Published : 01 Jan 2015 03:29 PM
Last Updated : 01 Jan 2015 03:29 PM
செல்வங்களில் எல்லாம் குழந்தைச் செல்வமே மேலானதாக மனிதர்கள் நினைக்கிறார்கள். தங்களின் ரத்தமும் சதையுமாக இருக்கும் வாரிசுகள் பேர் சொல்லும் பிள்ளைகளாக விளங்க வேண்டும் என்ற ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமே இதற்குக் காரணம். அதனால் பிள்ளைகளுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்ய அவர்கள் தயங்குவதே இல்லை.
பிள்ளை பிறக்கும்போது நல்ல பெயரைச் சூட்ட வேண்டும் என்று அலசி ஆராய்ந்து ஒரு பெயரைக் கண்டுபிடிக்கிறார்கள். சூட்டப்பட்ட பெயருக்குத் தீங்கு நேரா வண்ணம் அவர்கள் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறைமகன் இயேசுவுக்கு பெயரைத் தேர்வு செய்யும் சிரமத்தைப் பரலோகத் தந்தை அவரது பெற்றோர்களுக்குக் கொடுக்கவில்லை.
கடவுளின் அற்புதத்தால் ஒரு மகன் பிறப்பான் என்ற செய்தியைக் கபிரியேல் தூதர் மரியாளிடம் அறிவிக்க வந்தபோது, அந்தப் பிள்ளைக்கு இயேசு எனப் பெயரிடும்படி தெரிவித்ததை விவிலியப் பதிவுகள் கூறுகின்றன. இவ்வாறு தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்பே தரப்பட்ட இயேசு என்ற பெயரையே பெற்றோர்கள் சூட்டினர். இயேசுவுக்கு முற்றப்பட்ட காலங்களில் வாழ்ந்த யூதர்கள் பலருக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்ததால், இது அவர்களுக்குப் பரிச்சயமான பெயர்.
விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தவிர, இதே பெயர்கொண்ட பன்னிரண்டு பேரைப் பற்றி யூத வரலாற்றாசிரியர் ஜோஸிபஸ் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் இறைமகன் இயேசுவின் பெயர் எப்படித் தனித்து விளங்கியது? மரியாளின் மகன் “நாசரேத்தூர் இயேசு” என அழைக்கப்பட்டார், அதனால் அவரை நாசரேத்திலிருந்து வந்த இயேசு என மக்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டார்கள்.
இதை இயேசுவின் சீடர்களான மாற்கும் மத்தேயுவும் எடுத்துக்காட்டுகிறார்கள். ‘கிறிஸ்து’ அல்லது இயேசு கிறிஸ்து என்றும் அவர் அழைக்கப்பட்டார். அவரைச் சிலுவையில் அறைந்து தொங்கவிட்டபோதுகூட ‘ யூதர்களின் அரசன் நாசரேத்தூர் இயேசு’ என்று விளம்பரப் பலகையைப் பொறித்து அவரது சிலுவையில் ஆணியடித்தார்கள். இந்தப் பெயரின் பொருள்தான் என்ன?
அபிஷேகம் செய்யப்பட்டவர்
‘கிறிஸ்து’ என்ற பெயர் கிறிஸ்டோஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்த ஒன்று. இதற்கு இணையான எபிரேய மொழிச் சொல், ‘மாஷீயாக்’ (மெசியா). இந்த இரண்டு சொற்களின் நேரடியான ஒரே பொருள் “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்பதாகும். தன் மகனையே கிறிஸ்துவாகக் கடவுள் பூமிக்கு அனுப்பும் முன், இங்கே கடவுளின் அருளைப்பெற்ற இறை தூதர்களுக்கும் அதற்குமுன் இயேசுவின் பெயர் சூட்டப்பட்டது மிகவும் பொருத்தமாக இருந்தது.
மோசே, ஆரோன், தாவீது அரசன் ஆகியோர் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாகவே வரலாற்றில் சாட்சிகளாகி நிற்கிறார்கள். கடவுள் கொடுத்த பொறுப்பையும் அதிகாரத்தையும் ஏற்று மக்களை வழிநடத்தும் கடவுளின் கருவிகளாக இருந்தார்கள். என்றாலும், இவர்கள் அனைவரைக் காட்டிலும் முன்னறிவிக்கப்பட்ட மெசியாவான இயேசுவே பரலோகத் தந்தையால் மனித இனத்துக்குத் தரப்பட்ட உயிருள்ள பலியாக இருந்தார்.
எனவேதான் இயேசுவுக்கு, “கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்” என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது (மத்தேயு 16:16). இனி இயேசுவின் பெயர் சூட்டு விழாவைக் காண்போம்.
பெயர் சூட்டு விழா
இறைதூதர் மோசேயின் திருச்சட்டப்படி குழந்தை பிறந்த 8-ம் நாள் இயேசுவின் பெற்றோர் குழந்தைக்குத் தூய்மைச் சடங்கு செய்வதற்காக எருசலேமில் இருந்த பரலோகத் தந்தையின் ஆலயமாகிய யகோவா தேவாலயத்துக்குத் தூக்கிச் சென்றார்கள். ஏனென்றால், “ஒவ்வொரு தலைமகனும் பரலோகத் தந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்” எனத் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அப்போது, எருசலேமில் இறைபக்தியில் மிகுந்த சிமியோன் என்ற முதியவர் இருந்தார். அவர் ஒரு நீதிமான்; இஸ்ரவேல் மக்களுக்கு நான் அனுப்பும் மீட்பரைக் கண்ட பிறகே நீ மரிப்பாய் என்று கடவுள் அவருக்குக் கனவில் தோன்றிக் கூறியிருந்தார். எனவே அந்த ஆறுதலைக் காண அவர் காத்திருந்தார். இறை சக்தியின் தூண்டுதலால் அத்தனை முதுமையிலும் அவர் ஆலயத்திற்கு வந்தார். அதே நேரத்தில், இயேசுவைத் தூக்கிக்கொண்டு தகப்பனும் தாயும் ஆலயத்தின் உள்ளே வந்தார்கள்.
சிமியோன், அவர்கள் அருகில் வந்து மரியாளின் கைகளில் இருந்த குழந்தை இயேசுவைத் தன் கையில் வாங்கிக்கொண்டு, பீடத்தின் முன்பாக ஏந்திப்பிடித்தார். கடவுளைப் போற்றி, “பேரரசராகிய எங்கள் தந்தையே, உமது வாக்குறுதியின்படி இப்போது உம் ஊழியக்காரனாகி என்னை மனஅமைதியோடு போக விடுகிறீர்கள்; ஏனென்றால், எல்லா மக்களும் காணும்படி நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்பை இந்தக் குழந்தையின் வடிவில் என் கண்கள் கண்டுகொண்டன. இந்த மீட்பே புறதேசங்களில் வாழும் மக்கள் மீது மூடியிருக்கிற இருளை நீக்கும் ஒளியாகவும், உம் மக்களாகிய இஸ்ரவேலருக்கு மகிமையாகவும் விளங்கப்போகிறது”(லூக்கா2: 29-32) என்றார்.
பிறகு மரியாளின் கையில் குழந்தையைக் கொடுத்து அவர்களையும் சிமியோன் ஆசீர்வதித்தார். குழந்தையின் தாயாகிய மரியாளை நோக்கி, “இதோ! இந்தப் பிள்ளை இஸ்ரவேல் மக்களில் பலருடைய வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும், இகழ்ச்சியான பேச்சுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகும். உன் உள்ளத்தையும் நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் செல்லும்” என்றார்.
சிமியோனின் இந்த வார்த்தைகள் சொல்ல முடியாத துன்பத்தால் மரியாளின் உள்ளத்தைத் துளைத்துச் சென்றன. எனினும் இறைவனின் ஏற்பாட்டை மனமுவந்து ஏற்றுக்கொண்ட இயேசுவின் தாய் இன்று ஆசிர்வதிக்கப்பட்ட பெண்மணியாக வழிபடப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT