Published : 08 Jan 2015 02:32 PM
Last Updated : 08 Jan 2015 02:32 PM
சிவனில் தோன்றி சிவனில் மறையும் ஐம்பூதங்களான நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகியவற்றை சுவாரசியமாக விளக்கிச் சொன்னது சிவமயம் நடனக் கோவை. கிருஷ்ணகான சபாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் எழுபது நடனமணிகள் பங்கு பெற்றனர். நடனத்தை இயக்கியது ஷீலா உன்னிகிருஷ்ணன்.
இவரது உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. பாடல் வரிகளின் மூலம் ஐம்பூதங்களையும் ஆட்டுவித்தார் டாக்டர் எஸ். ரகுராமன். இசை அமைத்தவர் ‘கடம்’ கார்த்திக். உறுத்தாமல் இயல்பாய் இருந்தது.
ஆட்டத்தின் சிறப்புக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. கங்கை, அலைகளாக மேடையில் ஓடியது போல இருந்தது. கமண்டலத்தில் இருந்து காவிரி ஓடுவதற்காக தட்டிவிட்ட காக்கை தத்ரூபம். அகஸ்தியர் சாது ரிஷியாக மேடையில் உலவியது பொருத்தம். வாசுகி பாம்பு மேடையில் மிரட்டியது.
மேடையை விட்டுக் கண்களை ஒரு கணம் நகர்த்தினாலும் காட்சி தவறிப்போன வருத்தம் ஏற்படும். ஏனெனில் இயற்கையை மேடையில் கொண்டாடுகிறார்கள். சிவன் ஆயுதங்களைப் பெற்ற விதத்தை காட்சி ஆக்கிக் காட்டியது அற்புதம்.
நடனக்கலை பார்வையாளர்களால் மட்டும்தான் பிரபலமடைய முடியும். ‘சிவமயம்’ இம்மாதம் இன்னும் ஐந்து இடங்களில் நடைபெற உள்ளது என்பது இனிய செய்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT