Published : 29 Jan 2015 04:03 PM
Last Updated : 29 Jan 2015 04:03 PM
மனித குலத்துக்கு ஆற்றும் சேவை வாயிலாக மோட்சத்தை எட்டும் குறிக்கோளை ‘ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதயாசா’ என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு, ஏழாவது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி பிப்ரவரி 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. தொன்றுதொட்ட இந்து ஆன்மிக மரபின் வழி, இன்றைய இந்திய சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதுதான் இந்தச் சேவைக் கண்காட்சியின் நோக்கம் ஆகும்.
வனப்பாதுகாப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப விழுமியங்கள் மற்றும் மனிதாபிமானத்தை மீட்டெடுப்பது, பெண்களுக்கு மரியாதை, தேசபக்தி ஆகிய ஆறு கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன அறிவியல் மற்றும் நவீன ஜனநாயகத்தில் பேசப்படும் உயர்ந்த விழுமியங்களைப் பழைய இந்து ஆன்மிகக் கோட்பாடுகள் எவ்வாறு காலம் காலமாகப் பிரதிபலித்திருக்கின்றன என்பதை விளக்கும் முகமாக இந்தக் கண்காட்சி இருக்கும் என்கிறார் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் எஸ்.வைத்யசுப்ரமணியன்.
“ ஆன்மிகம் மற்றும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையே நிலவும் இணக்கத்தையும், அதன் மூலம் தேசமுன்னேற்றத்தையும் இந்தக் கண்காட்சி மூலம் விளக்க இருக்கிறோம். தேசமெங்கும் பல்வேறு துறைகள் சார்ந்து சேவை செய்துவரும் 300 அமைப்புகளையும் அவர்களது பணிகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதாக இந்தக் கண்காட்சி அமையும்” என்கிறார்.
இந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரும் பத்திரிகை யாளருமான எஸ்.குரு மூர்த்தி இக்கண்காட்சி குறித்துப் பேசுகையில், “ இந்து ஆன்மிகம் என்பது எந்தகாலத்துக்கும் ஏற்ற சிந்தனைகளோடு வாழ்க்கை முறையை ஒருங்கிணைக்க வல்லது. இதை விளக்கவே இந்தக் கண்காட்சி.
விஞ்ஞானம் இயற்கையை எவ்வாறு நோக்குகிறதோ அப்படித்தான் இந்து ஆன்மிகப் பாரம்பரியமாக இயற்கையைக் கண்டுவந்தது. பெற்றோரையும் பெண்களையும் பண்புடன் நடத்த வேண்டும் என்று இன்றைய சமூகவியல் சொல்கிறது. நமது ஆன்மிகமும் அதையே போற்றியது. அப்பா, அம்மாவை மதிப்பதோ, அவர்களைச் சேவிப்பதோ இன்றைய தலைமுறையிடம் கிட்டத்தட்ட அருகிப்போன பழக்கமாகிவருகிறது. மேற்கு நாடுகளில் குழந்தைகள் பெற்றோரைப் புறக்கணித்துவிட்டதால் அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கு வந்துவிடுகிறது. அது நாட்டின் பொருளியல் நெருக்கடியாகவும் மாறிவிடுகிறது.
தாய், தந்தையரைக் குழந்தைகள் போற்றிப் பாதுகாக்கும் போது இந்தப் பிரச்சினையை அரசு ஏற்கும் தேவையும் இல்லை. இந்த அடிப்படைகளில், நவீன காலப் பிரச்சினைகளை இந்து ஆன்மிகம் எப்படி அணுகுகிறது என்பதை கருப்பொருட்களாக கொண்டு இந்தக் கண்காட்சியை நடத்த உள்ளோம்” என்கிறார்.
இந்தக் கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரம் பள்ளிகளிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கண்காட்சி நடக்கும் அத்தனை நாட்களிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இலவச மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழாவது இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி 2015
தேதி: பிப்ரவரி 3 முதல் 9 வரை, 2015
இடம்: ஏ.எம்.ஜெய்ன் கல்லூரி மைதானம்
மீனம்பாக்கம், சென்னை- 600 114
தொடர்புக்கு: 72990 69733
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT