Published : 22 Jan 2015 03:32 PM
Last Updated : 22 Jan 2015 03:32 PM
‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி’ பாடலைத் தமிழகத்தில் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் இதைப் பாடியவர் பெயர் அதிகம் பேரை அடையவேயில்லை. அவர்தான் கடுவெளிச் சித்தர். உலக வாழ்வின் நிலையாமையை அருமையான பாடலாகச் சொன்னவர் அவர்.
திருத்துறைப்பூண்டி வட்டத்துள் இருக்கும் கடுவெளியில் தோன்றிய இவரோ,“சித்தர் என்பவர் நம் சிந்தனையைத் தெளிவாக்கி இறைவனது அருளாற்றலைத் தந்து உண்மையான ஆத்மானந்தத்தைத் தருபவர்” என்று சொன்னார். மனிதன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களைச் சிலேடை நயத்தில் பாடல்களாகப் பாடி ஒரு புது வழியைக் காட்டியவர்.
கடுவெளியார் வழிபட்ட இறைவன்
வெட்டவெளியில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபோது பரமானந்தத்தைக் காட்டியமையால் இத்தலத்தின் சிவபெருமானைப் பரமானந்தர் என்று அழைத்தனர். சித்த புருஷர்கள் யாவரும் சிவனோடு உறைகின்ற தேவியை சக்தி கொடுப்பதற்காக வணங்கிவந்தனர். ஆனால் கடுவெளிச் சித்தர் அம்பிகையை வாலைக்குமரியாகவே வணங்கினார். இதனால் பரமானந்த ஈஸ்வரன் உறையும் தேவிக்கும் வாலாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது.
கடுவெளிச் சித்தருடைய ஜீவ சமாதி பரமானந்தர் ஆலயத்திற்குள் அமைந்திருப்பதால் அவரது ஜீவசக்தியும், சிவன் சக்தியும் சேர்ந்திருக்க, இந்தச் சித்தர் பூமியை நாடி வருபவர்கள் வாழ்க்கையில் குறைகள் அனைத்தும் தீர்கின்றன. கடுவெளியில் அவதரித்து அருகில் உள்ள ஆலத்தூரில் அடக்கமானதால் இரண்டு ஊர்களுக்குமே பொதுவான புனைபெயராக சித்தராலத்தூர் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது.
கல் பிளந்த அதிசயம்
சிவபெருமானை மனதில் எண்ணியபடியே பொதுமக்களை நல்வழிப்படுத்த போதனைகளில் ஈடுபட்டிருந்த கடுவெளியார், வாரம் ஒருமுறை வேதாரண்யம் தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று சன்னதி முன் அமர்ந்து சிவன் மீது மனமுருகிப் பாடுவார். அவரது பாடல் வரிகளால் மகிழ்ச்சி அடைந்த ஈஸ்வரன், தாம் கடுவெளிச் சித்தர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட பரமானந்தர் ஆலயக் கருவறையில் உள லிங்க ஆவுடையாரை இரண்டாகப் பிளந்து ஓர் அடையாளத்தைக் காட்டினார். அவை இன்றும் கடுவெளி ஆலய வாசலில் உள்ளதென நம்பிக்கை.
பயனுள்ள தத்துவ முத்துக்கள்
கலியுகத்தில் வாழ நேரும் எந்த ஜீவனும் துன்புறக் கூடாது என்பதற்காக அழகான தமிழில் ஆத்திசூடியைப் போல பயனுள்ள தத்துவங்களைக் கூறி உள்ளார். இவ்வரிகளைப் படித்தால் நமது மனமும் வாக்கும் உடலும் சில மாற்றங்களை அடையும்.
தூடணமாகச் சொல்லாதே! ஏடனை மூன்றும் பொல்லாதே!
நல்லவர் தம்மைத் தள்ளாதே! பொல்லாங்கு சொல்லாதே!
என்று அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டே போகிறார்.
கடுவெளியாரைத் தரிசித்தால்
ஸ்ரீபரமானந்தர் வாலாம்பிகை ஆலயத்துள் அமர்ந்திருக்கும் சித்தரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் அகலும். மோட்ச தீபத்தை இந்த ஆலயத்தைச் சுற்றி ஏற்ற. பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் வாழ்வில் சோதனைகளும் துயரங்களும் நீங்கப்பெறலாம்.
கடுவெளிச் சித்தரின் ஜீவ சமாதி இங்கே அமைந்துள்ளதால் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மனதில் எண்ணிய கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பவுர்ணமி தோறும் இத்தலத்தில் ஆண்களும் பெண்களும் விசேடமான சித்தர் போற்றி யாகம் மற்றும் அபிசேகம் ஆகியவற்றைச் செய்து அன்னப்படையலும் இட்டு தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதான சேவையும் செய்கின்றனர்.
திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் எடையூர் சங்கந்தி கடைத்தெரு இறங்கி மன்னார்குடி சாலையில் மூன்று கிலோமீட்டர் சென்றால் கடுவெளியை அடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT