Published : 01 Jan 2015 03:24 PM
Last Updated : 01 Jan 2015 03:24 PM
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் பாரதிய வித்யா பவனில் நான்கு நாள்களுக்கு நடந்த நாட்டிய விழாவில், பரதநாட்டியத்தின் பல்வேறு கூறுகளை விளக்கும் கருத்துரை விளங்கங்களும் மாலையில் இதழ் விரிக்கும் தாமரை (Lotuses Blossom – The Creative Process) என்னும் பொதுவான தலைப்பில் பல்வேறு கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளையும் மாளவிகா சருக்கையும் வெஸ்லின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரி கிருஷ்ணனும் ஒழுங்கு செய்திருந்தனர்.
`வாமதாரா – டு தி லைட்’ என்னும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியை அளித்தார் மாளவிகா சருக்கை. தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு பயணப்படும் ஒரு நதியைப் போல் அமைந்திருந்தது அவரின் நடனம். இசை, ஓவியம், சிற்பம் என கலையின் பல வகைகளையும் அரவணைத்துக்கொண்ட நாட்டியமாக அது மிளிர்ந்தது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக நீர்மட்டத்திற்கு வெளியே சூரியனின் வெளிச்சத்தை நோக்கி தன் இதழ்களை விரிக்கும் தாமரையை பக்தியின் குறியீடாக்கி விரிந்தது அவரின் நடனம்.
கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன மலையைத் தாங்கி உயிர்களைக் காக்கும் சம்பவம், சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாளின் பக்தி போன்றவற்றை ரசிகர்களுக்கு கடத்த, மாளவிகாவின் அபிநயமே போதுமானதாக இருந்தது. அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், ஓவியம், சிற்பம் போன்றவற்றைக் கொண்டு தத்ரூபமாக திரையில் ஒளிர்ந்த காட்சி வடிவமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தந்தன. டாக்டர் கோஸ்வாமியின் ஓவியங்களும் பேராசிரியர் சி.வி.சந்திரசேகரின் இசையமைப்பும் கண்களுக்கும் செவிக்கும் இன்பமளித்தன.
மகாவிஷ்ணுவின் உந்திக் கமலத்தில் தோன்றும் பிரம்மா, பத்மநாப சுவாமி கோயிலில் தாமரை மணாளனாக பொழியும் கருணை போன்றவற்றை லக் ஷ்மி பார்த்தசாரதி ஆத்ரேயா தமது நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
ஓவியம், இசை, நாட்டியத்தின் மூலம் சித்ரவாலி என்னும் காட்சிப் புத்தகத்தையே நம் கண்முன் கொண்டுவந்தார் ரமா வைத்யநாதன். கதக் நடனக் கலைஞர் அதிதி மங்கள்தாஸ், ஒடிஸி நடனக் கலைஞர் அருஷி முத்கல் ஆகியோரும் பரமாத்வாவின் பாதக் கமலத்தில் ஜீவாத்மா இணையும் தருணங்களை தங்களுடைய நாட்டியங்களின் வழியாக வெளிப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT