக் கண்ணனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.
மண்ணடி:
ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேதராக ஸ்ரீ சந்தான வேணுகோபாலன் சதுர்புஜங்களுடன் காட்சி அளிக்கிறார். மூலவராகவும், உற்சவராகவும் தனிக் கோயில் நாச்சியாராக ருக்மணி அமர்ந்த திருக்கோலத்தில் அபூர்வக் காட்சி அளிக்கிறார். இங்கு மூலவரின் திருவாய்ப்புரம் வெண்ணை சாற்றப்பட்டுக் காட்சி அளிக்கிறது.
‘பவளவாய் காண்பேனே’ என்று குலசேகர ஆழ்வார் பாடிய பாசுரம் இதைப் பார்க்கும்போது நினைவுக்கு வரும்.
படங்கள்: எம்.என்.எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT