Published : 15 Jan 2015 12:20 PM
Last Updated : 15 Jan 2015 12:20 PM
தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகை பொங்கல். தீபாவளி உட்பட அனைத்துப் பண்டிகைகளும் ஒரிரு நாட்களில் நிறைவுற, பொங்கல் பண்டிகை மட்டும் நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து இங்கே கொண்டாடப்படுகிறது. பூமியின் உயிர்களை எல்லாம் ரட்சிக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இது. குறிப்பாக விவசாயிகள் தங்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் காரணமான சூரியனை வணங்கும் நாள் இது.
சங்க காலத்தில், இதே பொங்கல் விழா, இந்திர விழா என்னும் பெயரில் 28 நாட்கள் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. அக்காலகட்டத்தில் இக்கொண்டாட்டத்திற்கு முன்னர் ஆடி மாதம் தொடங்கி, மழையை வேண்டி இந்திரனுக்கான பூஜைகள் செய்து விவசாயிகள் விரதம் இருப்பார்கள். மார்கழியின் கடைசி நாளே இந்த விரதத்தின் கடைசி நாள்.
இந்த விரதம் வேறு. பாவை நோன்பு வேறு. அன்றைய தினத்தை போகிப் பண்டிகை என்பார்கள். போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள். எனவே தீமை அழிந்து நன்மை பிறக்கும் நாள்.
பழையன கழிதலும்
அன்றைய தினம் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொலவடைக்கு ஏற்ப, பழைய குப்பைகளைக் கொளுத்துவார்கள். புதிய பொருட்களை வாங்கும் முன்னர் இல்லத்தை நன்கு சுத்தம் செய்வார்கள். அப்போது சேகரிக்கப்படும் குப்பைகளை வீதியில் கொண்டு குவித்து, அன்றைய தினம் விடியற்காலையில் சிறுவர்கள் தீ வைத்துக் கொளுத்துவார்கள். சிறிய டமாரத்தை அடித்து ஒலி எழுப்புவார்கள். அக்காலத்தில் காடுகளை ஒட்டியே சிறிய கிராமங்கள் இருக்கும். அங்குள்ள காட்டு விலங்குகள் விடியற்காலையில், வீட்டிற்கு வெளியே வரும் சிறுவர்களை தாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த டமார ஒலி.
புதுப் பானை, புது அரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைப்பார்கள். கூடவே முழு கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து ஆகியவற்றுடன் வெற்றிலை, பாக்கு, பழம் தேங்காய் ஆகியவையும் படைக்கப்படும். புது அரிசியை சமைத்து பொங்கிவரும் போது பொங்கலோ பொங்கல் பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்று குலவை இட்டு கோஷமிடுவார்கள்.
புது அரிசியை சமைக்கும்பொழுது எழும் மணத்தினைக் கொண்டே அதன் தரம் அறிவர் உழவர் பெருமக்கள். இது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா. எனவே அன்றைய தினம் புத்தாடை உடுத்துவார்கள். சூரியனை, சூரிய நாராயணனாகவும், சிவச் சூரியனாகவும் எண்ணிக் கொண்டாடுவார்கள்.
கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துதல்
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மாடுகளை நன்கு குளிப்பாட்டி சந்தனம் மற்றும் குங்குமம் இடுவார்கள். அவற்றின் கழுத்தில் அன்பின் மிகுதியால் மாலையிட்டு மணிகட்டி அழகு பார்ப்பார்கள். அன்றைய தினம் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு நடைபெறும். மங்காத செல்வம் தரும் மாட்டுப் பொங்கல் என்பார்கள்.
காணும் பொங்கல்
நல்லவற்றைக் காணும், `காணும் பொங்கல்`. மக்களில் ஒரு பிரிவினர் இதனைக் கண்ணுப்பிடி என்பார்கள். மஞ்சள் செடியின் இரு இலைகளை, நுனி ஒரே புறமாக இருக்கும்படி அமைத்து, அதில் முந்தைய நாள் செய்த சர்க்கரை பொங்கல், சாம்பார், வாழைப் பழம், சிறுசிறு கரும்புத் துண்டுகள், மஞ்சள் கலந்த சாதம், குங்குமம் கலந்த சாதம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக எடுத்து ஏழு முறை வரிசையாக வைக்க வேண்டும்.
அப்பொழுது கண்ணுப்பிடி வைத்தேன், காக்காபிடி வைத்தேன், கூடப்பிறந்த பிறப்பெல்லாம் நன்றாக இருக்க வேண்டும், வயிற்றில் பிறந்த பிறப்பு வளமுடன் வாழ வேண்டும் என்று அந்த சூரிய நாராயணனைப் பிரார்த்திக்க வேண்டும். பின்னர் குளித்து முடித்து, தலையில் பூச்சூடி மீண்டும் இறைவனை நல்வாழ்வை வரமாக தர வேண்டி பிரார்த்திக்க வேண்டும்.
சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பதற்கு ஏற்ப உழவே மக்களை உயிர் வாழ வைக்கும் தலையாய தொழிலாக இருக்கிறது. இத்தொழிலால் பெறப்படும் பயன் சாதி, மத, பேதமின்றி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது உலகின் அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.
கண்ணுப்பிடி வைக்கும் வைபவத்தை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதனை தொடங்குவதற்கு முன்னர், சிறு பசுமையான மஞ்சள் கிழங்கைக் கொண்டு வீட்டில் உள்ள பெரியோரிடம் கொடுத்து, நெற்றியில் புருவ மத்தியின் ஆரம்பத்தில் இருந்து உச்சி நெற்றிக்கு உரசி மேலும் கீழும் இழுக்க வேண்டும்.
அப்பொழுது, மாட்டோடையும் கன்னோடையும், வீட்டோடையும் வாசலோடையும், புள்ளையோடையும் குட்டியோடையும், சின்ன ஆம்படையானை கல்யாணம் பண்ணிக் கொண்டு, பெரியாம்படையானோட குடித்தனம் பண்ணி தீர்க்காயுசாக இருக்க வேண்டும் என்பார்கள். இதில் சின்ன ஆம்படையான் என்பது இவ்வுலகில் திருமணம் செய்து கொண்ட கணவன், பெரிய ஆம்படையான் என்பது பரமபத வாசனான விஷ்ணு. எப்போழுதும் இறை உணர்வோடு இருக்க வேண்டும் என்ற இந்திய பாரம்பரத்தை இந்நிகழ்ச்சி நினைவூட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT