Published : 22 Jan 2015 03:21 PM
Last Updated : 22 Jan 2015 03:21 PM
பரலோகத் தந்தை தனக்களித்த பணியை நிறைவேற்ற, தாம் யார் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த தனது முப்பதாவது வயதில் பொதுவாழ்க்கைக்குள் நுழைகிறார் இயேசு. அடுத்து வந்த மூன்று ஆண்டுகளும் பூமியின் வரலாற்றைப் புரட்டிப்போட்டவை.
திருமுழுக்கு பெற்றார்
பாவங்களை கைவிட்டு மக்கள் மனம்திரும்பவேண்டும் என்று யூதமக்களைக் கேட்டுகொண்ட யோவான் தீர்க்கதரிசி இஸ்ரவேல் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார். மனம் திருந்தி வந்த மக்களுக்கு யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்தார். அப்போது இயேசுவும் யோவானைத் தேடிவந்தார்.
இயேசு தன்னை நோக்கி வருவதைக் கண்ட யோவான் , “இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி! இவர் யாரென்று இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே நான் இவருக்கு தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்க வந்தேன். இவரோ தூய ஆவியால் உங்களுக்கு திருமுழுக்கு தருவார். இவரது காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்” என்றார்.
அப்போது “கடவுளின் தூய ஆவி புறாவைப் போல் வானிலிருந்து இறங்கி இயேசுவின் மீது இறங்கியது. “என் அன்புக்குரிய மகன் இவரே” என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. இதன்பிறகு இயேசு போதனைகளையும் அற்புதங்களையும் செய்யத் தொடங்கினார். இயேசு செய்த புதுமைகளைக் கண்ட மக்கள் அவர் செல்லும் இடம் எல்லாம் திரள்திரளாக ஒன்று கூடினர்.
இயேசு புதுமைகளோடு இறையரசைப் போதிக்கவும் தொடங்கினார். அவரது போதனைகளைக் கேட்டவர்கள் படிப்பறிவில்லா சாதாரண பாமர மக்கள். மீன்பிடிப்பவர்கள். அவர்கள் புரிந்து கொள்ளும்படி உவமைகள் வாயிலாக இறையரசை பரப்பினார். மக்களிடம் மனமாற்றத்தை உண்டாக்கினார்.
ஆனால் பாரம்பரியமான தங்கள் இறைக்கோட்பாட்டில் சீர்திருத்தம் செய்யமுயன்ற இயேசுவை யூதப்பழமைவாதிகள் எதிர்த்தனர். இயேசுவே உலகின் மீட்பர் என்று ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு கடினமாக இருந்தது. அவர்தான் மீட்பர் என்பதை அவரது சொல்லும் செயலுமே வெளிப்படுத்தி நின்றதால் எளியமக்கள் அவர்களை நோக்கிப் படையெடுத்தார்கள்.
ஆனால் ஊழலில் ஊறித்திளைத்து மதத்தை நிறுவனமாக்கியிருந்த பரிசாயர், சதுசேயர் ஆகிய யூதர்கள் அவர்களது குடும்பத்தையும், அவர்களது பொருளாதார பின்னணியையும் கொண்டு இயேசுவைக் கணித்தனர். அவற்றையும் மீறி இயேசுவில் ஒளிவீசிய இறைத்தன்மையையும் அவர்கள் அங்கீகரிக்க விரும்பவில்லை.
தங்களின் மதத்தின் சட்டதிட்டங்களிலும், சமுதாயப் பாரம்பரிய பழக்கவழக்கங்களிலுமே கடவுளைக் காண முற்பட்டனர். இதனால் இயேசுவை தங்கள் எதிரியாகக் கண்டார்கள். அவரை சூழ்ச்சியாக கொலை செய்ய விரும்பினார்கள். இதை இயேசுவும் அறிந்திருந்தார். தன் மரணத்தின் வழியாகவே இவர்களை மனம் திரும்பச் செய்யமுடியும் என்பதே இயேசுவை அனுப்பிய பரலோகத் தந்தையின் ஏற்பாடாக இருந்தது.
அழைப்பு விடுத்த இயேசு
ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவர், தன்னுடைய மரணத்திற்குப்பின் தன் குடும்பத்தின் தேவைகளை கவனிக்க ஏற்பாடுகள் செய்வார் அல்லவா? இயேசுவும் அதைத் தீர்க்கமாகச் செய்தார். இந்த பூமிப்பந்தில் இறையரசை நிறுவ அனுப்பப்பட்ட இயேசுவும் தம்முடைய மரணத்திற்குப்பின் இறையரசு தொடர்ந்து நிலைத்திருக்கச்செய்யும் பணியைத் தொடர தன் சீடர்களை தேர்வு செய்தார்.
இயேசுவின் போதனைகளையும் அவரது அற்புதங்களையும் பார்த்து அவரிடம் சீடராகச் சேர பலர் அவரைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால் தனது பாதை சுகமான பதவிகளைக் கொடுப்பதல்ல, கடுமையான முட்களும் பாறைகளும் நிறைந்த பாதை என்பதை உணர்ந்து பலர் விலகி ஓடினார்கள். மாறாக தன்னை நெருங்கி தன் இறைதன்மையை முழுமையாக உணர்ந்தவர்களை மட்டுமே அவர் சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.
இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்த யோவான் கைதுசெய்யப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன் ஒருநாள் தன் சீடர்கள் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியே இயேசு நடந்துபோவதைக் கண்டு, அவரை நோக்கி “இதோ! கடவுளுடைய ஆட்டுக்குட்டி. இனி அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்” என்றார். அவர் அப்படிச் சொன்னதும் அந்தச் சீடர்கள் இருவரும், இயேசுவுக்குப் பின்னால் போனார்கள்.
அவர்கள் பின்னால் வருவதை இயேசு திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்போது அவர்கள், “ரபீ (இதற்கு போதகரே என்று அர்த்தம் ), நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நீங்களே வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் அவர் தங்கியிருந்த இடத்தைப் போய்ப் பார்த்தார்கள், அன்று முழுவதும் அவருடன் தங்கினார்கள்; அன்று இயேசுவின் இறைத்தன்மையைக் கண்டுகொண்டார்கள்.
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவின் அழைப்பை ஏற்று அவர் தங்கியிருந்த இடத்திற்குப் போன இருவரில் ஒருவர் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா. அவர் முதலில் போய், தன்னுடைய சொந்த சகோதரனாகிய சீமோனைப் பார்த்து, “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்றார். (மேசியா என்றால் கிறிஸ்து என்பது பொருள்). பிறகு சீமோனை இயேசுவிடம் அழைத்துச் சென்றார்கள்.
இயேசு அவரைப் பார்த்தபோது, “நீ யோவானுடைய மகன் சீமோன்; இனி கேபா என அழைக்கப்படுவாய்” என்றார். (கேபா என்ற வார்த்தைக்கு பேதுரு என்பது பொருள் ).இயேசு மறுநாள் கலிலேயாவுக்குப் போக விரும்பினார். அப்போது பிலிப்புவைக் கண்டு, “என்னைப் பின்பற்றி வா” என்றார். அந்திரேயாவையும் பேதுருவையும் போலவே இந்த பிலிப்புவும் பெத்சாயிதா நகரைச் சேர்ந்தவர். இப்படி இயேசுவால் அழைக்கப்பட்டவர்களும், தாமாகவே அவரைப் பின்தொடந்த மானசீகச் சீடர்களும் நூற்றுக்கும் அதிகமாக இருந்தார்கள்.
யார் அந்தப் பன்னிருவர்?
கெத்சாமனே என்ற மலையுச்சிக்குச் சென்ற இயேசு இரவு முழுவதும் விழித்திருந்து அங்கே ஜெபம் செய்துவிட்டு, தம்முடைய சீடர்களிலிருந்து பன்னிரண்டு பேரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:
1.சீமோன் (இவருக்கு பேதுரு என்று பெயரிட்டார்), 2.அவருடைய சகோதரன் அந்திரேயா; 3.யாக்கோபு, 4.யோவான், 5.பிலிப்பு, 6. பர்த்தொலொமேயு, 7. மத்தேயு, 8.தோமா, 9.அல்பேயுவின் மகன் யாக்கோபு, 10. பக்திவைராக்கியமிக்கவன் என்றழைக்கப்பட்ட சீமோன், 11. யாக்கோபின் மகன் யூதாஸ், 12. துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோத்து என்பவர்களே.
அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில் அந்தப் பன்னிரண்டு பேரோடு நிறைய நேரம் செலவிட்டார்; சொல்லாலும் செயலாலும் அவர்களுக்கு நிறையக் கற்றுக்கொடுத்தார். இயேசு, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனைகளைக் கொடுத்தார், ஊழியத்தில் முழுமையான பயிற்சியையும் கொடுத்தார்.
தாம் மரித்து பரலோகத்திற்குப் போனபின் அவர்களுக்குக் கொடுக்கப்படவிருந்த மிக முக்கியமான பொறுப்புக்காகவே அவர்களைத் தயார்படுத்தினார். கடவுள் மீது நமக்கு விருப்பம் இருக்கலாம். அபிமானம் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவரது பக்தனாக இருக்க அல்ல, அவரது சீடனாக இருக்கவே உங்களை அழைக்கிறார். அதற்கு நீங்கள் தயாரா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT