Published : 29 Jan 2015 02:22 PM
Last Updated : 29 Jan 2015 02:22 PM
தை மாதம் பவுர்ணமி திதியும் பூச நட்சத்திரமும், சேரும் நன்நாளில் பழனியில் பால்குடம் ஏந்தி கொண்டாடப்படும் திருவிழா, தைப்பூசத் திருவிழா. சென்னை நகரத்திலும் அபிஷேக ஆராதனையுடன் ஆண்டுதோறும் இவ்விழா நடைபெறுகிறது. பால் குடமும், காவடியும் ஏந்தி பக்தர்கள், சென்னை பெசண்ட் நகர் அறுபடை வீடு முருகன் திருக்கோயிலில் தைப் பூசத் திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம்.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர் சோலை ஆகிய திருக்கோயில்களில், குடி கொண்டுள்ள திருமுருகனின் கோலங்கள் ஒன்றாக பெசண்ட நகர் கோவிலில் காணக் கிடைக்கிறது.
அன்னை பராசக்தியின் வேல் பெற்ற முருகன் இங்கு பக்தர்கள் வேண்டியவற்றை வேண்டியவண்ணம் அருள்பாலிக்கிறார். எனில்,
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு
நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு
தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங்
கோடன் மயூரமுமே.
விநாயகர் நடுவில் கோயில் கொண்டு இருக்க சுற்றிலும் அறுபடை வீடு முருகனின் சன்னதிகள் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றத்தில், மூலவர் முருகன் சன்னதி வடக்குப் பார்த்து இருக்கும் அது போலவே இங்கும் திருப்பரங்குன்றம் முருகன் வடக்கு பார்த்த சன்னதியாகவே கோயில் கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் என்றாலே சஷ்டி விரதம்தான். இவ்விழா அங்கு ஆறுநாள் கொண்டாடப்படும். பின்னர் 7ம் நாளன்று தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறும். இங்கும் ஆறு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் இங்கு கோயில் கொள்ள இருந்ததால்தான், சமுத்திரக் கரையில் தான் நிலம் வேண்டும் என்று உறுதியாக இருந்து இந்த இடம் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் அமைந்துள்ளது போலவே சன்னதி கிழக்கு பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு.
தைப்பூசம் என்றால் பழனி
பழனியில் முருகன் ஆண்டித் திருக்கோலம் கொண்டுள்ளார்.
அங்கே முருகன் மேற்கே பார்த்த அமைப்புடன் காணப்படுகிறார். தை பூசம் என்றால் பழனிதான். மாம்பழத்திற்காக உலகைச் சுற்றி வந்த முருகன் கோபம் கொண்டு ஆண்டியாகி கோயில் கொண்ட இடம் பழனி. அவன் கோபம் தீர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே பால் குடம் எடுக்கிறார்கள் என்பது ஐதீகம்.
தை பூசத்தன்று பால் குடம், காவடி எடுக்கும் விழா இங்கு சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடி ஏந்தி இத்திருக்கோயிலை மூன்று முறை வலம் வருவார்கள். அதன் பின் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் விரதமிருந்து தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள். அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு சங்கல்பம் ஆரம்பிக்கும் இவ்விழாவில், ஒன்பது மணிக்கு அபிஷேகம் தொடங்கும். அபிஷேகத்தில் பால், பன்னீர், ஸ்நானப் பொடி, சந்தனம், பஞ்சாமிருதம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.
இந்த அருள்மிகு அறுபடை வீடு முருகன் திருக்கோயிலில் சுவாமிமலை சன்னதிக்குதான் முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிமலைக்கு விசேஷம் பங்குனி உத்திரம். திருத்தணி என்றால் ஆடிக் கிருத்திகை. அங்கும், இங்கும் வள்ளி, தேவசேனா சமேதராக காட்சி அளிக்கிறார் முருகன்.
பாராயணமும் வகுப்புகளும்
பழமுதிர்சோலை முருகனும் கோயில் கொண்டுள்ள இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியன்றும் வேல்மாறல் பாராயணக் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இங்கு இது பதினாறாவது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும் என்கிறது வேல் வழிபாடு குறித்த விளக்க உரை.
மேலும் திருப்புகழ் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும், கீழும் ஆகவும், முன்னும் பின்னும் ஆகவும் மாற்றி அமைத்து 64 அடிகளாக்கி அதற்கு வேல் மாறல் எனப் பெயரிட்டுள்ளார். இந்த வேல் மாறல் பாராயணம், பேய், பில்லி, சூனியம், மனக்கோளாறு, உடற்கோளாறு, மற்றும் எல்லா துன்பங்களையும் நீக்கவல்ல மகா மந்திரம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் பாராயணம், தேய்பிறை சஷ்டியன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும். அப்பொழுது வேலுக்கு அபிஷேகம், பூஜை நடக்கும். பின்னர் ஆரத்தியுடன் நிறைவுறும்.
இத்திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ யோக பைரவர் சன்னதியில் கோயில் கொண்டுள்ள யோக பைரவருக்கு ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் மாலை 7.30 மணி முதல் மகா அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தின் போது, வேத விற்பன்னர்களால் வேத பாராயணம் ஓதப்படும். அன்றைய தினம் பைரவருக்கு வடைமாலை சாற்றப்படும்.
நவக்கிரகங்களையும் ஆட்சி செய்பவர் என்பதால் அனைத்துத் தடைகளையும் நீக்கக் கூடியவராகவும் இருக்கிறார் பைரவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT