Published : 01 Jan 2015 03:20 PM
Last Updated : 01 Jan 2015 03:20 PM
திருமலை கோவிந்தனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலுக்கும் பல்லாயிரம் யுகங்களாக தொடர்பு இருந்திருக்க வேண்டும். சுப்ரபாதம் மற்றும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை தன் தேன் தோய்ந்த குரலில் பாடி அவர் வெளியிட்டபோது, முதலில் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது கோவிந்தனை நினைக்கும் கணம் தோறும், எம்.எஸ். குரலில் பதிவான சுப்ரபாதமே பக்தர்கள் செவியில் ரீங்காரமிடுகிறது என்பது இன்றைய சத்தியம். திருமலையில் உள்ள ஏழு மலைகளிலும் அவ்வொலி இன்றும் எதிரொலித்து எம்.எஸ். சுப்புலட்சுமியின் இருப்பை பறைசாற்றுகிறது.
பத்து மொழிகள் அறிந்தவர்
மீரா பஜன்களை சொற்குற்றம், பொருட்குற்றம், இசைக்குற்றம் மட்டுமல்ல பக்தி குற்றம் கூட ஏற்படாமல் பாடி, தனது ஆருயிருக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களின் ஆருயிருக்கும் அவர் அமுது படைத்தார் என்றே சொல்லலாம். இவர் பத்து மொழிகள் அறிந்தவர் என்பதால், எம்மொழிப்பாடல் ஆனாலும் அது செம்மையான பாடலாகவே சீர் பெற்று இருந்தது.
‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலை கல்கி எழுத, எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைக்க எம்.எஸ். சுப்புலஷ்மி பாடி பதிவு செய்யப்பட்டது. இப்பாடலை சகாரா பாலைவனத்தில் நின்று கேட்டாலும் இந்த கீதம் சோலைவனத் தென்றலாக இனிமை காட்டும் என்பது உண்மை.
பாடல்களின் பொருள்ரசத்தை, குரலில் ஏற்றிக் காட்டுவதில் இவருக்கு இணை இவரே என்பதை காஞ்சி பரமாச்சாரியார் எழுதிய ‘மைத்ரீம் பஜத’ எனத் தொடங்கும் பாடலை ஐக்கிய நாடுகள் சபையில் பாடியபொழுது அறிய முடிகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது ஒன்றுக்கு வழங்கப்பட்ட தொகையான பதினோரு லட்ச ரூபாயை காஞ்சி மகா சுவாமிகள் மணி மண்டபம் கட்ட அளித்துவிட்டார் எம்.எஸ், அவரது ஆச்சாரிய பக்திக்கு இது ஒரு சான்று.
எல்லாரும் கேட்ட பாடல்கள்
அதிமுக்கியமாக ‘யாரோ இவர் யாரோ’ என்ற அருணாசல கவிராயரின் பாடலை ஊனையும் உயிரையும் உருக்கி வார்த்தாற்போல், தனது தனித்தன்மை வாய்ந்த குரலின் இனிமையைக் கொட்டிப் பாடியிருப்பதை தமிழ் ரசிகர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
நிறைவான வாழ்க்கை
ராஜாஜியின் எண்ண வண்ணத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடுவதற்காகவே எழுந்த ‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ என்ற பாடல், கர்னாடக சங்கீத முறையில் அமைந்திருந்தாலும், பட்டி தொட்டி எங்கும் பரவி பாமரர் முதல் படித்தவர் வரை ரசிக்கும் உயர்ந்த நிலையை பெற்றுவிட்டது.
அவரது கணவர் சதாசிவம் தான் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதன்மை ரசிகர். இந்த ரசிகருக்காக பாடிய பாடல்கள், லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு வந்தது. சங்கீதக் கலாநிதி, பாரத ரத்னா, ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டதால் மேலும் பொலிவடைந்தது என்பதே நிதர்சன உண்மை.
எண்பதுகளில் கச்சேரிகளைக் குறைத்துக் கொண்டு வந்த எம்.எஸ். தனது கணவரின் மறைவிற்குப் பிறகு கச்சேரி செய்வதை நிறுத்திக் கொண்டுவிட்டார். குறையொன்றுமில்லாத நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார் குஞ்சம்மா என்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT